2. இளமைக் கல்வி
←← 1. தமிழ்த் தாத்தா
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்2. இளமைக் கல்வி
3. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல் →→
439988தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 2. இளமைக் கல்விகி. வா. ஜகந்நாதன்
இளமைக் கல்வி
இவ்வாறு தமிழுக்கு ஒரு புது மலர்ச்சியை உண்டாக்கிய டாக்டர் ஐயரைத் தந்த பெருமை உத்தமதானபுரத்தைச் சார்ந்தது. ஓர் அரசர் அந்த ஊரை 48 அந்தணர்களுக்கு உத்தமதான மாகக் கொடுத்தார். இந்தப் பெரும் புலவரைத் தமிழ் உலகத்திற்கு அளித்துள்ள தன்மையினால் அப்பெயர் பின்னும் பொருளுடையதாக ஆயிற்று. ஐயர் அந்தணர் வகுப்பில் அஷ்டசகஸ்ரம் என்ற பிரிவைச் சார்ந்தவர். அவருடைய பாட்டனார் வேங்கடாசலையர் என்பவர். வேங்கட நாராயணையர் என்பவருடைய மூத்த குமாரர். வேங்கடாசலையருக்கு வேங்கட சுப்பையர், சீனிவாசையர் என இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். வேங்கட சுப்பையரின் குமாரர் தாம் டாக்டர் ஐயர்.
19-2-1855-ஆம் நாளன்று இந்தப் புலவர் பெருமான் திரு அவதாரம் செய்தார். அந்த ஆண்டுக்கு ஆனந்த வருஷம் என்று பெயர். அந்த ஆண்டு, தமிழுக்கு ஆனந்தம் தரும் இந்தப் பெரிய வரை உதவித் தன் பெயருக்குரிய புதுப் பொருளை உடையதாயிற்று.
இளம் பருவத்தில் பாட்டனாரிடத்தில் இவர் அரிச்சுவடி படித்தார். அதன் பிறகு துதி நூல்களை எல்லாம் கற்றுக்கொண்டார். வேங்கடசுப்பையருடைய தாயாரின் அம்மான், கனம் கிருஷ்ணையர் என்ற இசைப் பெரும் புலவர். அவர் சங்கீத மார்க்கங்களாகிய கனம், நயம், தேசிகம் என்னும் வகைகளுள் கனமார்க்கத்தைப் பயின்று அதில் மிக்க தேர்ச்சி பெற்றார். வேங்கட சுப்பையர் அவரிடம் இசை பயின்றார். தம்முடைய குமாரரும் இசை பயின்று பெரிய சங்கீத வித்துவானாக வேண்டுமென்று கனவு கண்டுவந்தார். ஆனால் இந்தப் பெரியவருக்கு இசையில் ஓரளவு விருப்பம் இருந்தாலும் இவருடைய எண்ணமெல்லாம் தமிழை நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றே இருந்தது.
அரியலூரில் வாழ்ந்து வந்த வேங்கட சுப்பையர் அதன் பக்கங்களிலுள்ள பல ஊர்களுக்குச் சென்று இராமாயணப் பிரசங்கம் செய்வார்; இராமாயண நாடகக் கீர்த்தனங்களைப் பாடிப் பிரசங்கம் செய்வார். அதனால் ஆங்காங்கு அவருக்குப் பொருள் உதவி கிடைத்தது. அந்த வகையில் தம்முடைய பிள்ளையும் இசையோடு கூடிய பிரசங்கம் செய்து வாழ்க்கையைச் செவ்வையாக நடத்துவார் என்று நம்பியிருந்தார். டாக்டர் ஐயர் நாராயண ஐயர், சாமிநாதையர் என்பவர்களிடம் தம் இளமைக் கல்வியைப் பெற்றார், அரிச்சுவடி, எண்சுவடி முதலியவைகளையே அவர்களிடம் கற்றுக்கொண்டார். மணலில் எழுதுவதும், ஏட்டில் எழுதுவதும் அக்காலத்து வழக்கமாக இருந்தன. சாமிநாதையர் என்னும் ஆசிரியர் இசையிலும் வட மொழியிலும் தேர்ந்தவர். அவர் சில சிறிய வடமொழி நூல்களே இவருக்குக் கற்பித்தார். இவருடைய சிறிய தகப்பனார் தம் வீட்டிலேயே இவருக்குப் பாடம் சொல்லித் தந்தார்; சங்கீதப் பயிற்சியும் செய்து வைத்தார். அந்தச் சின்னப் பிராயத்தில் இந்தப் பெரியாருக்குச் சித்திரம் எழுதுவதில் விருப்பம் இருந்தது. காகிதங்களில் பூக்களைப் போலக் கத்தரித்து அமைக்கும் பழக்கம் உண்டாயிற்று. கற்பனை சிறந்த கவிஞர்கள் இயற்கையின் எழிலைக் கண்டு அநுபவித்து அப்படியே அதைக் கவிதையில் வடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதுபோல, இந்தப் பெரியாரும் இயற்கையைக் கண்டு கண்டு இன்புற்றார்.
இப்பெருமானுடைய தாயாரின் தந்தையாகிய கிருஷ்ண சாஸ்திரிகள் சிறந்த பக்திமான்; எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக்கொண்டிருப்பார். தம் பேரரிடம், எதை மறந்தாலும் சிவநாமத்தை மறக்காதே என்று உபதேசம் செய்தார். அக்காலம் முதல் இப்புலவர்பிரான் இறுதிக் காலம் வரையில் சிவ நாமத்தை மறக்கவில்லை. வேலை ஒழிந்த நேரங்களில் எல்லாம் பல ஆயிரம் தடவை சிவநாமத்தை உருப்போடுவது வழக்கம்.
அந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. இந்தப் பெரியவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று தந்தை எண்ணினார். ஆனால் அதில் இவருக்கு உள்ளம் செல்லவில்லை. இசையில் பயிற்சி உடையவர்கள் அக்காலத்தில் தெலுங்கு கற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அவ்வாறே இவருக்குத் தெலுங்கு கற்றுக்கொடுக்க ஏற்பாடாயிற்று. ஆனால் அதிலும் இவருக்கு மனம் செல்லவில்லை.
அக்காலத்தில் அந்தப் பக்கங்களில் கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனர் சரித்திரக் கீர்த்தனை எங்கும் பரவியிருந்தது. இந்த இளைய மாணாக்கருக்கு அதில் ஈடுபாடு. அதிலுள்ள கீர்த்தனைகளிற் பெரும்பாலும் பாடம் ஆயின. இவரே பாடிப் பாடி இன்புறுவார். அரியலூரில் இவருடைய தந்தையார் இருந்தார். அப்போது சடகோபையங்கார் என்பவருடன் பழக்கம் உண்டாயிற்று. அவர் பூரீவைஷ்ணவர்: கவிஞரும்கூட; தமிழை ஓரளவு நன்றாக பயின்றவர். அவரிடத்தில் ஆசிரியப் பெருமான் சில காலம் தமிழ் கற்றுக் கொண்டார். பாடம் சொல்வதில் சடகோபையங்கார் மிகவும் ஊக்கம் உள்ளவர்; நயமாகப் பொருளைச் சொல்பவர். பாகவதம், கம்பராமாயணம் முதலிய நூல்களை நன்றாகச் சொல்லித் தருவார். ஆசிரியப் பெருமான் தம் இளமைப் பருவத்தில் அந்தப் பெரியவரிடம் பாடம் கேட்டதனால் தமிழில் மிக்க சுவை உண்டாயிற்று.
இளம் பருவத்தில் அந்தணருடைய வழக்கப்படி இவருக்கு உபநயனம் நடைபெற்றது. அப்போது இவருக்கு வேங்கடராம சர்மன் என்று நாமகரணம் செய்தார்கள். அந்தப் பெயராலேயே இவரை அழைத்து வந்தார்கள். எனினும் அந்தப் பெயர் இவருடைய முன்னேரின் பெயராய் இருந்ததனால் உறவினர்கள் அதைச் சொல்லி அழைக்காமல் 'சாமா என்று சொல்லி அழைத்தார்கள். திருவேரகத்திலுள்ள சுவாமிநாதன் என்பதையே சுருக்கி அப்படி அழைப்பது வழக்கம்.
குன்னம் என்ற ஊரிலுள்ள சிதம்பரம் பிள்ளையிடம் சில காலம் பாடம் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அங்கே சில சிறிய நூல்களையும், திருவிளையாடல் புராணத்தையும் பாடம் கேட்டார். பல தனிப் பாடல்களைப் பாடம் பண்ணிக்கொண்டு, அவற்றின் சுவையில் ஆழ்ந்தார். .
கார்குடியிலிருந்து வந்திருந்த கஸ்தூரி ஐயங்கார் என்பவர் இப்பெருமானுக்குத் தமிழில் இருந்த தேர்ச்சியையும், ஆர்வத்தையும் அறிந்து, தம் ஊருக்கு வந்து தங்கினால் தமக்குத் தெரிந்தவற்றையும் சொல்லித் தருவதாகச் சொன்னார். அப்படியே அந்த ஊருக்குத் தந்தையாருடன் இவர் சென்றார். கஸ்தூரி ஐயங்கார் இவருக்குச் சில நூல்களைப் பாடம் சொன்னார். அந்த இளம் பருவத்திலேயே செய்யுள் இயற்றும் பயிற்சி இவருக்கு ஏற்பட்டது.
இளம் பருவத்திலேயே திருமணம் செய்து வைப்பது அந்தக்கால வழக்கமாதலின், இவருக்குத் தக்க இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற கவலை இவருடைய தந்தையாருக்கு உண்டாயிற்று. 16—6—1868-ஆம் நாளன்று இவருக்கும் மதுராம்பாள் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்தது.
செங்கணம் சின்னப்பண்ணை விருத்தாசல ரெட்டியார் என்பவர் யாப்பருங்கலக்காரிகையை நன்றாகப் படித்தவர். அவரிடம் இவர் பாடம் கேட்டார். ரெட்டியார் பாடம் சொல்லும் போது பல புலவர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வார். அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்து, அக்காலக் கம்பர் என்று எல்லோராலும் போற்றப்பெற்ற மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் புகழ் எங்கும் பரவியிருந்தது. விருத்தாசல ரெட்டியார், அவர் பெருமையைப் பற்றி அடிக்கடி பேசுவார். அதனைக் கேட்கக் கேட்க இவருக்கு, “அந்தப் பெருமானிடம் போய்ப் பாடம் கேட்கும் வாய்ப்பு வருமா? இறைவன் திருவருள் அதைக் கூட்டி வைக்குமோ?” என்று எண்ணினார். பல பல இடங்களில் சில சில நூல்களைக் கேட்டும் இவருக்குத் தமிழ்ப் பசி தீரவில்லை. அது மேலும் மேலும் வளர்ந்து வந்தது. இவருடைய பெரும் பசியைப் போக்குவதற்குரியவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களே என்று சிலர் எடுத்துச் சொன்னார்கள். எப்படியாவது அவரிடம் போய்ப் பயின்றால், இவர் நன்றாகக் கற்று முன்னுக்கு வரலாம் என்று பலரும் சொன்னதைக் கேட்டு, இவருடைய தந்தையாருக்கும் இவரைப் பிள்ளையவர்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது அவசியம் என்ற எண்ணம் உண்டாயிற்று. பிள்ளையவர்கள் அப்போது மாயூரத்தில் இருந்ததனால், இவர் மாயூரத்தில் போய்ப் படிக்க வேண்டுமே! அதற்கு வேண்டிய வசதிகளுக்கு என்ன செய்வது?" என்று எண்ணிக் கவலை கொண்டார். ஆனால் இறைவன் திருவருள் செய்வான் என்ற தைரியம் இருந்தது. எப்படியாவது பிள்ளையவர்களிடம் இவனைச் சேர்த்துவிட்டால் மேலும் மேலும் முன்னுக்கு வருவான். தமிழ்க் கல்வியில் சிறந்த புலவனாகலாம் என்ற நம்பிக்கை மாத்திரம் இருந்தது. ஆகவே, எப்படியாவது மாயூரத்திற்குப் போகலாம் என்று முடிவு செய்தார். அப்போது கோபாலகிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் வாழ்ந்து வந்தார். தமிழ் இலக்கியத்தைப் படிப்பதோடு பாரதியாரிடம் இசையையும் பயிலச் சொல்லலாம் என்ற விருப்பம் தந்தையாருக்கு இருந்தது. ஆகவே, எப்படியாவது மாயூரத்திற்குப் போய்ச் சேருவது என்ற தீர்மானம் செய்தார்.