37. கார்மைகேல் சந்திப்பு
←← 36. அச்சகம் வாங்க விரும்பாமை
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்37. கார்மைகேல் சந்திப்பு
38. திருக்காளத்திப் புராணம் →→
440024தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 37. கார்மைகேல் சந்திப்புகி. வா. ஜகந்நாதன்
கார்மைகேல் சந்திப்பு
ஒரு சமயம் சிலா சாசன அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் தம்பதிகளைத் தம்முடைய அலுவலகத்திற்கு அழைத்தார்கள். அப்போது கவர்னராக இருந்தவர் கார்மைகேல் பிரபு. அந்தக் காரியாலயத்தில் பழைய விக்கிரகங்கள் பல இருந்தன. அந்த விக்கிரகங்களைப்பற்றிக் கவர்னர் ஏதாவது கேட்டால் தக்கபடி. பதில் சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் அலுவலகத் தலைவருக்கு எழுந்தது. எனவே, அந்த நேரம் ஆசிரியப் பெருமான் அங்கு இருந்தால் அவர் எல்லா விவரங்களையும் தெரிவிப்பார் என்று எண்ணி ஆசிரியரிடம் வந்து தம் கருத்தைத் தெரிவித்தார். ஆசிரியப் பெருமான் வருவதாக ஒப்புக்கொண்டார். அதேபோல் ஆளுநர் தம்பதிகள் சிலா சாசன அலுவலத்திற்கு விஜயம் செய்த நாள் அன்று ஆசிரியப் பெருமானும் அவர்களுடனே இருந்து அங்குள்ள விக்கிரகங்களைப்பற்றிய செய்திகளை எடுத்துச் சொன்னார். ஒருவர் அவர்களுக்கு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். இந்த விவரங்களை எல்லாம் கேட்டு ஆளுநர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது ஆளுநர் தம்பதிகளைப் படம் எடுக்க வேண்டுமென்று எண்ணினார்கள். பங்களாவின் முன்புறத்தில் படம் எடுக்க முயற்சி நடந்தது. ஆளுநர் தம்பதிகள் அமர்வதற்கு இரண்டு நாற்காலிகள், மற்றும் இரண்டு நாற்காலிகள் இருந்தன. அப்போது ஆளுநர் சுற்றுமுற்றும் பார்த்தார். "எனக்கு விவரங்களைச் சொன்ன பண்டிதர் எங்கே? அவரையும் அழைத்துவந்து இங்கே உட்கார வையுங்கள். நான் அவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்ளவேண்டும்" என்று சொன்னர். வேறு ஒரு நாற்காலி கொண்டுவந்து போடப்பெற்று, ஆசிரியர் வந்து உட்கார்ந்தவுடன் போட்டோ எடுத்தார்கள்.