31. பாரதியார் பாடல்
←← 30. தோடாப் பெறுதல்
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்31. பாரதியார் பாடல்
32. வீட்டை விலைக்கு வாங்கியது →→
440018தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 31. பாரதியார் பாடல்கி. வா. ஜகந்நாதன்
பாரதியார் பாடல்
1906-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியப் பெருமான் மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றதைப் பாராட்டி ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பாரதியார் வந்திருந்தார். அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். இந்த விழாவுக்கு வந்திருந்த அவர் மூன்று பாடல்களை எழுதி வாசித்தார். அங்கேயே ஒரு தாளில் அந்த மூன்று பாடல்களையும் ஒரு பென்சிலினால் எழுதினார்; அந்தத்தாளை நான் பார்த்திருக்கிறேன், அந்தப் பாடல்கள் வருமாறு:
1. செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
பேருவகை படைக்கின் றீரே?
2. அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி அறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?
3. நிதியறியோம், இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்றுமனம் வருந்தற்க,
குடந்தைநகர்க் கலைஞர் கோவே,
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.