v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
←iv. கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி
சேதுபதி மன்னர் வரலாறு ஆசிரியர் எஸ். எம். கமால்v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி→
418951சேதுபதி மன்னர் வரலாறு — v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதிஎஸ். எம். கமால்
V. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
கி.பி.1740ல் பதவியேற்ற இவரது ஆட்சியிலும் தஞ்சை மராத்தியர் படையெடுப்பு தொடர்ந்தன. வழக்கம்போல சேதுபதியின் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர். அந்தப் படையெடுப்பினைப் படுதோல்வி அடையச் செய்தார். இந்த மன்னரது ஆட்சியில் வேறு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இல்லையென்றாலும் இந்த மன்னர் சமயப் பொறை காத்து சேதுநாட்டின் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களது தொழுகைப் பள்ளிகளுக்கும், தர்ஹாக்களுக்கும் பல நிலக்கொடைகளை வழங்கினார். அவைகளில் குறிப்பிடத்தக்கவை ஏர்வாடி, இராமேஸ்வரம், இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய ஊர்களில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்கள் ஆகும்.
சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு ஆண்வாரிசு இல்லாததால் கட்டையத் தேவரின் உடன் பிறந்த சகோதரர் மகன் இராக்கத் தேவரைத் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் சேதுபதியாக நியமனம் செய்தார். இந்த மன்னர் திறமையற்றவராக இருந்ததால் தளவாய் இவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் அத்தையின் பேரனாகிய செல்லமுத்துத் தேவரை கி.பி.1748ல் சேதுபதி மன்னராக்கினார்.
இந்தத் தளவாய் சேதுநாட்டின் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்ததால் தளவாயின் நடவடிக்கைகளைத் தடைப்படுத்தவோ. மாற்றி அமைக்கவோ அப்பொழுது இராமநாதபுரம் அரண்மனையில் தகுதியான ஆள் எவரும் இல்லை. இதனால் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் மன்னருடைய அனுமதி இல்லாமலேயே சேதுநாட்டுப் படைகளைத் திருநெல்வேலி சீமைக்கு நடத்திச் சென்று பெரும்பான்மையான பாளையக்காரர்களைச் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்டிருக்குமாறு செய்தார். அப்பொழுது அவரது படைகள் தங்கியிருந்த இடம் சிவகிரி நகருக்கு அருகில் இராமநாதபுரம் என்ற பெயருடன் இன்றும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மதுரைக் கோட்டையை ஆக்கிரமித்திருந்த நபீகான் கட்டாக், ஆலம்கான், முடேமியா, ஆகிய பட்டாணியத் தலைவர்களை வெளியேற்றி விட்டு மதுரை நாயக்க அரசின் பரம்பரையின் இளவலான விஜய குமார பங்காரு திருமலையை கி.பி.1751ல் மதுரை மன்னராக்கிவிட்டு இராமநாதபுரம் திரும்பினார். இவர் திருப்புல்லாணித் திருக்கோயிலுக்கு வந்து செல்லுகின்ற பயணிகளுக்காகத் திருப்புல்லாணியில் சத்திரம் ஒன்றை அமைத்து உதவினார். இந்த சத்திரத்தின் பயன்பாட்டிற்காக அண்மையில் உள்ள காஞ்சிரங்குடி என்ற கிராமத்தைச் சேதுபதி மன்னரிடமிருந்து தானமாகப் பெற்றார். இவர் எப்பொழுது பதவி விலகினார் அல்லது இறந்தார் என்பதை துலக்கும் ஆவணங்கள் எதுவும் இல்லை.