27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம்
←← 26. சென்னையை அடைதல்
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம்
28. தியாகராச வீலை →→
440014தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம்கி. வா. ஜகந்நாதன்
போலீஸ் அதிகாரியின் மனமாற்றம்
திருவேட்டீசுவரன் பேட்டையில் ஜயசிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கொஞ்சம் முரட்டுச் சுபாவம் உடையவர். ஆசிரியப் பெருமான் வாழ்ந்து வந்த தெருவில்தான் அவர் இருந்தார். யாரோ ஒருவர் அவரிடம் காவடிச் சிந்தையும், திருப்புகழையும் பாடியிருக்கிறார் அவற்றிலுள்ள பெண்களின் வருணனைகளைக் கேட்டு அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. “இவற்றை எல்லாம் பாடிக் குழந்தைகளின் மனத்தைக் கெடுத்து விடுகிறார்கள். இனிமேல் இத்தகைய புத்தகங்கள் வெளிவராமல் தடுத்துவிட வேண்டும்” என்று பேசிக்கொண்டிருந்தார். இந்தச் செய்தியைச் சில அன்பர்கள் ஆசிரியரிடம் வந்து சொன்னார்கள். ஒருநாள் அந்தப் போலீஸ் அதிகாரியைப் பார்க்க இவர் சென்றார்.
“எங்கே இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என்று அந்த அதிகாரி வியப்புடன் கேட்டார். “நீங்கள் மிகவும் நல்லவர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆபாசமான விஷயங்களை எல்லாம் நாம் அதிகமாகப் பரவவிடக்கூடாது என்ற எண்ணம் தங்களுக்கு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய நாகரிகம் தெரிந்தவர்களுக்குத்தான் இந்த விஷயம் தெரியும். ஆனால் இலக்கியங்களின் திறத்தில் நாம் பார்க்க வேண்டிய முறையே வேறு. சங்க காலத்திலிருந்து அவற்றைப் புலவர்கள் பாடி வருகிறார்கள். செய்யுளாக இருப்பதால் அவற்றைப் படிப்பவர்களுக்கு இலக்கிய இன்பம் தோன்றுமே தவிர, ஆபாசம் தோன்றாது.” என்று ஆசிரியர் பேசத் தொடங்கினார்.
“சில பைத்தியக்காரப் புலவர்கள் கன்னா பின்னா என்று பாடிக் குழந்தைகளின் உள்ளத்தைக் கெடுத்துவிடுகிறார்கள். அத்தகைய ஆபாசப் பாடல்களைத் தடுத்துவிடத் தாங்கள் எனக்கு யோசனை சொன்னால் உபகாரமாக இருக்கும்” என்று அந்த அதிகாரி சொன்னார். அதைப்பற்றித்தான் உங்களிடம் பேச வந்திருக்கிறேன். நிதானமாகப் பேசலாம் அல்லவா?” என்றார் ஆசிரியர். “பெரியவர்களாகிய நீங்களே வந்திருக்கிறீர்கள். உங்களோடு பேசுவதைவிட வேறு வேலை என்ன இருக்கிறது?” என்றார் ஜயசிங்.
“என்னிடம் சில புலவர்கள் வந்து தங்களைத் தமிழுக்கு விரோதி என்று சொன்னார்கள். நீங்கள் அப்படி இருக்கமாட்டீர்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். பழைய இலக்கியங்களைக் கொளுத்திவிட வேண்டுமென்று நீங்கள் சொன்னதாகச் சொன்னார்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று நான் எண்ணினேன். அதனால்தான் உங்களை நேரே பார்த்துப் பேசலாம் என்று வந்தேன்” என்று சொன்னர் இவர்.
“எல்லாப் புலவர்களுக்கும் என்மேல் கோபம் இருக்கலாம். பெண்களை ஆபாசமாக வருணிக்கிற காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகிய பாடல்கள் பரவக் கூடாது என்பது என் எண்ணம்” என்றார் அந்த அதிகாரி.
காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். அவற்றை மட்டும் படிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால், அவ்வாறு ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது சுவைகளில் சிருங்காரம் என்பது ஒன்று. வடமொழி நூல்களிலும் அந்தச் சுவை உண்டு. பெண்களின் வருணனை கூடாது என்றால் எத்தகைய இலக்கியங்களும் இருக்க முடியாது. நான் மிகப் பழைய இலக்கியங்களாகிய சங்க நூல்களை முதல்முதலாக வெளியிட்டிருக்கிறேன். அதனால்தான் தமிழ்நாடு என்னிடத்தில் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அவற்றில் கூடப் பெண்களின் வருணனை வருகிறது. அவற்றைப் படிக்கும் போது இலக்கியச் சுவையே தெரிகிறது. நீங்கள் அவற்றை எல்லாம் பொசுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். வடமொழியில் உள்ள நூல்களும் அப்படித் தான், இவ்வாறு பார்த்தால் தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு வேறு ஒன்றும் கிடைக்காது" என்றார்.
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லாப் புத்தகங்களும் ஆபாசமானவை என்றல்லவா தோன்றுகிறது?" என்றார் அதிகாரி.
"ஆபாசம் என்பது வேறு. ரச உணர்ச்சி வேறு. மனித வாழ்க்கையில் காதல் மிக முக்கியமான உணர்ச்சி. காவியங்களும், புராணங்களும் காதல் உணர்ச்சியைப் பற்றிச் சொல்கின்றன. ஆண்டவனைக் காதலனாக வைத்து, தங்களைக் காதலிகளாக வைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியிருக்கிறார்கள். அங்கெல்லாம் சிருங்கார ரசம் இருக்கும்."
"அப்படியா? தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் சிருங்கார ரசம் இருக்கிறதா?" என்று கேட்டார் ஜயசிங்.
தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகிய எல்லாவற்றிலும் இருக்கின்றன. ஆண்டவனிடத்தில் உள்ள பக்தியைக் காதலாக மாற்றி அவற்றைப் பாடியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஆபாசம் என்று தள்ள முடியாது" என்றார் இவர். "இதெல்லாம் எனக்குப் புதிதாக இருக்கிறது" என்று போலீஸ் அதிகாரி சொன்னார்.
நீங்கள் இவற்றை எல்லாம் நன்றாக ஆராய்ந்திருக்க மாட்டீர்கள். கிராமங்களில் பலர் கச்சு அணிவதில்லை. காய்கறி விற்கிறவர்கள், பால் தயிர் விற்கிறவர்கள், இன்னமும் பலர் அப்படி வருகிறார்கள். அவர்கள் தோற்றத்திலே ஆபாசம் இல்லை. பார்க்கிறவர்களின் கண்களில் தான் ஆபாசம் இருக்கிறது."
"நீங்கள் சொல்வது உண்மைதான்" என்று ஒருவாறு இறங்கிவந்தார் அந்த அதிகாரி.
“மற்றொரு விஷயம். நீங்கள் கோவிலுக்குப் போகிறீர்கள் அல்லவா?” என்று கேட்டார் ஆசிரியர். “போவது உண்டு" என்றார் ஜயசிங். "அங்குள்ள மூர்த்திகளை, கோபுரங்களிலுள்ள சிற்பங்களைப் பார்த்தது உண்டா? அந்தச் சிற்பங்களில் பெண்மையைக் காட்டுகின்ற அங்கங்கள் பெரியனவாக இருந்தாலும் யாரும் விகார உணர்ச்சி கொள்வதில்லை. படுத்திருக்கும் தாயின் மார்பில் குதித்து விளையாடுகிற குழந்தைக்குத் தவறான உணர்ச்சி உண்டாவதில்லை. இது இன்று நேற்று வந்தது அல்ல. நீங்கள் சொல்லுகிறபடி திருப்புகழையும், காவடிச் சிந்தையும் அதில் வரும் பெண்களின் வருணனைக்காக நீக்கத் தொடங்கினால் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும், வடமொழி இலக்கியங்கள் அனைத்தையும் கடலில் கொண்டுபோய்ப் போட வேண்டும். கோவில்களில் உள்ள விக்கிரகங்களை உடைத்தெறிய வேண்டும்."
"ஐயா, ஐயா! அப்படிச் சொல்லக் கூடாது, இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல் ஏமாந்து போனேன். நல்ல சமயத்தில் இந்த உண்மையைச் சொன்னீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி" என்றார் ஜயசிங். அதன் பின்பு அந்தப் போலீஸ் அதிகாரிக்கு இருந்த தவறான எண்ணம் போய்விட்டது.