Get it on Google Play
Download on the App Store

பிற்காலச் சோழர் வரலாறு

 

 

←பல்லவப் பேரரசு

தமிழ்நாடும் மொழியும்  ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமிபிற்காலச் சோழர் வரலாறு

பிற்காலப் பாண்டியர்→

 

 

 

 

 


437169தமிழ்நாடும் மொழியும் — பிற்காலச் சோழர் வரலாறுபேரா. அ. திருமலைமுத்துசாமி

 

6. பிற்காலச் சோழர் வரலாறு 
சோழர் எழுச்சி
சங்ககாலத்தில் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கிய சோழர்கள் பிற்காலத்தில் பல்லவர்க்குக் கீழ் குறுநில மன்னர்களாகவும் அதிகாரிகளாகவும் வாழ நேரிட்டது. பல்லவர் காலத்தில் இவ்வாறு அழிந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலே மறுபடியும் தம் பண்டைச் சிறப்பை நிலை நாட்டக் கிளர்ந்து எழலானார்கள். பிற்காலச் சோழப்பேரரசை நிறுவியவன் விசயாலயன் என்பவனாவான். பிற்காலச் சோழர்க்குத் தலைநகர் தஞ்சை மாநகராகும். விசயாலயன் காலம் கி. பி. 850-71 என்பதாகும். பல்லவர் வீழ்ச்சி, தலைதூக்கும் சோழர்க்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது. கி. பி. 860-இல் முத்தரையரிடமிருந்தோ , பல்லவரிடமிருந்தோ விசயாலயன் தஞ்சையைக் கவர்ந்தான். முத்தரையர் என்பவர் பாண்டியர்க்கு நண்பராவர். இந்நிலையில் பல்லவர்-பாண்டியர் போர் அடிக்கடி நிகழ்ந்து வந்தது. இதனால் சோழ மன்னனாகிய விசயாலயனுக்கு நன்மையே விளைந்தது. மேலும் சோழப் பேரரசை ஏற்படுத்தவும் இப்போர் பயன்பட்டது. 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே'. கி. பி. 880-இல் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் பல்லவ மன்னன் அபராசிதவர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இப்போரில் பாண்டியன் தோற்றாலும், அதனால் நன்மை அடைந்தது பல்லவன் அல்ல; சோழனே. பாண்டியன் வீழ்ச்சி சோழர் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடையை நீக்கியது.


 முதலாம் ஆதித்தன் (871-907) 
ஆதித்தன் என்பவன் விசயாலயன் மகன் ஆவான். எனவே ஆதித்தன் தன் தந்தைக்குப் பின் தரணி ஆளத் தொடங்கினான். திருப்புறம்பியப் போரில் இவன் பல்லவனுக்கே உதவி செய்தான். பின்னர் வெற்றியடைந்த பல்லவனிடமிருந்து சில நாடுகளைச் சோழன் பரிசாகப் பெற்றான். திருப்புறம்பியப் போரினால் பாண்டியர்கள் மட்டுமல்ல, பல்லவர்களும் தம் வலி குன்றலானார்கள். இக்காலம் கி. பி. 893 ஆம். பின்னர் தன் வலியை நன்கு பெருக்கிய ஆதித்தன் திடீரெனத் தனியரசு முரசு கொட்டினான். காஞ்சியும் தொண்டை மண்டலமும் சோழன் கரத்தில் தவழலாயின. கொங்கு நாடு சோழன் அடியில் வந்து கிடந்தது. கொங்கு நாட்டு மன்னர்கள் சோழனுக்கு வெற்றிச் சிந்து பாடினர். ஆதித்தனின் 27-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு ஒன்று திருக்கழுக்குன்றத்தில் காணப்படுகிறது. அதிலிருந்து இவன் சைவன் எனத் தெரிகிறது. இவன் சேரன் தாணுரவியோடு நட்புக்கொண்டான். சேரன் பாண்டிய - சோழர் போரில் சோழருக்குப் பல உதவிகள் புரிந்தான்.
முதலாம் பராந்தகன் 
பராந்தகன் என்பவன் ஆதித்த சோழனின் மகனாவான். எனவே பராந்தகன் ஆதித்தனுக்குப் பின்பு சோழ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். நாட்டைப் பெருக்க இவன் தன் தந்தையின் தந்திரத்தையே மேற்கொண்டான். வடக்கே பல்லவர்களையும், பாணரையும், வைதும்பரையும் அடக்கித் தன்னடிப்படுத்தினான். மேற்கே சேரரோடு உறவு கொண்டான். தெற்கே இவன் காலத்தில் பாண்டிய மன்னனாக இருந்தவன் இரண்டாம் இராசசிம்மனாவான். பராந்தகன் கி. பி. 910-இல் மதுரையைக் கவர்ந்தான்; “மதுரை கொண்ட சோழன்" எனப் பெயர் கொண்டான். தோற்ற இராசசிம்மன் வாளா இருக்கவில்லை. ஈழ நாட்டுக்கு ஓடினான். ஈழமன்னனைக் கெஞ்சினான். ஈழநாட்டுப்படையோடு சோழனைத் தாக்கினான். போர் வெள்ளூரில் நடைபெற்றது. போரில் பாண்டியன் தோற்றோடினான். இது நடந்த காலம் கி. பி. 915. ஆண்டுகள் ஐந்தோடின. பராந்தகன் பாண்டியனை மதுரையை விட்டே விரட்டினான். அவன் ஈழ நாட்டில் அடைக்கலம் புகுந்தான். பாண்டியன் ஈழ மன்னனிடம் விட்டுச் சென்ற முடியையும் இந்திரன் ஆரத்தையும் பெறச் சோழன் எவ்வளவோ முயன்றும் இறுதியில் தோல்வியுற்றான். இச் செய்தியை மகாவமிசமும் இரண்டாம் பிருதிவி பதியின் செப்பேடுகளும் எடுத்தியம்புகின்றன. கங்க அரசனான பிருதிவிபதி என்பான் சோழனுக்கு அடிபணிந்தான். இராசேந்திரன் விடுத்த திருவாலங்காட்டுப் பட்டயங்கள் மூலம் பராந்தகன் தில்லைக் கூத்தன் கோவிற்குப் பொற்கூரை அமைத்தான் என்பதும், அதனால் 'கோவில் பொன் வேய்ந்த தேவன்' என்று அழைக்கப்பட்டான் என்பதும் தெரிய வருகின்றது. உத்தரமேரூர்க் கல்வெட்டு மூலம் சோழப் பேரரசு, பேரரசாகத் திகழ அடிகோலியவனும், சிறந்த ஆட்சிவன்மையுடையவனும் பராந்தகனே என அறியலாம். இவன் காலத்தில் சோழப்பேரரசு வடக்கே நெல்லூர் முதல் தெற்கே குமரிமுனை வரை பரவி இருந்தது. என்றாலும் பராந்தகன் தன் இறுதிநாளில் மகிழ்ச்சியோடும் மனநிம்மதியோடும் வாழ முடியவில்லை. இராட்டிரகூட மன்னனை மூன்றாம் கிருட்டிணன் தொண்டை மண்டலத்தின் மீது படை எடுத்தான். அக்காலத்தில் சோழப்பேரரசின் இளவரசனாக இருந்தவன் இராசாதித்தன் ஆவான். தக்கோலம் என்ற இடத்தில் இராசாதித்தனுக்கும் மூன்றாம் கிருட்டிணனுக்கும் இடையே போர் நடந்தது. இது நடந்த ஆண்டு கி. பி. 949. போரிலே சோழன் கொல்லப்பட்டான். 
'சங்கராம ராகவா', 'பண்டித வத்சலா' என்பன பராந்தகனது விருதுப் பெயர்களாகும். இவன் திருவாவடுதுறை, செந்துறை முதலிய இடங்களில் கோவில்கள் அமைத்தான். மேலும் வீரநாராயண ஏரி, சதுர்வேதி மங்கல ஏரி, சோழ வாரிதி, சோழசிங்கபுரத்தேரி முதலிய பேரேரிகளை வெட்டு வித்தவனும் இவனே. 
பராந்தக சோழ பரகேசரிக்கும் முதல் இராசராசனுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இருவருக்கும் இடையில் ஆண்ட சோழ மன்னர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐந்து சோழ மன்னர்கள் ஆண்டதாகத் தெரியவருகிறது. மூன்றாம் கிருட்டிணன் காஞ்சியைக் கைப்பற்றிப் பின் தஞ்சைக்கும் கண்ணி வைத்தான். மூன்றாம் கிருட்டிணனை, பராந்தகனின் இரண்டாம் மகனான கண்டராதித்த சோழன் எதிர்த்து விரட்டி அடித்தான். ஆனால் அச்சோழனால் நீண்ட நாள் ஆள முடியவில்லை. ஏன்? திடீரென அவன் இறந்துவிட்டான். கண்டராதித்த சோழனின் அருமை மனைவியான செம்பியன் மாதேவியார் தன் கணவனின் நினைவுக்காக கோனேரி ராசபுரம் என்ற இடத்திலே ஒரு கோவிலைக் கட்டினார். கண்டராதித்த சோழனின் மகனான உத்தமன் மிகவும் இளம் வயதினனாக இருந்தபடியால் பராந்தகனின் மூன்றாம் மகனான அரிஞ்சயன் மன்னனானான். ஆனால் அரிஞ்சயனும் நெடுநாள் நாட்டை ஆளவில்லை. அரிஞ்சயன் மகனும் இரண்டாவது பராந்தகனுமாகிய சுந்தரசோழன் கி பி. 956 இல் அரியணை ஏறி கி. பி. 973 வரை நாட்டை ஆண்டான். சுந்தர சோழன் இராட்டிரகூடர்களிடமிருந்து காஞ்சியை மீட்டினான். பின்னர் பாண்டிய மன்னனான வீரபாண்டியனோடு போரிட்டு வெற்றி பெற்றான். எனவே மதுராந்தகன் என்ற பட்டமும் சூட்டிக் கொண்டான். இப்போரில் சுந்தர சோழனின் மகனான ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையைப் பந்தாடினான். ஆதித்த கரிகாலன் தந்தைக்குப்பின் கி. பி. 973 இல் அரியணை ஏறி 980வரை ஆண்டான் என்பது சிலர் கருத்து. சிலர் உத்தம சோழனால் ஆதித்த கரிகாலன் கொலையுண்டான் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. ஆதித்த கரிகாலன் கொலையுண்டான். யாரால்? சோழ நாட்டு அரசியல் அதிகாரிகள் இருவர், பாண்டிய நாட்டு அரசியல் அதிகாரி ஒருவர் ஆகிய மூவரும் சேர்ந்து சதிசெய்து ஆதித்த கரிகாலனைக் கொன்றார்கள். இவர்கள் பிற்காலத்தில் இராசராசனால் தண்டிக்கப்பட்டனர். இச்செய்தியைச் சிதம்பரம் தாலுகாவிலுள்ள காட்டுமன்னார் கோவிலிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. 
ஆதித்த கரிகாலன் இறந்த பின்பு கண்டராதித்தனின் மகனான உத்தமசோழன் அரசேற்று கி. பி. 985 வரை ஆண் டான். உத்தம சோழன் காலத்தில் ஆதித்த கரிகாலனின் உடன்பிறந்தவனாகிய இராசராசன் இளவரசனாக இருந்தான். சோழப் பேரரசில் வீணாகக் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படாமல் இருக்க இராசராசன் உத்தம சோழனையே அரசனாக இருக்குமாறு வேண்டிக் கொண்டான். சோழப் பேரரசர்களுள் தங்க நாணயங்களை முதன் முதல் வெளியிட்ட பெருமை உத்தம சோழனையே சாரும். 
முதல் இராசராசன் (985-1014) 
சோழப் பேரரசுக்கு அடிப்படைக்கல் நாட்டியவன் விசயாலயன். கட்டிடத்தை எழுப்பியவன் பராந்தகன். அந்தக் கட்டிடத்தின் பெருமையை உலகுக்குத் தெரிவித்தவர்களுள் தலை சிறந்தவன் இராசராசன். இராசராசன் காலத்தில் சோழப் பேரரசு பேரும் சீரும் பெற்றது. சோழ நாட்டுக் கொடி யாங்கணும் பறந்தது. அவன் படை என்றாலே அகில உலகும் கிடுகிடுத்தது. எனவே எத்திசை சென்றாலும் அவன் வாள் வெற்றி மழையே பொழிந்தது. இராசராச சோழனைப் பெற்ற பெருவயிற்றை உடையவள் வானவன் மாதேவி. அவனைப் பெரு வீரனாக்கியவன் சுந்தர சோழன். இவனே இராசராசனின் தந்தை. தந்தைக்குப் பின்னர் இராசராசன் அரியணை ஏறினான். அரண்மனைக்குள் நடந்து கொண்டிருந்த கசப்பான நடவடிக்கைகளை அடக்கினான்; படையைத் திருத்தினான். "வேளைக்காரர்" என்ற ஒருவகைப் படையை உண்டாக்கினான். கப்பற் படையைச் செப்பனிட்டான்; சேரரோடு போரிட்டான்; சேரர் தம் மரக்கலங்களைக் காந்தளூர்ச் சாலையில் வைத்துச் சிதைத்தான்; சேர மன்னனாகிய பாஸ்கர ரவிவர்மனின் வலிமையைக் குறைத்தான். 
இராசராசன் இதனோடு நிற்கவில்லை. மறுபடியும் அவனுடைய இருபெருந் தோள்களும் தினவெடுத்தன. தினவெடுக்கும் தோள்களுக்குத் தினையாகப் பாண்டியனை வென்றான். பாண்டியனுக்கு நண்பனாக இருந்த ஈழ மன்னன் சோழனைக் கண்டு தோற்றுக் காற்றெனப் புறமுதுகிட்டுப் பறந்தான். தென்புல முழுவதையும் வென்ற சோழன் வட புலம் நோக்கினான். 
"பிரித்தலும் பேணிக் கொளலும்" என்ற தேவர் வாக்குப்படி மேலைச் சாளுக்கியரினின்று கீழைச் சாளுக்கியரைப் பிரித்தான்; தன்னோடு சேர்த்துக்கொண்டான்;அடுத்து கீழைச் சாளுக்கிய நாட்டிலே அரசுரிமை பற்றி நடந்த குழப்பங்களைத் தீர்த்தான். விமலாதித்தனைச் சாளுக்கிய அரசனாக்கினான். அது மட்டுமா? இராசராசன் தன் மகளான குந்தவையை விமலாதித்தனுக்குத் திருமணம் முடித்து வைத்தான். சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. பின்பு இராசராசன் தக்கணத்தை ஆண்ட சத்தியாசிரயன் என்னும் சாளுக்கியன் மீது போர் தொடுக்கையில் விமலாதித்தன் பேருதவி செய்தான். 
மணமேடையில் உலவிய சோழன் இராசராசன் அதன் பின்பு பிண மேடையில் உலாவி வரலானான். கங்கபாடியும் மலை நாடும் அவன் காலடியில் விழுந்தன. துங்கபத்திரைப் பேராறு சோழ நாட்டின் வட எல்லையாயிற்று. மாலத் தீவுகள் சோழனைச் சரணடைந்தன. இவ்வாறு நனவெல்லாம் உணர்வாகவும், நரம்பெல்லாம் இரும்பாகவும் வாழ்ந்து வாகை பல சூடிய இராசராசனுக்கு, மும்முடிச் சோழன், சயங்கொண் டான், சிவபாத சேகரன் முதலிய விருதுப் பெயர்கள் ஏற்பட்டன. 
இராசராசன் சைவப் பற்று மிக்கவன். இவன் சிவ பக்தனேயாயினும் பிறசமயக் காழ்ப்புச் சிறிதும் இல்லாதவன்; எம்மதமும் சம்மதமே என்னும் சமயப் பொறையும் உடையவன். நாகபட்டினம் என்னும் நகரிலே சுமத்திராவின் அரசனான சைலேந்திரன் புத்தப்பள்ளி ஒன்று கட்டிக்கொள்ள இராசராசன் ஒப்புதல் அளித்தான். அதுமட்டுமல்ல; பள்ளிச் சந்தமாகப் பல நிலங்களையும் சோழன் அக்கோவிலுக்கு அளித்தான். 
இராசராசனுடைய சைவப் பற்றின் திண்மையை இன்று உலகுக்கு அறிவித்துக் கொண்டிருப்பது தஞ்சைப் பிரகதீசுவரர் கோவிலாகும். அதுமட்டுமல்ல; திராவிடச் சிற்பக் கலைக்கு மணி முடியாகவும், உறைவிடமாகவும் விளங்குவதும் அக்கோவிலே. இக்கோவில் கி. பி. 1004-இல் தொடங்கப் பெற்று 1010-இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் நீளம் 793 அடி; இதன் அகலம் 397 அடி. தமிழ் நாட்டுக் கோவில்களில் மிகப் பெரியது இதுவே. இககோவிலின் கோபுரத்தின் நிழல் தரையில் விழாதது ஒன்றே இக் கோவிலைக் கட்டிய சிற்பிகளின் சீரிய திறமையை உலகுக்கு அறிவிப்பதாகும். எங்கணும் அழகிய சிலைகளையும் வண்ண ஒவியங்களையும் நாம் காணலாம். இக்கோபுரத்திலுள்ள விமானக் கல்லை அமைப்பதற்காக நான்கு மைல் தூரம் சாரம் அமைக்கப்பட்டதாம். அதற்கறி குறியாகச் "சாரப் பள்ளம்" என்ற கிராமம் ஒ ன் று ம் உள்ளது. கோவிலின் உள்ளே திருச்சுற்றில் 63 நாயன் மாரது உருவச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாள் தோறும் தித்திக்கும் தேவாரப் பாடல்கள் அக்கோவி லிற் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.
இராசராசன் வெற்றி வீரன் மட்டுமல்ல; நாட்டை நல்ல முறையிலே ஆளும் அறிவும் திறனும் உடையவனுவான். இவன் ஆட்சியிலே சோழநாடு மாட்சியோடு விளங்கியது. உலகமே கண்டு மயங்கியது. இராசராசன் முதலில் நிலத்தை அளந்தான்; பின் நிலத்திர்வையை நிர்ணயித்தான்; திறமை மிக்க செயலர்களைக் கொண்ட ஒரு நல்ல அரசாட்சியை நிறுவினன்; பின்னர் ஒவ்வொரு கோட்டங்களிலும் சிறந்த அரசாங்க அதிகாரிகளை நியமித்தான்; அன்ருட வேலைகட்குத் தடை ஏற்படாவண்ணம் அடிக்கடி ஊரவைகளின் கணக்கு வழக்குகளைச் சரிபார்க்க ஏற்பாடு செய்தான். இராசராசன் தன் காலத்தில் சிறந்த தரைப்படையையும் சீரிய கப்பற்படை யையும் ஏற்படுத்தின்ை. இவற்றின் மூலமே இராசராசன் தென்னுட்டு அரசர்களிலே மிகச் சிறந்த பேரரசன் என்பது தெளிவாம். வரலாற்றுக்கு உயிர்போல விளங்கும் மெய்க் கீர்த்தி என்ற ஒரு பகுதியைக் கல்வெட்டுக்களில் முதன் முதல் தொடங்கியவன் இராசராசனே. இம்மெய்க்கீர்த்தியின் மூலம் அரசனது புகழையும், வரலாற்றையும், அரசியையும், பின் அவன் இயற்பெயரையும் நாம் அறியலாம். இராசிரயன், நித்யவிநோதன் என்பவையும் இராசராசனின் விருதுப் பெயர்களே.


 இராசேந்திரன் 
இராசராசனுக்குப் பின்னர் அவன் மகனான இராசேந்திரன் சோழ நாட்டுப் பேரரசனானான். “தந்தையிற் சதமடங்கு தனயன்' என்னும் முதுமொழிக்கு எடுத்துக்காட்டாக இராசேந்திரன் விளங்கினான். இவன் காலத்தில் சோழ நாட்டின் பெருமை கடல்கடந்த நாடுகளுக்கெல்லாம் பரவியது. தூரகிழக்கு நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டின் சாயல் தென்படுவதற்குக் காரணமாக விளங்கியவன் இராசேந்திரனே. 
அரியணை ஏறியதும் இராசேந்திரன் தன் படையெடுப்பைத் தொடங்கலானான். சோழப்படை கடலெனத்திரண்டது. ஈழம் நோக்கி விரைந்தது. ஈழத்தரசன் கைதியாகத் தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டான். ஈழ நாட்டுக் களஞ்சியமும் சோழரின் தலைநகர்க்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் பரசுராமன் கொடுத்த முடி சேரமன்னரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. தெற்கே வெற்றிக்கொடி நாட்டிய இராசேந்திரன் தன் எரி விழிகளை வடக்கு நோக்கித் திருப்பினான். அவ்வளவுதான்; சித்தியாசிரயனுக்குப்பின் வந்த முதலாம் சயசிம்மன் தோற்கடிக்கப்பட்டான். இந்தச் சண்டை கி. பி. 1021 இல் முயங்கி என்னும் இடத்தில் நடைபெற்றது. பின்னர் கலிங்கமும் மகாகோசலமும் பொன்னித் துறைவனின் கழல் பணிந்தன. இவற்றோடு சோழப்படை நிற்கவில்லை. கங்கைக் கரைநோக்கிச் சோழப்படை விரைந்தது. இராசேந்திரன் செல்லவில்லை. சென்ற சோழப்படை, வங்கத்தை ஆண்ட மகிபாலன், கோவிந்த சந்திரன் ஆகிய இரு மன்னர்களையும் தோற்கடித்தது. பின்னர் கங்கை நீர் நிரம்பிய குடங்களைத் தோற்ற வட நாட்டு மன்னர்தம் தலை மீது சுமத்திச் சோழப்படை தென்னகம் திரும்பியது. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரம் இந்த வெற்றியின் நினைவாக உண்டாக்கப்பட்டது.  கங்கைகொண்டான் என்ற விருதுப் பெயரும் சோழனுக்கு ஏற்பட்டது. இந்த வடநாட்டு வெற்றிக்குப் பின்னர் சோழப்படை கடல்கடந்து, கடாரம், சீவிசயம் (சாவா) முதலிய தீவுகளை வெல்லச்சென்றது; வென்றது. இது நடந்த காலம் கி. பி. 1025. அக்காலக் கடாரத்தைச் சிலர் இக்காலக் கெடாவோடும், மற்றும் சிலர் சுமத்திராவோடும் இணைக்கின்றனர். 
இராசேந்திரனின் 16-ம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட திருவாலங்காட்டுச் செப்புப் பட்டயங்கள் இராசேந்திரனின் போர்ச்செயல்களைச் செம்மையாகத் தெரிவிக்கின்றன. இராசேந்திரனால் வெல்லப்பட்ட நாடுகளைத் தெளிவாகக் குறிப்பிடுவதில் சில தொல்லைகள் இருந்தபோதிலும், வடநாடும், கிழக்கிந்தியத் தீவுகளும் சோழனால் வெல்லப்பட்டன என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை. வங்காளத்திலும், தூரகிழக்கு நாடுகளிலும் தமிழ்க் கலைகளும் தமிழ்ப் பண்பாடும் இன்று தென்படுகின்றனவென்றால் அதற்குக் காரணம் இராசேந்திரனின் வெளிநாட்டுப் படையெடுப்புக்களே. வங்காளத்திலுள்ள சேனைப்பரம்பரை, மிதிலையின்கண் உள்ள கரந்தைப் பரம்பரை, காஞ்சியில் வாழ்கின்ற வடநாட்டுச் சைவக்குருக்கள் பரம்பரை, வங்கத்தில் வாழும் தமிழ்ப் பரம்பரை ஆகிய பரம்பரைகளுக்கு மூலகாரணம் இராசேந்திரனின் வடநாட்டு வெற்றியே. 
இராசேந்திரன் கி.பி. 1044 வரை ஆண்டான் எனினும் கி. பி. 1018 லேயே தன் மகனான இராசாதிராசனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு ஆட்சித்துறையில் பழக்கலானான். முடிகொண்டான், பண்டிதன், கங்கைகொண்டான், கடாரம்கொண்டான் என்பன இராசேந்திரனின் பட்டப் பெயர்களாகும். தந்தை காலத்தில் ஏற்பட்ட  கீழைச்சாளுக்கியர் உறவை இராசேந்திரன் தன் செல்வியான அம்மங்கை தேவியைக் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனுக்குக் கொடுத்து மேலும் வளர்த்துக் கொண்டான். அலி மசூதி போன்ற அராபிய எழுத்தாளரின் குறிப்புகள், 11-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீன எழுத்தாளர்களின் குறிப்புகள் ஆகியவை சோழர்கள் கடல் கடந்து பல நாடுகளை வென்றமைக்குச் சான்று பகருகின்றன. கி. பி. 1033 இல் சோழமன்னன் சீனாவுக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பியதாகத் தெரிகிறது. 
இராசேந்திரனின் கப்பற்படைக்கு அந்தமான், நிக்கோபார் ஆகிய தீவுகள் தப்பிப் பிழைக்க முடியவில்லை. கலிங்க நாடு, கடல் வாணிகத்தில் தமிழ் நாட்டோடு போட்டியிட்டது. எனவே சோழன் கலிங்க நாட்டை வெல்லக் கழிபேராசை கொண்டான். இராசேந்திரனால் கைப்பற்றப்பட்ட நாடுகளுள் இடைதுறை நாடு என்பது ரெய்ச்சூராகும் ; மான்யகடகம் என்பது இக்கால மால்காடு என்பதாகும். இராதா என்பது (இலாடம்) தென்மேற்கு வங்காளமாகும். தண்டபுத்தி என்பது பீகார் மாநிலமாகும். இலாட நாட்டு அரசனான இரணசூரன், மகிபாலன், தர்மபாலன் ஆகியோர் முடிமீதுதான் கங்கைநீர் நிரம்பிய குடங்கள் சுமத்திச் சோழநாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.  வரலாற்று ஆசிரியர் சிலர் இராசேந்திரனின் இத்தகைய சீரிய வடநாட்டு வெற்றியை வேங்கி நாட்டுத் திக்குவிசயம் என்றும், கங்கை நோக்கிய புண்ணிய யாத்திரை என்றும், கங்கவாடி வெற்றியென்றும் காரணமில்லாது கூறுவர். 
இராசாதிராசன் 
இராசேந்திரனுக்குப் பின்னர் அவன் மகனான இராசாதிராசன் சோழ நாட்டு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் தந்தை காலத்திலேயே சோழ நாட்டு அரசியலிற் பெரும்பங்கு கொண்டு பயிற்சி பெற்றான். இவன் பட்டம் பெற்றதும் ஈழத்தில் ஏற்பட்ட குழப்பங்களை அடக்கி ஒடுக்கினான். கி. பி. 1044-இல் இவன் ஓர் அசுவமேதயாகம் செய்தான். இராசாதிராசன் செய்த போர்களுள் குறிப்பிடத்தகுந்தது கொப்பத்துப் போராகும். கொப்பத்துப்போர் நடந்த ஆண்டு கி. பி.1053 ஆகும். முதலாம் சோமேசுவரன் என்பவன் துங்கபத்திரைப் பேராற்றின்கண் உள்ள சோழநாட்டு எல்லைப்புறத்து நாடுகளைக் கவரலானான். செய்தியறிந்த சோழன் சிங்கமெனப் பொங்கினான். சோழப்படை விரைந்து வடபுலம் நோக்கிச் சென்றது. சோழப்படையும் சாளுக்கியப் படையும் கொப்பம் என்னும் இடத்திலே கலந்தன. கடலொடு கடல் பொருதுவது போலத் தோன்றியது. போரிலே இராசாதிராசன் உயிர் துறந்தான். ஆனால் உடனே களத்திலேயே அவன்றன் இளவல் இராசேந்திர சோழதேவன் முடிபுனைந்து சோழப்படைக்குத் தலைமை தாங்கி நடத்தினான். வெற்றி அவன் பக்கம் வந்து புகுந்தது. இராசாதிராசன் யானைமேல் இருந்து இறந்தமையால், அவன் “யானைமேல் துஞ்சியதேவன்” என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப்பட்டான். 
இரண்டாம் இராசேந்திரன் 
கொப்பத்தில் நடந்த போர்க்களத்தின் கண்ணே முடிபுனைந்து கொண்ட இராசேந்திரன் கோலாப்பூர் நோக்கிச் சென்றான் ; அங்கே வெற்றித்தூண் நாட்டினான். அது மட்டுமல்ல; கீழைச்சாளுக்கிய மன்னனான இராசேந்திரனுக்குத் தன் மகளான மதுராந்தகியைத் திருமணம் செய்து கொடுத்தான். அதன் மூலம் சோழ சாளுக்கிய உறவை மேலும் வலுப்படுத்தினான். இராசேந்திரனுக்குப் பின்னர் அவன் மகனான இராசமகேந்திரன் சில ஆண்டுகள் நாட்டை ஆண்ட பிறகு கங்கைகொண்ட சோழனின் (முதல் இராசேந்திரன்) கடைசி மகனான வீரராசேந்திரன் சோழ நாட்டு அரசனானான். வீரராசேந்திரன் 
வீரராசேந்திரன் கி. பி. 1063-லிருந்து 1070 வரை ஆண்டான். பட்டம் பெற்ற பின்பு இவன் ஈழத்தில் தோன்றிய ஒரு கிளர்ச்சியை நசுக்கினான். கி. பி. 1067 இல் கூடல் சங்கமம் என்ற இடத்தில் வைத்து சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனைத் தோற்கடித்தான். அதனால் ஆகவமல்ல கோலாகலன், வல்லபவல்லபன் என்ற பட்டப் பெயர்கள் அவனுக்கு ஏற்பட்டன.
வீரராசேந்திரன் தில்லைச் செல்வனுக்குச் சிவப்பு வைரக்கல் ஒன்று பரிசளித்தான். முதலாம் சோமேசுவரனின் இளவலாகிய விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசைப் பெறு வதற்காகச் சோழன் பெரிதும் உதவி செய்தான். அது மட்டுமல்ல ; அச்சாளுக்கியனுக்குத் தன் மகளையும் கொடுத்தான். இதனால் சோழ நாட்டுக்கு யாதொரு பயனும் இல்லை. வீரராசேந்திரன் கி. பி. 1070 இல் காலமானான். அவனுக்குப் பின்பு அவன் மகனான அதிராசேந்திரன் அரசனானான். ஆனால் இவன் பட்டமேறிய சில நாட்களிலே இறந்தனன். எனவே விசயாலயச் சோழன் பரம்பரை முடிவுற்றது என்னலாம். 
அதிராசேந்திரனுக்குப் பின்பு சோழ - சாளுக்கியப் பரம்பரை சோழ நாட்டை ஆளத் தொடங்கிற்று. அவ்வாறு வந்த பரம்பரையின் முதல் அரசன் முதற் குலோத்துங்கன் ஆவான். சில வரலாற்று ஆசிரியர்கள் குலோத்துங்கன் அதிராசேந்திரனைக் கொன்றே சோழநாட்டு அரசுரிமையைக் கைப்பற்றினான் என்பர். ஆனால் வரலாற்று வல்லுநரான சதாசிவப் பண்டாரத்தார் இக்கூற்றை மறுத்து, அதிராசேந்திரன் சில நாள் சோழநாட்டை ஆண்டான் என்றும், இறுதியில் நோய்வாய்ப்பட்டே இறந்தான் என்றும் தக்க சான்றுகளுடன் நிறுவி உள்ளார். 
முதற் குலோத்துங்கனின் தாய் அம்மங்கைதேவி. இவள் கங்கைகொண்ட சோழனின் மகளாவாள். குலோத்துங்கனின் தந்தை வேங்கியை ஆண்ட இராசராசன் - இவன் குந்தவையின் மகன். குந்தவை முதல் இராசராசனின் மகள். எனவே முதற்குலோத்துங்கன் சாளுக்கியன் என்பதைவிடச் சோழன் என்னலே பொருத்தமுடைத்தாகும். 
முதற் குலோத்துங்கன் சோழநாட்டை கி. பி. 1070 லிருந்து 1120 வரை, அஃதாவது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்டுள்ளான். இவன் பட்டம் பெற்ற காலத்தில் சோழப் பேரரசு பல திசைகளிலிருந்தும் வருகின்ற படையெடுப்புக்களால் பெரிதும் அல்லலுற்றது. வடக்கே காலச்சூரிகள் கர்னன் தலைமையில் வேங்கி மீது படையெடுத்தனர். தெற்கே கி. பி. 1075-இல் ஈழம் தனியரசு முழக்கம் செய்தது. பாண்டியரும் சேரரும் மீண்டும் தலைதூக்கினர். இத்தகைய இக்கட்டான நிலையில் கடல் கடந்த சோழர் குடியேற்ற நாடுகள் சோழமன்னனால் நேரடியாகக் கவனிக்கப் படமுடியவில்லை. குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் ஓய்சால மன்னனான விட்டுணுவர்த்தனன் கங்க பாடியைக் கவர்ந்து தாலக்காடு கொண்டான் எனப் பெயர் - சூடிக்கொண்டான். சோழப் பேரரசைக் காப்பாற்ற குலோத்துங்கன் இயன்றவரை முயன்றான். இவன் சிங்களவரோடு மண உறவுகொண்டான்; நாகைபட்டினத்திலே புத்தவிகாரம் அமைப்பதற்குக் கடாரத்தரசனோடு ஒத்துழைத்தான். தனது தளபதியாகிய நரலோக வீரன் மூலம் சேர - பாண்டியரின் எழுச்சியை அடக்கினான். நாட்டின் வட எல்லையில் அமைதியை ஏற்படுத்தக் கலிங்க நாட்டின் மீது இரு தடவை படையெடுத்தான். அவற்றிலே முதற்படையெடுப்பில், அஃதாவது கி. பி. 1106-இல் வடகலிங்கம் கைக்கு வந்தது. இரண்டாவது படையெடுப்பில் அஃதாவது கி. பி. 1112-இல் கலிங்கம் முழுவதும் சோழனுக்குச் சொந்தமாயிற்று. இக்கலிங்க வெற்றியையே கலிங்கத்துப்பரணி மூலம் கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டதேவர் பாடியுள்ளார். கலிங்க வெற்றிக்கு முக்கிய காரணம் கருணாகரத் தொண்டைமானே. கலிங்க அரசனான அனந்தபத்மன் சோழநாட்டைச் சேர்ந்த இராசசுந்தரியின் மகனாவான். இவன் போரிலே தோற்றோடிவிட்டான்.போரிலே சோழன் வெற்றிபெற்றபோதிலும் கலிங்கநாடு சோழ நாட்டோடு சேர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. கி. பி. 1118-இல் கலியாணிச் சாளுக்கிய அரசனான ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கி நாட்டைக் கைப்பற்றினான். சோழப் பேரரசின் பரப்பு மிகவும் சுருங்கியது. எனினும் குலோத்துங்கன் இயன்றவரை அச்சுருக்கத்தைத் தடுத்தான். இங்கிலாந்தை ஆண்ட வில்லியம் என்பவனைப் போலக் குலோத்துங்கனும் நாட்டை அளந்து வரி விதித்தான். பின்னர் இவன்காலத்தில் சுங்கவரி நீக்கப்பட்டது. இதனால் இவன் சுங்கந் தவிர்த்த சோழன் என்று புகழப்பட்டான்.  
குலோத்துங்கன் காலத்தில் தமிழும் ஓரளவுக்கு வளர்ச்சிபெற்றது. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார், அடியார்க்கு நல்லார், பரணி பாடிய சயங்கொண்டார் ஆகியோர் இவன் காலத்தில் வாழ்ந்தவராவர். குலோத்துங்கன் இராமானுசரை நாட்டைவிட்டு விரட்டினான் என்றும், அதனால்தான் அவர் மைசூரை ஆண்ட பித்திதேவனிடம் அடைக்கலம் புகுந்தார் என்றும் சிலர் கூறுவர். இதற்கு ஆதாரமில்லை. 
குலோத்துங்கனுக்குப் பின்பு அவன்றன் நான்காவது மகனான் விக்கிரம சோழன் பட்டம் பெற்றான். இவன் சமயப் பொறை மிக்கவன். எனவே இராமானுசர் மைசூரை விடுத்துச் சோழநாடு வருவதை இவன் தடைசெய்யவில்லை. தியாகவிநோதன் எனக் கம்பரால் இராமகதையிற்  குறிப்பிடப்பட்டுள்ளவன் இச்சோழனே என்பது சிலர் எண்ணம். தந்தையிழந்த கங்கபாடி, வேங்கி ஆகியவற்றினின்று விக்கிரமன் தன்காலத்தில் சிற்சில பகுதிகளை மீட்டினான். தில்லைக் கூத்தனுக்கு இச்சோழன் பற்பல திருப்பணிகள் செய்தான். இவன் கி. பி. 1118-இலிருந்து 1135 வரை நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின்பு ஆண்டவன் இரண்டாம் குலோத்துங்கனாவான். இவன்காலம் 1135-1150. தமிழ் இலக்கியங்களிலே இவன் குமாரகுலோத்துங்கன் என அழைக்கப்படுகிறான். இவன்றன் அவையிலேதான் கம்பரும் ஒட்டக்கூத்தரும் வீற்றிருந்தனர். இம்மன்னனுக்குப் பின்னர் இரண்டாம் இராசராசனும் இரண்டாம் இராசாதிராசனும் கி. பி. 1178 வரை ஆண்டனர். 
கி. பி. 1160-1117 என்ற இடைக்காலத்திலே பாண்டிய நாட்டிலே உள்நாட்டுப் போர் உண்டாயிற்று. பாண்டிய நாட்டு அரசுரிமை பற்றிப் பராக்கிரமன், குலசேகரன் என்ற இரு பாண்டிய மன்னர்கட்குள் தகராறு கிளம்பிற்று. சோழரும், இலங்கை அரசரும் இதில் தலையிட்டனர். ஈழ மன்னனான இலங்காபுரன் குலசேகரனை ஆதரித்தான். சோழன் பராக்கிரமனை ஆதரித்தான். இலங்காபுரன் சோழ நாட்டு மீது படையெடுத்துச் சென்றான். குலசேகரனைப் பாண்டிய நாட்டு அரசனாக்கினான். மூன்றாம் குலோத்துங்கன், ஈழ மன்னன், சேரன், பாண்டியன் ஆகிய மூவரோடும் போரிட்டான். சுந்தரபாண்டிய மாறவர்மன் சோழநாட்டு மீது படையெடுத்தான்; வெற்றிபெற்றான். குலோத்துங்கன் இதன்பின்பு விரைவில் இறந்தபோதிலும், அதற்கு முன்பே பற்பல கோவில்களைக் கட்டிச் சென்றான். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலும், திருப்புவனம் கோவிலும் இவனால் கட்டப்பட்டனவே. இவன்காலத்தில் தான் நன்னூல் எழுதிய பவணந்தியும் வாழ்ந்தார். பிற்காலச் சோழ மன்னர் களுள்ளே இறுதியில் ஆண்ட சோழப்பேரரசன் இம்மூன்றாம் குலோத்துங்கனே. இவனுக்குப்பின் வந்த மூன்றாம் இராசராசன் (1216-46) சேந்தமங்கலத்தை ஆண்ட கோப்பெருஞ்சிங்கப் பல்லவனால் சிறைசெய்யப்பட்டான். ஒய்சால மன்னனான நரசிங்கனால் தான் பின் இச்சோழன் விடுதலை செய்யப்பட்டான். இது நடந்த காலம் கி. பி. 1244. இதற்குப் பின்பு சோழப்பேரரசு வீழ்ச்சியை நோக்கி விரைந்து ஓடலாயிற்று. சீரங்கத்திற்கருகிலுள்ள கண்ணனூரிலே ஒய்சாலர்கள் தனி நாடு அமைத்துக்கொண்டனர். மூன்றாம் இராசராசனுக்கும், மூன்றாம் இராசேந்திரனுக்கும் இடையே சண்டை மூண்டது. பாண்டியன் இதில் தலையிட்டான். காகத்தீயர்கள் கணபதி, உருத்திரதாமன் என்ற இருவர் தலைமையின்கீழ் தெற்கே தங்கள் பேரரசை விரிவாக்கினர். இவ்வாறு கி. பி. 1275-இல் சோழப்பேரரசு-இராசராசனும் இராசேந்திரனும் கண்ணீரையும் செந்நீரையும் கொட்டி வளர்த்த பேரரசு அடியோடு அழிந்தது. இவ்வழிவுக்கு மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பின்புவந்த சோழ அரசர்தம் வலிமைக்குறைவும், தென்னகத்தில் ஓய்சாலர்கள், காகத்தீயர்கள் ஆகியோரின் எழுச்சியும், குறுநில மன்னர்களின் தனியரசும், பாண்டிய மன்னர்களின் எழுச்சியும் மூல காரணங்களாகும். அரசுரிமை பற்றிச் சோழ மன்னர்களிடையே எழுந்த போரே சோழப்பேரரசைப் பெரிதும் அரிக்கலாயிற்று. மேலும் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சிசெய்து, 1231-இல் சோழனைத் தெள்ளாறு என்னும் இடத்தில் வைத்து வென்று அவனைச் சிறையும் செய்தான். இதே கோப்பெருஞ்சிங்கன் திருச்சிக்கு அருகிலுள்ள பெரம்பலூரில் வைத்து ஓய்சாலர்களைக்கூட முறியடித்து ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும் தன் அதிகாரத்தை ஏற்படுத்தினான். ஓய்சாலரும், காகத்தீயரும் தெற்கே சோழநாட்டை நோக்கித் தமது பேரரசுகளை விரிவாக்கியதும் சோழர் வீழ்ச்சிக்குக் காரணமாகும். மேற்கூறிய அனைத்தையும் முறியடித்து, கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டியப் பேரரசை நிறுவினான். 

சோழர் கால ஆட்சி முறை 
(சோழ மன்னர்கள் வெற்றி வீரர்கள் மட்டுமல்ல; திறமை மிக்க ஆட்சி புரியும் ஆற்றல் உடைய மன்னர்கள் என்றும் கூறலாம். சில மன்னர்கள் போரிலே புலிகளாக இருப்பர்; மாற்றாரும் கண்டு தோற்றுக் காற்றெனப் பறந்தோடச் செய்யும் பெரு வீரமிக்க மன்னர்களாகவும் இருப்பர்; கூற்றுவனும் அத்தகைய அரசர்களைக் காணின் குடல் கலங்குவான். ஆனால் அவர்கள் நாட்டை ஆளத் திறமை சிறிதும் இல்லாது இருப்பர். இதனால் கண்ணீரும் செந்நீரும் சிந்திப்பெற்ற பெரு நாடுகளை ஆளும்திறன் இல்லாது, மனமழிந்து இறந்த எத்தனையோ மன்னர் பரம்பரையை வரலாற்றிலே நாம் காணலாம். ஆனால் சோழ மன்னர்கள் அப்படியல்ல; நாட்டை நன்கு ஆளும் ஆற்றலும் பெற்றிருந்தார்கள். பிற்காலச் சோழர்கள் ஆட்சியிலே சோழ நாடு, நாடும் ஏடும் புகழவல்ல சிறந்ததோர் நல்லாட்சியைப் பெற்றுத் திகழ்ந்தது. எனவே சோழர் ஆட்சிக் காலத்தை, அதாவது கி. பி. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 13-ம் நூற்றாண்டின் இறுதி வரையுள்ள 400 ஆண்டு காலத்தை, தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறவேண்டும். அவர்கள் காலத்தில் நிலவியது முடியாட்சியே எனினும், முடியாட்சியின் உயிராக, உணர்வாகக் குடியாட்சியே கோலோச்சியது. இதனாலேயே டாக்டர் கிருட்டிணசாமி, டாக்டர் சிமித் போன்ற வரலாற்று வல்லுநர்கள் சோழர்களின் ஆட்சியை வானளாவப் புகழ்ந்துள்ளனர். சோழர் கால ஆட்சி முறையைத் தெள்ளத்தெளிய விளக்கவல்லது உத்தரமேரூர், உக்கல் என்ற இரு பேரூர்களிலும் காணப்படும் கல்வெட்டுக்களாகும். 
சோழ நாடு 
சோழப் பெருநாடு மண்டலங்களாகவும், மண்டலங்கள் வள நாடுகளாகவும், வள நாடுகள் நாடுகளாகவும், நாடுகள் கூற்றங்களாகவும், கூற்றங்கள் குறும்புகளாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. அக்கால மண்டலங்கள் இக்கால மாநிலங்கள் (Provinces); வள நாடுகள் இக்காலப் பெருமாவட்டங்கள் (Division); நாடுகள் - மாவட்டங்கள்; கூற்றம் - வட்டம்; குறும்புகள் - பிர்க்கா என நாம் ஒப்பிடலாம். சோழ நாடு ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த மண் டலங்கள் ஒரு காலத்தில் தனி நாடுகளாக விளங்கிப் பின் சோழ மன்னர்களால் வெல்லப்பட்டு சோழ நாட்டோடு இணைக்கப்பட்டனவாகும். இந்த மண்டலங்கள் சோழ நாட்டோடு சேர்க்கப்பட்ட காலத்தில் அந்தந்த மண்டலத்தின் முன்னைய அரசர்களாலும், அரச பரம்பரையினராலும் ஆளப்பட்டுவந்தன. ஆனால் பிற்காலத்தில், அஃதாவது இராசாதிராசன் காலத்தில் சோழமன்னர் பரம்பரையினரே அந்த மண்டல அதிகாரிகளாக ஏற்படுத்தப்பட்டனர். இவ்வித மாற்றத்திற்குக் காரணம், அந்த எல்லைப்புற மண்டலத்தின் பழைய மன்னர்கள் அடிக்கடி தனியரசு பெறக் கிளர்ச்சி செய்தமையேயாகும். கருணாகரத் தொண்டைமான் போன்ற பல்லவக் குறுநில மன்னர்கள் மண்டலத் தலைவர்களாக ஏற்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் சோழ மன்னர்களின் பெயர்களே இடப்பட்டன. மண்டல அதிகாரிகளுக்கு உதவியாகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறிவும் அனுபவமும் திறமையுமிக்க அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர். கிராம மகாசபை 
ஒவ்வொரு கூற்றத்திற்கும் ஒவ்வொரு மகாசபை இருந்தது. இந்த மகாசபைக்கு ஒவ்வொரு குறும்பும் (வார்டு) ஒவ்வொரு உறுப்பினரைக் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து அனுப்பியது. யார் தேர்தலில் நிற்கலாம், யார் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்குரிய தகுதிகளும், தேர்தல் விதிகளும் அக்காலக் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தலில் நிற்போருக்கு இருக்க வேண்டியன :- 

வரி செலுத்துகின்ற அல்லது வரி விதிக்கப்பட்ட கால் வேலி நிலம்.
ஒரு சொந்த வீடு.
வயது வரம்பு 35-75.
மந்திர - பிராமண வேதத்தைக் கற்றுக் கற்பிக்கக் கூடிய ஆற்றல்.
1/8 வேலி நிலம்; ஒரு வேதமும், ஒரு பாசியமும் கற்றுக் கற்பிக்கும் ஆற்றல்.
மேற்கூறிய தகுதிகளோடு மேலும் பெறவேண்டியன :- 
(1)வேதவிதிப்படி ஒழுகுதல் (2) அறமுறைப்படி ஈட்டிய செல்வம் (3) நற்சிந்தை (4) கடந்த மூன்றாண்டுகளாக யாதொரு குழுவிலும் இல்லாதிருத்தல். 
தேர்தலுக்கு நிற்க அனுமதிக்கப்படாதவர்கள்: -
இதற்கு முன்னால் ஏதாயினும் ஒரு குழுவில் இருந்து கணக்குகளை ஒழுங்கான முறையில் ஒப்பிக்காதவர்களும் அவர் தம் உறவினர்களும். 
பிறன்மனை விழைந்தோர், இழி பெண்டிரைச் சேர்ந்தோர், பஞ்சமா பாதகம் செய்தோர்.


 சாதியினின்றும் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டவர்கள். 
வாழ்நாள் முழுதும் தள்ளி வைக்கப்பட்டவர்கள். 
பிற்காலச் சோழர் ஆட்சியில் நடந்த தேர்தல் முறை வரலாற்று வல்லுநர்களைப் பெரிதும் கவர்ந்ததொன்றாகும். தேர்தல் கிரேக்க நாட்டில் நடந்ததை - ஒத்திருந்தது என அவர்கள் கூறுகின்றனர். முதலில் தலைமைக் குருக்கள், கிராமப் பெரியவர்கள் அத்தனை பேரும் தவறாமல் கோவிலில் கூடுவார்கள். ஒரு குடத்தில் தேர்தலுக்கு நிற்போர் பெயர்களைத் தனித்தனியாக எழுதிய ஓலை நறுக்குகள் கிடக்கும். பின்னர் குடம் நன்கு குலுக்கப்படும். களங்கமற்ற பளிங்கு உள்ளமும், உலகமறியாத வயதும் உடைய ஒரு சிறுவனை அழைத்துக் குடத்திலுள்ள ஓலையை எடுக்கச் செய்வர். எடுத்த ஓலையைத் தலைமைக் குருக்கள் வாங்கி அதிலுள்ள பெயரை உரக்கப்படிப்பார். அதுபோல எல்லாக் குருக்களும் படிப்பார்கள். இவ்வாறு படிக்கப்பட்ட பெயருடையவரே கிராமச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். இவ்வாறே எல்லா உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
மகாசபையின் பணிகள் 
ஒவ்வொரு கூற்றத்துக்கும் ஒவ்வொரு மகாசபை இருந்தது. மகாசபைகள் அடிக்கடி அரசாங்க அதிகாரிகளால் மேற்பார்வை இடப்பட்டபோதிலும், கிராமத்தைப் பொறுத்த வரையில் அல்லது அச்சபைக்குட்பட்ட ஊர்களைப் பொறுத்த வரையில் மகாசபை முழு அதிகாரம் செலுத்திவந்தது என்னலாம். கூற்றத்தின்கண் உள்ள ஊர்களும் நிலங்களும் மகாசபைக்குக் கட்டுப்பட்டனவாக விளங்கின. பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களும், கவனிப்பாரற்ற நிலங்களும் கிராமச் சபைக்கே சொந்தமாயின. அவற்றைப் பிறருக்கு வாரத்துக்கு விட்டுக் கவனிக்க மகாசபைக்கே முழு அதிகாரம் இருந்தது. வாரத்திற்கு எடுத்தோருக்கு விவசாயம் செய்கையில் எந்தவிதத் தீங்கும் ஏற்படாதவாறு கவனிக்கும் பொறுப்பும் மகாசபையைச் சேர்ந்ததாகவே இருந்தது. மேற்கூறிய கடமைகளினின்றோ, பொறுப்புகளினின்றோ தவறிய மகாசபை அதிகாரிகள் பொதுமன்றத்தினால் தண்டிக்கப்பட்டனர். 
கோவில்களுக்காகவும், பிற அறச்செயல்களுக்காகவும் அளிக்கப்படும் பணத்தையும் நிலத்தையும் ஏற்கவேண்டியது மகாசபையின் கடமைகளுள் ஒன்றாகும். ஏற்ற பணியைச் செவ்வனே செய்யவேண்டியது மகாசபையின் பொறுப்பாகும். இவ்வித அறச்செயல்களைக் கவனிக்க மகாசபை ஆண்டு தோறும் ஒரு குழுவை ஏற்படுத்தியது. மகாசபையின் நடப்புச் செலவுக்காகப் பொது நிலங்களை விற்றதும் உண்டு. இந்தப் பணத்திலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு அரசாங்க வரியை மகாசபை செலுத்தியது. மகாசபை கோவிற்குரிய நிலங்கட்கு வரி வாங்கவில்லை. வரி செலுத்தாத நிலங்களை மகாசபையே பறிமுதல் செய்தது. ஒரு சிக்கலைத் தங்களால் தீர்க்க முடியவில்லையானால் மகாசபை அதிகாரிகள் அச்சிக்கலைத் தீர்க்கத் தலைநகரின்கண் உள்ள பெரிய அதிகாரிகளுடைய கருத்தையும் அறவுரைகளையும் வேண்டுதலும் உண்டு. இந்த மகாசபைகள் தங்களுக்கெனப் பல களஞ்சியங்களும் வைத்துக்கொண்டிருந்தன. 
ஒவ்வொரு மகாசபையிலும் மூன்று முக்கிய குழுக்கள் இருந்தன. அவையாவன :- (1) ஆட்சிக்குழு (2) குளம் மேற்பார்வையாளர் குழு (3) தோட்டவாரியக்குழு. இவை தவிரப் பிற குழுக்களும் பணியாற்றின. 
இந்த மகாசபை, வட்டாரத் தலைமை அதிகாரியான சேனாபதியால் அடிக்கடி மேற்பார்வையிடப்பட்டது. சேனாபதியின் வேலை அடிக்கடி தனக்குட்பட்ட மகாசபைகளின் கணக்கையும், வேலைகளையும் கண்காணித்தலே ஆகும். மகாசபைகளின் செலவுக்கு வழி செய்தல் இச்சேனாபதியின் கையிலே தான் இருந்தது. 
அளவைகள் 
இங்கிலாந்திலே வில்லியம் என்ற பேரரசன் தன் நாட்டை அளப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே சோழ மன்னர்கள் தங்கள் நாட்டு விளைநிலங்களை நேர்மையான முறையிலே அளந்து பதிவும் செய்தார்கள். நிலங்கள் வேலி முறையில் கணக்கிடப்பட்டன. தஞ்சை, திருச்சி முதலிய மாவட்டங்களிலே இன்றும் குழி அல்லது வேலிக் கணக்கிலேயே நிலங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு வேலி என்பது இக்காலத்தில் 63 ஏக்கருக்குச் சமமாகும். நிலங்களை அளக்கப் பயன்படுத்திய அளவுகோல் சீபாதம் (Sripadam) எனப்படும். நிலவரி தானியமாகவோ, பணமாகவோ, தானியமும் பணமுமாகவோ செலுத்தலாம் என்ற முறை அக்காலத்தில் நிலவியது. வரி செலுத்தப்படாத நிலங்கள் மகாசபைக்குச் சொந்தமாகிடும். இவ்வாறு நிலத்தை இழந்தவரும் அவர் உறவினரும் தீண்டத்தகாதவர்களாகச் சமுதாயம் எண்ணியது. வெள்ளம் ஏற்பட்டபோதும், பஞ்சம் ஏற்பட்டபோதும் வரிகள் வாங்கப்படவில்லை. நாணயம், காசு என்று அழைக்கப்பட்டது. காசு என்பது தங்க நாணயமாகும். உழவர்களுக்குக் கடன்களும் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடனுக்குரிய வட்டித்தொகை நெய்யாகவும், எண்ணெய்யாகவும் பிற பொருளாகவும் கொடுக்கப்பட்டது. 
மகாசபைக்கு முழு உரிமையும், எல்லாவித அதிகாரங்களும் அளிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியலதிகாரிகட்கு அவை உட்பட்டே செயலாற்றி வந்தன. எந்த நேரத்தில் அதிகாரிகள் வந்தபோதிலும் மகாசபைகள் கணக்கு வழக்குகளைக் காண்பித்தேயாக வேண்டும். சில சமயங்களிலே மன்னனே நாட்டைச் சுற்றி வருகையில் மகாசபைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் உண்டு. அக்காலை மகாசபைகளின் தவறுகளை மன்னன் திருத்துதலும், தண்டித்தலும் உண்டு. 
ஓரமயம் மதுராந்தகன் கண்டராதித்தன் என்னும் சோழன் ஒரு கோவிற்குச் சென்றான். அங்கே கோவிற்குச் செய்யவேண்டிய பூசையும் விழாவும் பிறவும் ஒழுங்காகச் செய்யாமலும், கோவிற்கு வேண்டிய பொருள்கள் மிகவும் குறைந்த முறையில் அளிக்கப்படலும் கண்டு வெதும்பி மகாசபை அதிகாரிகளைக் கூப்பிட்டுக் கண்டித்து, அதிலிருந்து கோவிற்காரியங்களைக் குறைவின்றி நடத்துமாறு உத்தரவிட்டுச் சென்றதாகத் திருவல்லம் கல்வெட்டுக் கூறுகிறது.
நீதி வழங்குதல் 
இந்தக் காலத்திற்கூட நன்கு படித்த ஒரு சில அறிஞர்கள், நீதிமன்றங்கள் என்பன வெள்ளைக்காரர்களே கண்டுபிடித்தவை; நாட்டிலே அவர்கள் தான் நீதிநிர்வாகம் முதலில் ஏற்படுத்தியவர்கள் என எண்ணியும், எழுதியும் வருகின்றனர். சோழர்காலக் கல்வெட்டுக்களைப் பார்ப்போருக்கு இக்கருத்து நகைப்பிற்குரியது. இன்று நடைபெறுகின்ற நீதிமன்றங்களைவிட மிகச் சிறந்த முறையிலே அக்காலத்தில், நீதிமன்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. 
நாகரிக மிக்க இந்த இருபதாம் நூற்றாண்டிலே மரண தண்டனை மிகமிகச் சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால் நானூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட சோழர் காலத்திலே மூன்றே மூன்று தடவைகள் தான் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பழிக்குப் பழி வாங்கல் அக்கால நீதிமுறையன்று. குற்றத்தின் அளவைமட்டும் பார்த்து தண்டனை வழங்கவில்லை. குற்றத்தின் தன்மை, அது செய்யப்பட்ட சூழ்நிலை, செய்தவன் மனநிலை முதலியவற்றையெல்லாம் பொறுத்தே தண்டனை வழங்கப்பட்டது. சாவா மூவாப் பேராடுகளும், நந்தாவிளக்குமே பொதுவாகக் குற்றத்திற்கு விதிக்கப்பட்ட அபராதப் பொருள்களாகும். அறியாமற் செய்த கொலைக்குக்குக்கூட மரண தண்டனை விதிக்கப்படவில்லை . 
வழக்கை விசாரிக்கும் முழுப்பொறுப்பும், அதிகாரமும் மகாசபைக்கே. மகாசபைக்கு முடியாவிட்டால்தான் மேலதிகாரிகள் அழைக்கப்படுவர். சிலசமயங்களில் ஒரு மகாசபை மற்றொரு மகாசபையின் உதவியை நாடுவதுகூட உண்டு. இதிலிருந்து சோழர் காலத்திலே நீதி நிர்வாகம் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது எனத் தெளிவாகத் தெரிகிறதல்லவா? 
வரிகள் 
சோழர் காலத்தில் அரசாங்கத்திற்கு நிலவரி மூலம் தான் அதிகமான வருவாய் வந்தது. தஞ்சை போன்ற வளமான மாவட்டங்களிலுள்ள மக்கள் ஒரு வேலிக்கு 100 கலம் நெல் வரியாகத் தந்தார்கள். மேலும் சோழர் காலத்தில் பல வரிகள் போடப்பட்டபோதிலும், அவையெல்லாம் வெறும் வரிகளாக இருந்தனவே தவிர பணம் தரக்கூடிய வரிகளாக இருக்கவில்லை. தோட்டவாரிய வரி முதலிய பல வரிகள் போடப்பட்டன. உப்பள வரி, காட்டு வரி, சுரங்க வரி போன்ற வரிகள் ஓரளவுக்கு நல்ல வருவாயை அரசுக்குத் தந்தன. கலம், மரக்கால், நாழி, உழக்கு என்பன முகத்தலளவைகள். கழஞ்சு, மஞ்சாடி, காசு என்பன தங்க நிறுவைகளாம்.  நிலவரி தானியமாகவும் தங்கமாகவும் வாங்கப்பட்டது. சில வகை வரிகள் காசாகவே வாங்கப்பட்டன. தொழில் வரிகூட உண்டு. தட்டார்கள் தட்டார்ப் பட்டம் என்ற வரி செலுத்தினர். வாணியச் செட்டியார்கள் செக்கிறை, நெசவாளர்கள் தரியிறை, குயவர்கள் குசக்காணம், ஆயர்கள் இடைவரி முதலிய வரிகளைச் செலுத்தினர்.
செலவினம் 
நீதி நிர்வாகம், படை, கப்பற்படை, சிறந்த அதிகாரிகள் குழு, பொதுநலத்துறை ஆகியவற்றிற்காகச் சோழர் காலத்தில் வருவாயில் பெரும்பங்கு செலவிடப்பட்டது. பல்லவ மன்னர்களைப் போலச் சோழ மன்னர்கள், பெருங்குளங்கள் வெட்டுவதிலும், அணைக்கட்டுகள் கட்டுவதிலும், நெடுஞ்சாலைகள் அமைப்பதிலும் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள்.
படை
சோழ மன்னர்கள் இமயத்திற் கொடி பொறித்துக் கடாரத்திற் கல் நாட்டி, ஈழ நாட்டிற் கொடிகட்டி, உள் நாட்டில் ஆணை செலுத்தி, வலிவோடும் பொலிவோடும் தங்கள் சோழப் பேரரசை நிறுவிக் கட்டி ஆண்டதற்கு முக்கிய காரணம் அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பெரும்படையே ஆகும். இத்தகைய பெரும்படை தமிழ் நாட்டில் எக்காலத்திலும் இருந்ததில்லை என்றே கூறவேண்டும். நால்வகைப் படையோடு, கைக்கோளப் பெரும்படை, வில் வீரர்களாலான வில்லிகள் படை, அரசனது மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றிய வேளக்காரர் படை, கடற்படை முதலிய படைகளும் நாடெங்கும் இருந்தன. இப்படைகள் வைக்கப்பட்டிருந்த இடம் ‘கடகம்' (Cantonment) என்று வழங்கப்பட்டது. இப்படைகளின் துணையால்தான் சோழப் பேரரசர்கள் பெரும் பெரும் வெற்றிகளை அடைந்தனர். மேலும்  படைவீரர்களுக்குத் துணையாகப் பணியாளர் படையும் சோழர் காலத்தில் இருந்ததாகத் தெரியவருகிறது. இக்காலத்தில், போர்க் காலத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தார் ஆற்றிவரும் பணிகளையே அப்பணியாளர் படையிலுள்ளோரும் செய்துவந்தனரெனக் கூறலாம். மேலும் போர்க்காலங்களில் படை வீரர் தவிர, பொதுமக்களும் நாட்டைக் காத்தற்பொருட்டுப் போரில் ஈடுபட்டனர்.
பொதுநலப் பணி 
சோழர்கள் தங்கள் வருவாயிற் பெரும்பங்கைக் கோவிலுக்கும் வேளாண்மைக்குமே செலவிட்டனர். தஞ்சைப் பிரகதீசுவரர் கோவில் சோழர்கள் கட்டியதே. இக்காலத்தில் பொது நலத்துறை (P. W. D.) என்ன பணிகளைச் செய்கின்றதோ அதே பணிகளையே அக்காலத்திற் செய்ய ஒரு குழு இருந்தது. சிறு குளம், கோவில், அணைக்கட்டு முதலிய சிறுசிறு வேலைகளைக் கிராம மகாசபைகள் கவனித்துக் கொண்டன. பெரும்பெரும் ஏரிகளும், சாலைகளும், அணைக்கட்டுகளும் கட்டுவதே பொது நலத்துறையின் பணியாகும். கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ளது போன்ற பெரிய ஏரிகள், தஞ்சை- திருவாடி நெடுஞ்சாலை முதலியன சோழர்களால் அமைக்கப்பட்டன. தடிகைபாடி நெடுஞ்சாலை, கோட்டாற்று நெடுஞ்சாலை, வடுகவழி நெடுஞ்சாலை, கீழவழி நெடுஞ்சாலை ஆகியவை சோழர்கள் போட்ட சாலைகளாம். இதுமட்டுமல்ல; நதிகள் மூலம் சோழர் காலத்தில் வாணிகம் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
சுருங்க உரைப்பின் சோழர்கால ஆட்சிமுறை மிகச் சிறந்த ஆட்சிமுறையாகும். இன்று நடக்கும் ஆட்சிமுறை அவர்கள் விட்டுச்சென்ற ஆட்சிமுறையின் சில கூறுகளை நீக்கியும், அவற்றோடு சில கூறுகளைச் சேர்த்தும்  அமைக்கப்பட்ட ஆட்சிமுறையாகும். சோழர்கால ஆட்சிமுறையில் உடல் முடியாட்சி; உயிர் குடியாட்சி என்க.

சோழர் காலத் தமிழகம் 

அரசன் 
கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டு முடிய, ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் சோழர் ஆட்சிக் காலமாகும். இக் காலத்தினைத் தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறுதல் வேண்டும். தெலுங்கு நாடு உட்பட தென்னிந்தியா முழுவதும் சோழர் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது எனக் கூறலாம். மேலும் சாவா, சுமத்திரா, ஈழம் முதலிய தீவகங்களிலும் சோழர் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறந்ததைப் பல வரலாற்றாசிரியர்கள் பலபடப் பாராட்டியிருப்பது நாமறிந்ததொன்றே. சுருங்கக்கூறின் தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களில் சோழப் பேரரசர்களே எல்லா வகையானும் தலைசிறந்து விளங்கினர். பல சிறந்த பட்டங்களைப் பெற்று விளங்கினர். சோழ அரசர்கள் சக்ரவர்த்திகள் என்று மக்களாலும் பிற நாட்டவராலும் வழங்கப்பட்டனர். சோழ அரசியர் அவனி முழுதுடையாள், திரைலோக்கிய மாதேவி போன்ற பட்டங்களைக் கொண் டிருந்தனர். அரசன் நாட்டின் தலைவனாக இருந்தபோதிலும் அவன் மக்களைக் கலந்தே நாட்டை ஆண்டான்; பொதுமக்களது கருத்துப்படியே பணிபுரிந்தான். மேலும் அவன் சட்டம் இயற்றுவதோடு அமையாது அச்சட்டத்தின் துணை கொண்டு நாட்டின் நலத்தையும் அமைதியையும் காக்கும் காவலனாகவும் விளங்கினான். ஆட்சி செம்மையுற நடைபெறுவதற்கு ஆற்றல்மிக்க அமைச்சர்களும், ஏனாதி, மராயன் முதலிய அரசியல் அலுவலர்களும் அரசனுக்குப் பெரிதும் உதவினர். மேலும் அவைக்களப் புலவரும், அரசியல் குருவும் அக்காலத்தில் இருந்தனரெனவும், அமைச்சர் போன்றே  அவர்களும் அரசனுக்கு அரசியலில் உதவினரெனவும் தெரிகின்றது. சோழப் பேரரசர்கள் யாகம் செய்வதை அடியோடு நிறுத்திவிட்டனர். ஆனால் கோவில்களுக்கும், வறியவர்க்கும், புலவர்களுக்கும் பல தானங்கள் செய்தனர். வெளிநாட்டுத் தூதுவர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு வரும்பொழுதெல்லாம் சோழப் பேரரசர்கள் அவர்களுக்குப் பெருவிருந்தளித்தனர். இத்தகைய அயல் நாட்டுத் தொடர்பால் தமிழகம் தலைசிறந்து விளங்கியது.
சமுதாயம்
சோழர்தம் ஆட்சித் திறமையால் நம் பெட்டகம் இன்பம் கொழிக்கும் எழிற் சோலையாய் விளங்கியது. ஆனால் சாதி சமய வேறுபாடுகள் வேரூன்ற ஆரம்பித்தன. மக்கள் செய்து வந்த தொழில் பரம்பரைக் குலத்தொழிலாக மாற ஆரம்பித்தது. மேலும் இக்காலத்தில்தான் சமுதாயப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் தமிழ்நாட்டில் தலைகாட்ட ஆரம்பித்தன. வேளாளர் இக்காலத்தில் மிகச் சிறந்து விளங்கினர். அந்தணப் பெருமக்கள் பிறர் கொடுத்த தானத்தைப் பெற்று வாழ்ந்தனர். பெண்டிரும் சொத்தில் பங்கு பெற்றனர். அடிமைகளும் தேவதாசிகளும் நாடெங்கணும் இருந்தனர்.
விவசாயமும் வாணிகமும் 
சோழர் காலத் தமிழகம் விவசாயத்தால் வீறுபெற்றும், வாணிகத்தால் வளம் பெற்றும் இலங்கியது. இவ்விரு தொழில்களையும் செய்வோர் சமுதாயத்தில் சீரும் சிறப்புமாய், செந்தமிழ் நாட்டில் வாழமுடிந்தது. மக்களில் பெரும்பான்மையோர் விவசாயத் தொழிலிலீடுபட்டு நாட்டை வளப்படுத்தினர். நிலங்கள் தனிப்பட்டோர் உடமைகளாகவும், பொது நிலங்களாகவும் இருந்தன. வெற்றி வீரருக்கும், அந்தணருக்கும் நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. கோவில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலம் தேவதான நிலம் என வழங்கப்பட்டது. இக்காலத்தைப்போல் அக்காலத்திலும் மக்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டனர். 'சோழ நாடு சோறுடைத்து' ஆதலால் நாடெங்கணும் இலவச உணவு விடுதிகள் மக்களுக்கு உண்டிகொடுத்து உயர் நிலையில் விளங்கின. உழுதொழிலே நாட்டின் உயிர் நாடி என்பதை மன்னர்கள் உணர்ந்ததால் நீர்ப்பாசன வசதி பல செய்துதரப்பட்டன; கால்நடைகள் போற்றி வளர்க்கப்பட்டன. விவசாயத்தைப் போன்றே சோழர் காலத்தில் வாணிகமும் சிறந்து விளங்கியது. தமிழ்நாட்டு வணிகப் பெருமக்கள் நேர்மையோடு வாணிகம் செய்தனர். தவறு செய்தால் கோவிலுக்குத் தீர்வை கட்டினர். கூட்டுமுறையிலும், தனிப்பட்ட முறையிலும் மக்கள் வாணிகம் செய்தனர். அரசியலார் வரிவிதிப்பும், சுங்கமும் அன்று இருந்தன. வாணிகக்குழுக்கள் இன்றுபோல் அன்று வாணிக வளர்ச்சிக்காகப் பாடுபட்டன. பண்டமாற்று முறையே எங்கும் இருந்ததாகத் தெரிகிறது. நல்ல சாலைகள் இருந்தமையால் உள்நாட்டு வாணிகம் உயர்ந்திருந்தது. இதே போன்று கடல் வாணிகமும் தமிழர் செய்தனர். பாரசீகம், சீனா முதலிய நாடுகளோடு நம்மவர் வணிகத் தொடர்புடையோராய் இருந்தனர். உப்பு, ஆடையணிகளும் அக்காலத்தில் சிறந்த வாணிகப் பொருள்களாகக் கருதப்பட்டன. பத்திரம் எழுதிக் கொண்டு செல்வர்கள் பொருள் கடன் கொடுத்தனர். மக்கள் வட்டியுடன் பொருளைத் திருப்பிக் கொடுத்தனர். சொத்துக்களை விற்பதையும் மாற்றுவதையும் பதிவு செய்ய ‘ஆவணக்களரி' என்ற அலுவலகம் இருந்தது.
சமயம்
சோழர் காலத்திலே சைவமும் வைணவமும் தமிழ் நாட்டில் தலை தூக்கி நின்றன. அதேநேரத்தில் பௌத்த சமண சமயங்களும் ஓரளவு வாழ்ந்தன என்று கூறவேண்டும். சோழப் பேரரசர்கள் பழுத்த சைவர்களாக விளங்கிய போதிலும், அவர்களிடம் பிற சமயக் காழ்ப்பு இல்லை. எனவே பிற சமயங்களையும் மக்கள் எவ்வித இடையூறுமின்றி பின்பற்றினர். அரசர்கள் குறுகிய மனப்பான்மையை ஒழித்து, பிற மதத்தினரையும் ஆதரித்தது போலவே மக்களும் சமயவெறியின்றி ஒற்றுமையாய் வாழ்ந்தனர். ஆனால் சைவ சமயத்தைச் சேர்ந்த காலமுகர், கபாலிகர், பாசுபதர் என்போர் சமயவெறியுடையவர்களாய் இருந்ததாகத் தெரிகிறது.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழ்மக்களிடையே அரும்பிய சமய உணர்ச்சி சோழர் காலத்தில் பெருவெள்ளமாகப் பரந்து நின்றது. மக்கள் எல்லோரும் மனங்குளிர தோத்திரப் பாமாலைகளைப் பாடியும், அடியவர் வரலாறுகளைப் போற்றியும் தம் மனமெலாம் இறை மணம் கமழ வாழ்ந்தனர். சமய குரவர்கள் புகழ்ந்து பாடப்பெற்ற ஊர்கள் தமிழ்மக்களால் பாடல்பெற்ற தலங்கள் எனக் கொண்டாடப்பட்டன; பூசிக்கப்பெற்றன. சோழப் பேரரசர்கள் இத்தலங்களில் எல்லாம் கற்றளி எடுத்தனர். இவ்வாறே பாண்டியரும் பல கோவில்கள் கட்டினர். மேலும் தமிழக வேந்தர்கள் சமயநெறி போற்றி, அந்நெறியிலே நின்று, சிறந்த முறையில் செந்தமிழ் நாட்டை ஆண்டனர். புதிய கோவில்களைக் கட்டியதோடமையாது, பழைய கோவில்களையும் புதுப்பித்தனர். எனவே தமிழகத்தில் கோவில் வழிபாடு சிறக்கலாயிற்று. புலவர் பெருமக்களும் சமய உணர்ச்சி மிக்குடையவர்களாய் பாடல் பெற்ற தலங்களையும், அங்கு உறைகின்ற தெய்வங்களையும் பற்றிப் பலபடப்பாடிப் பரவினர்.
சோழர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டுக் கோவில்கள், மருத்துவக் கூடமாகவும், கலைகளின் இருப்பிடமாகவும், பசுக்கூடமாகவும் விளங்கின. ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் கோவில்கள் அமைக்கப்பட்டன. மேலும் சிவன் கோவில்களிலே அம்மன் சந்நிதிகள் தனியாகக் கட்டப்பட்டன. சிற்பவேலைகள் அமைந்த மாடங்களிலே கணபதி, பிரமன், நாராயணி, தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி உருவங்கள் அமைக்கப்பட்டன. பல்லவர் காலம் வரையில் திருமால், சிவன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்குத் தனித்தனியே கோவில்கள் கட்டப்பட்டன. இக்கோவில்களில் கருவறையும், அதைச் சார்ந்த மண்டபமும் மட்டும் இருந்தன. ஆனால் கி. பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அர்த்தமண்டபத்தைச் சார்ந்தாற்போல் கோவில் முன்புறத்தில் முகமண்டபம் அமைக்கப்பட்டது. கருவறைக்கு வெளிப்புறத்தில் நாயன்மார், அடியார் உருவங்கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாய் கருவறையைச் சுற்றிலும் மூன்று பக்கத்திலும் மண்டபங்கள் எழுப்பப்பட்டன. மூலக் கோவிலின் அடிப்புறத்திலும், சுவரிலும் சிற்பவேலைகள் அமையப்பெற்று அவைகள் அழகுடன் விளங்கின. சிவன் கோவிலுக்குள் கணபதி, முருகன் இவர்களுக்குத் தனித்தனியே ஆலயங்களும், பதினாறுகால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் போன்ற மண்டபங்களும் அமைக்கப்பட்டன. இவ்வாறே பெருமாள் கோவில்களிலும் வெவ்வேறு ஆலயங்களும் மண்டபங்களும் ஏற்பட்டன. சோழர் பிரதிமைகள் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்டுக் கோவில்களில் வைக்கப்பட்டன. இராசராசன், அவன் அரசி உலகமாதேவி இவர்களது செப்புப் பிரதிமை உருவங்களைத் தஞ்சாவூர் பெரிய கோவிலில் செய்துவைத்த செய்தியை அக்கோவில் சாசனமொன்று கூறுகின்றது. இதேபோன்று திருக்காளத்திக் கோவிலில் இருந்த மூன்றாம் குலோத்துங்கனது உருவச்சிலை செப்பினால் ஆயது. இவனது மற்றொரு கற்சிலை உருவம் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் காணப்படுகிறது. சிவன், பார்வதி, கணபதி, முருகன் போன்ற தெய்வ உருவங்களும், மனிதன், பறவை முதலிய இயற்கை உருவங்களும், கற்பனை உருவங்களும் உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்டன. மேலும் இறைவனது திருவுருவை, நின்ற கோலமாகவும், இருந்த கோலமாகவும், ஆடும் (சிவன்) அல்லது கிடந்த (திருமால்) கோலமாகவும் சிற்பிகள் செய்தனர்.
சோழர் தலைநகர்
சோழப் பேரரசின் தலை நகரங்களாகத் தஞ்சையும், கங்கை கொண்ட சோழபுரமும் விளங்கின. இவற்றுள் கங்கை கொண்ட சோழபுரம் திருச்சி மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் கொள்ளிடக் கரையின் வடபுறமுள்ள சாலையில், மனதைக் கவரும் மாடமாளிகைகளும், குவலயம் புகழும் கூடகோபுரங்களும், அழகுமிக்க மணிமாட வீதிகளும், இன்பந்தரும் இளமரக்காக்களும், வளமிக்க வாவிசூழ் சோலைகளும், சுற்றிலும் புறமதில்களும், அரண்களும், அகழ்களும் கொண்டு சோழர் காலத்தில் விளங்கியது. ஆனால் இன்றோ அந்நகர் சிதைந்த நிலையில் சிற்றூராய்க் காணப்படுகின்றது. சுற்றிலும் மண்மேடுகளும், இடிந்த சுவர்களும் அடர்த்தியாக வளர்ந்த செடிகொடிகளும் உள்ளன. இவற்றின் நடுவே கோபுரங்களுடன் கூடிய பாழடைந்த கோவிலொன்று காணப்படும். கோவிலின் முன்புறத்திலுள்ள கோபுரம் இடிந்துள்ளது. இக்கோவிலினுள்ளே முப்பது அடி உயரமுள்ள, நடுவில் இரண்டு பிளவுள்ள சிவலிங்கம் ஒன்று உள்ளது. இச்சிவலிங்கம் தஞ்சைக் கோவிலிலுள்ள சிவலிங்கத்தை ஒத்திருக்கின்றது.
சிதைந்துபோன இச்சீரிய ஊரைப்பற்றிப் பரோலாவின் 'கசட்டீரில்' பல செய்திகள் காணப்படுகின்றன. கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டிய பெருமை முதலாம் , இராசேந்திரனுக்கே உரியது. தென்னாடு முழுவதும் வெற்றி கொண்ட இராசேந்திரன் வடநாடு நோக்கிப் படையெடுத்தான். கங்கை வரைச் சென்று வெற்றிபெற்ற இவன் அதன் அறிகுறியாகக் கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவி, அதனைத் தன் தலைநகராக்கி அங்கிருந்துகொண்டு ஆட்சி செலுத்தலானான். மேலும் கங்கைகொண்ட சோழேச்சுரம் என்ற கோவிலும் இவனால் இங்குக் கட்டப்பட்டது. அளவில் சிறிய இக்கோவில் தோற்றத்தில் தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்தே விளங்கியது. இக்கோவில் 582 அடி நீளமும், 372 அடி அகலமும் கொண்டு 174 அடி உயரமுடைய கோபுரத்துடன் விளங்கியது. மேலும் வெளிப்புற மதிலில் ஆறு கோபுரங்களும், நான்கு மூலைகளிலும் கொத்தளங்களும் இருந்தன. இம்மதிலைச் சுற்றி ஆழமான அகழி ஒன்று இருந்ததாகவும் தெரியவருகின்றது. அழிந்துபோன இக்கோவிற் கற்களைப் பிற்காலத்தில் கொள்ளிடத்தில் கட்டப்பட்டிருக்கும் 'லோயர் சொலரூன்' அணைக்கட்டிற்குப் பயன்படுத்தியதாகப் பரோலா எழுதியுள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கருகில் இராசேந்திரனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்ற ஏரி அளவில் பெரியதாக விளங்கியதால் இதைச் சுற்றிலும் இருந்த நிலங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடில்லாது முதல் தரமான பாய்ச்சல் வசதியுள்ளவையாய் விளங்கின. இவ்வேரியானது 16 மைல் நீளமுள்ள வலிமை மிக்க கரையையும், பல மதகுகளையும் கொண்டிலங்கியது. ஆனால் இன்று இவ்வேரி பயனற்றதாய், காடுஞ்செடியும் மண்டிக் காணப்படுகின்றது. இராசேந்திரனால் நிறுவப்பெற்ற இப்பெருநகர் , அவனுக்குப் பின்னும் தொடர்ந்து சோழர் தலைநகராய் விளங்கிய போதிலும் ஏனோ பிற்காலத்தில் சிதைந்து சிற்றூராய் ஆகிவிட்டது.
கங்கைகொண்ட சோழேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது கருவூர்த்தேவர் பதிகம் ஒன்று  பாடியுள்ளார். இக்கோவில் சிற்பத் திறத்தில் தஞ்சைக் கோவிலைவிட உயர்ந்தது. இதனது விமானம் தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தைப் போன்று மிக அழகாக உள்ளது. இது 100 அடிச் சதுரமாக அமைந்துள்ளது. மேலும் இது ஒன்பது நிலைகளையும், உச்சியில் ஒரே கல்லாலாகிய சிகரத்தையும் உடையது. இத்தகைய சிறந்த கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவனது பெயர் கங்கைகொண்ட சோழேச்சுரர் ஆகும். இறைவனது நாள் வழிபாட்டிற்கும், பிற செலவுகளுக்கும் பல ஊர்கள் இராசேந்திரனாலும் அவனது வழித் தோன்றல்களாலும் இறையிலியாகக் கொடுக்கப்பட்டிருந்தன.
சோழப் பேரரசின் தலைசிறந்த தலைநகர் தஞ்சை மாநகரே. பிற்காலச் சோழ அரசை நிறுவிய விசயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி தனது தலைநகராக்கிக் கொண்டான் என்பது நாம் அறிந்ததொன்றே. திருவுடைய நகரமாய் தஞ்சை அன்று விளங்கியது. இன்றும் எஞ்ஞா வளம்படைத்த நஞ்சைசூழ் பதிகளை உடையது தஞ்சை மாவட்டமே. மேலும் இங்குதான் சோழர்தம் சிற்பத் திறத்திற்கு எடுத்துக்காட்டாகவும், இராசராசனது பெருமை, புகழ் இவற்றின் சின்னமாகவும் விளங்கும் இராசராசேச்சுரம் ஈடும் இணையுமின்றி வானளாவ நின்று நிலவி நம் நெஞ்சை எல்லாம் குளிர்விக்கின்றது. இம்மாபெரும் கோவில் திருப்பணியை இராசராசன் தனது ஆட்சியில் 19-ஆம் ஆண்டில் தொடங்கி 23-ஆம் ஆண்டில் முடித்தனன். 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடைய இக்கோவிலின்கண் அமைந்துள்ள நடுவிமானம் 216 அடி உயரம் உடையது. இதன் உச்சியில் 80 டன் எடையுள்ள கருங்கல் போடப்பட்டுள்ளது. விமானத்தின் மேலுள்ள செப்புக் குடத்தின் நிறை 3083 பலம். இதன் மேல்  போடப்பட்டுள்ள பொற்றகடு 2926 1/2, கழஞ்சு எடையுள்ளது. இக்கோவிலின் வெளிச்சுற்றிலுள்ள நந்தி நம் கண்களுக்கு ஓர் நல்விருந்தாகும். இது ஒரே கல்லில் செய்யப்பட்டது. இதன் உயரம் 12 அடி; நீளம் 191 அடி; அகலம் 84 அடி. இக்கோவிற் சுவர்களில் காணும் ஓவியங்களில் சுந்தரமூர்த்தி நாயனாரது வரலாற்றினை விளக்கும் ஓவியங்கள் உயிரோவியங்களாகும். சோழ மன்னனும், அவன்றன் அரசியல் அதிகாரிகளும், வழித்தோன்றல்களும் இப்பெரிய கோவிலுக்குப் பொன்னும் மணியும் வாரிவாரி வழங்கினர். ஊர்கள் பல இறையிலியாகக் கொடுக்கப்பட்டன. எனவே பெருவிழாக்கள் நடந்தன. மக்கள் பக்தி வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர். இக்கோவிலைப் பற்றியும் கருவூர்த் தேவர் பதிகம் ஒன்று பாடியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரமும், தஞ்சையும் தவிர பழையாறை என்ற நகர், பல்லவர்க்குச் சோழர் சிற்றரசராயிருந்த காலத்தில் சோழர் உறைந்த பெருநகராகும். மேலும் பிற்காலச் சோழர் காலத்தில் இந்நகர் இரண்டாவது தலை நகராகவும் விளங்கியது.
சோழர் காலக் கல்லூரிகள்
எண்ணாயிரம், திருமுக்கூடல், தஞ்சை, குடந்தை, புன்னைவாயில், திருவொற்றியூர் போன்ற இடங்களில் விளங்கிய கல்லூரிகள் கலையையும், கல்வி நலத்தையும் வளர்த்தன. எண்ணாயிரம் என்னும் ஊர் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்தது. இவ்வூர்க் கோவிலில் 11-ம் நூற்றாண்டில் வட மொழிக் கல்லூரி ஒன்று சிறந்த நிலையில் விளங்கியது. இக்கல்லூரி மாணவர்கள் அங்கேயே தங்கிப் படித்தனர். இக்கல்லூரி அவ்வூர்ச் சபையாரின் ஆதரவில் நடந்தது. 300-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். பெருமளவு நிலம் இக்கல்லூரிக்கு மானியமாகக்  
கொடுக்கப்பட்டிருந்ததால், கல்வி, உடை, உணவு இவை இலவசமாகவே மாணவர்க்கு அளிக்கப்பட்டன. வேதம், இலக்கணம், வேதாந்தம் முதலியவை இங்கு கற்பிக்கப்பட்டன. தஞ்சைக் கல்லூரியில் தமிழ், இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளை மக்கள் பயின்றனர். இக்கல்லூரியை நிறுவியவன் இராசராச சோழன் ஆவான். இக்கல்லூரி தஞ்சைப் பெரிய கோவிலில் சீரும் சிறப்புமாய் நடந்தது. வெளியிடங்களிலிருந்து பல கலைஞர்கள் இக்கல்லூரிக்கு வந்து பணிசெய்தனர்.
கி. பி. 1062-ல் வீரராசேந்திரதேவன் திருமுக்கூடல் வேங்கடேசப் பெருமாள் கோவிலில் கல்லூரி ஒன்றை நிறுவினான். வேதம், வியாகரணம், சிவாகமம் முதலியன இங்கு சொல்லித்தரப்பட்டன. துறவிகளும் இங்கு மாணவராக இருந்தனர். மாணவர்களுக்கு விடுதி வசதியும், மருத்துவ வசதியும் செய்துதரப்பட்டன. திருவொற்றியூர், புன்னைவாயில் இவ்விடங்களிலிருந்த கல்லூரிகளில் இலக்கணம் படிக்க வாய்ப்பிருந்தது. குடந்தைக் கோவில்களில் விளங்கிய கல்லூரிகள் வடமொழி தென்மொழிக் கல்லூரிகளாக விளங்கின. இவ்வாறு சோழப் பேரரசில் கல்லூரிகள் பல இருந்தமையால் மக்கள் நன்கு கற்று, கல்வியிற் சிறந்தோராய் விளங்கினர்.