வரலாற்றிற்கு முற்பட்ட காலம்
←தமிழகம்
தமிழ்நாடும் மொழியும் ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமிவரலாற்றிற்கு முற்பட்ட காலம்
சங்க காலம்→
437166தமிழ்நாடும் மொழியும் — வரலாற்றிற்கு முற்பட்ட காலம்பேரா. அ. திருமலைமுத்துசாமி
3. வரலாற்றிற்கு முற்பட்ட காலம்
பழைய கற்காலம்
நினைப்பிற்கெட்டா நெடுங்காலத்துக்கு முன்னர்க் கதிரவனிடமிருந்து ஒரு சிறு பகுதி தெறித்து விழுந்தது. விழுந்த பகுதி படிப்படியாகக் குளிர்ந்தது. பிறகு அதிலே நீரில் வாழ்வன தோன்றின. பின்னர் நீரிலும் நிலத்திலும் வாழவல்ல உயிர்கள் தோன்றின. இவ்வாறு பல்வேறு வகையான உயிர்கள் தோன்றித் தோன்றி இறுதியிலே மனிதன் தோன்றினான் என அறிஞர் பலர் நமது தோற்றம் குறித்துக் கூறியுள்ளனர்.
தோன்றிய மனிதன் முதலிலே விலங்குகள் போல வாழ்ந்தான். வாழ்க்கையிலே சிறிது சிறிதாக முன்னேறினான். விலங்குகள் போல வாழ்ந்த மனிதன் காலப்போக்கிலே மலைக்குகைகளில் வாழலானான். பின்னும் பல ஆண்டுகள் உருண்டோடின. மனிதன் கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினான். அக் கற்கள் மூலம் அவன் தனக்கு வேண்டிய உணவைப் பெறலானான்; தன்னைப் பிற உயிரினின்றும் காக்கத் தொடங்கினான். இவ்வாறு மனிதன் கற்களைக் கொண்டு தனக்கு வேண்டியன ஆக்கவும், தீங்கினின்றும் தன்னைக் காக்கவும், பிற உயிரைத் தாக்கவும் பயன்படுத்திய காலமே பழைய கற்காலமாகும். நாகரிகத்தின் முதற்படிதான் பழைய கற்காலம்.
பழைய கற்காலத்திலே மனிதன் கரடுமுரடான கற்களையே பயன்படுத்தினான். அவனுக்கு உணவாகப் பயன்பட்டவை காயுங் கிழங்கும் கனிகளுமே தாம். பழைய கற்கால மனிதனின் முந்தையர் யார்? அவர்தாம் கொரில்லா, சிம்பென்சி, கிப்பல், உரேங்குடாண் என்பவராம். இவர்களின் எலும்புக்கூடுகள் தென்னகத்திலே ஏராளமாகக் கிடைக்கின்றன. எனவே பழைய கற்கால மனிதனின் தாயகம் தென்னாடே எனில் தவறில்லை. கரடுமுரடான கல்லைக் கற்கால மனிதன் உடனே பயன்படுத்தவில்லை. முதலில் அவன் கிளைகளையும் கொப்புகளையும் பயன்படுத்தினான்.
முட்டை வடிவான கோடரிகள், ஈட்டிகள், குழி தோண்டு கருவிகள், வட்டக் கற்கள், ஒருபக்கம் மட்டும் கூர்மைத் தன்மை வாய்ந்த கருவி, நீண்ட கத்திக் கற்கள், சுத்தியல் போன்றவை கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளுள் குறிப்பிடத்தக்கனவாகும். கருவிகள் செய்கின்ற அளவுக்கு மென்மையும் உரிய வன்மையும் வாய்ந்த கற்பாறைகள் தென்னகத்திலே செங்கற்பட்டு, சித்தூர், கடப்பை, கர்நூல் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. அவற்றை இன்றும் காணலாம். மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பழைய கற்கால மனிதன் வாழ்ந்த குகைகள் காணப்படுகின்றன.
கற்கருவிகளின் மூலம் கற்கால மனிதன் வேட்டையாடினான்; வேட்டையாடி விலங்குகளின் இறைச்சியை அப்படியே உண்டான். இறைச்சியை உண்ணற்கேற்றவாறே அவன்றன் பற்கள் அமைந்திருந்தன. அதுமட்டுமல்ல; பழைய கற்காலக் கருவிகளிற் சிலவும் இறைச்சியைக் கிழிக்கவே செய்யப்பட்டன போல அமைந்துள்ளன.
இவ்வாறு வேகாப் புலாலை உண்ட மனிதன் காலப்போக்கில் நெருப்பைக் கண்டுபிடித்தான். முதலில் மூங்கிலைக் கண்டான்; அவை ஒன்றோடொன்று உராய்வதினால் நெருப்பு உண்டாவதைக் கண்டான். உடனே அவன் இரண்டு மரக் கட்டைகளைக் கொண்டு தீயுண்டாக்கினான். இறைச்சியை வேகவைத்தான்; உண்டான். பிறகு தீக்கடைக்கோல், சக்கிமுக்கிக் கற்கள் என்பனவற்றைக்கொண்டு தீ உண்டாக்கினான்.
இவ்வாறு தீ உண்டாக்கி வாழ்ந்த மனிதன் ஓரிடத்திலும் நிலைத்து வாழவில்லை. நாடோடி வாழ்க்கையே அவன் நடத்தினான். ஆனால் நாளாகஆக இன உணர்ச்சி அவன் உள்ளத்தில் தோன்றிப் பரவலாயிற்று. எனவே சேர்ந்து வாழலானான். ஆகவே மனிதக் கூட்டம் உண்டாயிற்று. இவ்வாறு தோன்றியது மனித சமுதாயம். இவர்களின் சந்ததியினர் இன்றும் மலைகளில் வாழ்கின்றனர். பண்டைக் கால மக்கள் இறந்தவரைக் கழுகுக்கும் நரிக்கும் இரையாகுமாறு வீசிச் சென்றனர். இவ்வழக்கம் இன்றைக்கும் திபெத்திலே காணப்படுகின்றது.
பழைய கற்காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த மனிதன் ஆடையற்றவனாகவே அலைந்தான். நாள் பலசென்றன. மரவுரியினையும், இலைகளையும் ஆடையாக அவன் பயன்படுத்தினான். பின்னர் தோலாடை பயன்படுத்தப்பட் டது. ஆகப் பண்டையக்கால மனிதன் எளிய உடையே பூண்டான். அவ்வுடைக்கேற்றவாறே தட்ப வெட்ப நிலையும் அமைந்திருந்தது.
இனி கலைகளைப் பார்ப்போம். பண்டைக்கால மனிதன் ஓரளவுக்குக் கலை உணர்ச்சி உடையவனாகவும் வாழ்ந்தான். அவன்றன் கலையுணர்ச்சியைத் தெள்ளத் தெளியக்காட்டும் ஓவியங்கள் பல இன்றும் ஐரோப்பிய நாடுகளிலே மலைக் குகைகளிலே காணப்படுகின்றன. தென்னகத்துக் குகைகளை ஆராய்ந்த பேரறிஞர் உட் என்பவர் தொடக்கத்தில் தென்னகத்திலே பழைய கற்கால ஓவியங்கள் இல்லை என்று கூறினார். ஆனால் அதற்குப் பின்னர் நடத்தப்பெற்ற ஆராய்ச்சிகள் அவர் கருத்தைப் பொய்யாக்கிவிட்டன. பழைய கற்காலக் குகை ஓவியங்கள் ரெய்கார் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள சிங்கன்பூரில் (Singhanpur) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தகைய குகை ஓவியங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் வகையான ஓவியம் வேட்டைத் தொழிலைப் பற்றியதாகும். இரண்டாம் வகையான ஓவியம் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மூன்றாவது வகையான ஓவியம் விலங்குகளைப் பற்றியதாகும். இவ்வோவியங்களிலே குறிப்பிடத்தகுந்தது பொங்கும் உணர்ச்சியே. ஒவ்வொரு ஓவியமும் உயிர் ஓவியமாகும். நான்காவது ஓவியம் சித்திர எழுத்துக்களைக் கொண்டதாகும். இச் சித்திரங்கள் எகிப்து நாட்டுப் பானை முதலியவற்றில் வரைந்துள்ள சித்திரங்களை ஒத்திருக்கின்றன.
பழைய கற்கால மக்கள் எந்த அளவுக்குச் சமயவுணர்ச்சி யுடையவர்களாக இருந்தார்கள் என்பதை அறியப் போதுமான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. பண்டை மக்களின் சவத் தாழிகளோ, மயானக் கரைகளோ தென்படவில்லை. இதிலிருந்து அவர்கட்கு இறந்த பின்றை உயிர் வாழும் என்பதிலே நம்பிக்கை இல்லை என நாம் அறியலாம். ஆனால் இயற்கையில் அம்மனிதன் நம்பிக்கை உடையவன் என்பது மட்டும் ஒருவாறு தெரிகிறது. தன்னை இயக்கும் சக்தி ஒன்று உலகில் உண்டு என்பதைப் பண்டை மக்கள் அறிந்திருந்தனர். இவ்வித உணர்வு தான் பழைய கற்காலத்திலே பரவி இருந்ததே தவிர வேறு கடவுள் உருவங்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. ஆனால் தேவி வணக்கமும் நில வணக்கமும் பண்டைய மனிதன் வழக்கத்தில் இருந்தன என்பது தெரிகிறது. மாக்களினின்றும் நோயினின்றும் தம்மைக் காக்குமாறு அன்னையை அம்மக்கள் வேண்டினர் போலும். நாளாக ஆக இவ்வுணர்வு பெருக, பரவ, உணர்ச்சி வடிவில் இறையைக் கண்டவன் கல்லிலே கடவுளைக் காணத் தலைப்பட்டான்.
இனி பழைய கற்கால மனிதன் பேசிய மொழியினைப் பற்றிப் பார்ப்போம். தொடக்கத்தில் மனிதன் தன் எண்ணங்களை வெளியிடாமல் தவித்தான்; துடித்தான். தனக்கு மேலே சிறகடித்துப் பறக்கும் பறவைகளைப் பார்த்தான். முதலிலே அவற்றைப் போலவே ஒலித்தான். பின்னர் சைகைகளைக் கொண்டு தன் கருத்தைத் தெரிவித்தான். இவ்வளவு நாகரிகம் அடைந்தும் இன்னும் நம் பேச்சில் பாதி அளவுக்கு மேல் சைகைகளே நிரம்பியுள்ளன. பின்னர் மனிதன் தான் பார்த்த உருவங்களை வரைந்து தன் கருத்தை உணர்த்தினான். இவ்வாறு படிப்படியாக முன்னேறி இறுதியிலே சொற்களைக் கண்டான்; கருத்தைத் தெரிவித்தான்.
பண்டை மக்கள்-பழைய கற்கால மக்கள் பதப்படுத்தாத கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தினர்; புலாலையும் காய் கிழங்குகளையும் உண்டனர்; தோலாடை இலையாடை உடுத்தினர்; இறந்தோரை வீசி எறிந்தனர்; அன்னை வணக்கம் கைக்கொண்டனர்; ஓரளவிற்கு ஓவிய உணர்வும் உடையவராக யிருந்தனர்.
புதிய கற்காலம்
நாகரிகப் படிகளிலே இரண்டாவது படி புதிய கற்காலமாகும். கரடுமுரடான கற்களைப் பயன்படுத்திய மனிதன் வழவழ என ஒளிபொழியும் தீட்டிய கல்லைப் பயன்படுத்திய - காலமே புதிய கற்காலமாகும். இக்காலத்தில் மனிதன் பல துறைகளிலும் முன்னேறலாயினான்; தன் வாழ்க்கை முறையைப் பல துறைகளிலும் மாற்றிக்கொண்டான்.
பழைய கற்கால மனிதன் நாடோடியாக அலைந்தான். ஆனால் காலப்போக்கில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்க்கக் கற்றுக் கொண்டான். மேலும் கூட்டம் கூட்டமாகவும் வாழ்ந்தான். நிலத்தைப் பயன்படுத்தவும் கற்றுக் கொண்டான். எனவே ஓரளவு நிலைத்த வாழ்க்கையே புதிய கற்காலத்துக்கு அடிப்படையாகும்.
பழைய கற்கால மனிதன் குகைகளில் வாழ்ந்தான். புதிய கற்கால மனிதனோ புல்லும் ஓலையும் கொண்டு வேய்ந்த குடிசைகளிலே வாழ்ந்தான். நாற்புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்ந்து பானையைக் கவிழ்த்த குடிசைகள் இன்றும் நாட்டுப் புறங்களிலே காணப்படுகின்றன. மழை விழுந்தால் ஒழுகாமல் இருக்கக் கவிழ்த்த இப்பானையே பிற்காலக் கோவிற் கோபுரங்களின் கலசங்களாக மாறின. கொஞ்சம் செல்வம் படைத்தவர்கள் மரங்களால் தங்கள் வீடுகளை அமைத்து வாழ்ந்தனர். திருச்சி, நெல்லை, புதுக்கோட்டை, சேலம், அனந்தப்பூர், கடப்பை, கர்நூல் ஆகிய மாவட்டங்களிலே பழைய கற்கால மனிதன் பயன்படுத்திய மட்பாண்டங்களின் ஓடுகள் காணப்படுகின்றன. புதிய கற்கால மக்களால் செய்யப்பட்ட பானை, தாழி, சட்டி, பொம்மை, கிண்ணம், விளக்கு முதலியன மேற்குறித்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன. இப்பாண்டங்களிலே தீட்டப்பட்ட பலவகை வண்ணங்கள் இன்றும் அழியாமல் காட்சி தருகின்றன.
புதிய கற்காலக் கருவிகளிலே நூல் நூற்கும் கருவிகளும் கிடைத்துள்ளன. அவற்றோடு ஆடைகளை மென்மையாக்கும் கருவிகளும் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. முல்லை நிலத்தார் கம்பளி ஆடைகளையும் நெய்தது போலத் தெரிகிறது. தோற்பதனிடு கருவிகளும் கிடைத்துள்ளன. இவற்றிற்கு மேலாக நாணயக் கற்கள் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து புதிய கற்காலத்தில் ஆடை நெய்தல், கம்பளி நெய்தல், தோற் பதனிடுதல், நாணய மாற்று ஆகியவை வழக்கில் இருந்தன என அறியலாம்.
இவ்வித நாகரிக முன்னேற்றம் அடைந்த புதிய கற்கால மனிதன் முதலில் கற்கருவிகளை நன்முறையில் பதப்படுத்தினான்; வேட்டையாடுவதற்கு நாய்களை வளர்க்கத் தொடங்கினான்; உழவினை உயர்ந்த தொழிலெனக் கொண்டான். பழைய கற்கால மனிதன் உடுத்திய தோலாடை, மரவுரி, இலையாடை ஆகியனவற்றைச் சில குறிப்பிட்ட சமயங்களிலேயே புதிய கற்கால மனிதன் பயன்படுத்தினான். பாண்டங்களைப் போல ஆடைகளையும் பல வகை வண்ணங்களைக் கொண்டு நிறம் பெறச் செய்தான். சங்காலும் எலும்பாலும் ஆய பித்தான்கள், வளையல்கள் அக்காலப் பெண்டிர் தம் அணிகலன்களாம். புதிய கற்காலப் பொம்மைகள் சில சேலம் மாவட்டத்திலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பொம்மைகள் மூலம் அக்காலப் பெண்டிர் தம் கலையுணர்வை நன்கு அறியலாம்.
பழைய கற்காலத்தில் ஒருவனே எல்லாத் தொழில்களையும் செய்தான். புதிய கற்காலத்திலோ ஒவ்வொரு மனிதனும் தனித் தனியாக வெவ்வேறு தொழிலைச் செய்யத் தொடங்கினான். மனிதன் தனிநிலையிலிருந்து குடும்பமாக மாறும்பொழுதும் இவ்வாறே ஒவ்வொரு குடும்பமும் தனித்தனித் தொழிலைச் செய்ய முற்பட்டது. இவ்வாறு தொழில் பற்றிப் பிரிவுகள் பல மக்கள் சமுதாயத்திலே ஏற்பட்டன. பின்வந்த மற்றவர் அப்பல்வேறு பிரிவுகட்கும் இடையே பற்பல வேற்றுமைகளைக் கற்பித்து அவற்றை ஒன்று சேராதவாறு நூல்கள் செய்தும், கருத்துக்களைப் பரப்பியும் பார்த்துக்கொண்டனர்.
பழைய கற்கால மக்களை விடப் புதிய கற்கால மக்கள் கொஞ்சம் அதிகமாகக் கலையுணர்ச்சியுடையவராய் இருந்தனர். புதிய கற்கால மனிதன் தன் எதிரே உள்ள ஆற்றைக் கண்டான்; ஊற்றைக் கண்டான்; கடலைக் கண்டான்; பல வகை மண்களைக் கண்டான்; காட்டையும் மேட்டையும் கண்டான். அவன் உள்ளத்திலே பொங்கிய அழகுணர்ச்சிகளைக் கல்லிலும், பாண்டங்களிலும் பல்வகை மண்களாலும் இலைச்சாறாலும் வெளிப்படுத்தினான். பலவகையான மண்பாண்டங்கள் செய்தான். அவற்றிலே ஓவியங்களைப் பல வண்ணத்தால் தீட்டினான். மஞ்சள், சிவப்பு, பழுப்பு, நீலம் ஆகிய பலவகை வண்ணப் பொருட்களைத் தூளாக்கிப் பலவகைப் பாண்டங்களைச் செய்தான். இதே போலப் பலவகைக் கற்களைக் கொண்டு வந்து இடித்து மாவாக்கிக் குகைகளின் மேற்சுவர்களில் அழகொழுகும் ஓவியங்களைத் தீட்டினான். ஓவியந் தீட்டப்பட்ட வளைகளும், பாண்டங்களும் இன்ன பிற பொருட்களும் பல இடங்களில் கிடைத்துள்ளன. கோலம் போடல் இப்புதிய கற்காலத்தில் தோன்றிய வழக்கமாகும்.
பழைய கற்கால மனிதன் இறந்தவரை வீசி எறிந்தான். புதிய கற்கால மனிதனோ இறந்தவரை அமர்ந்த நிலையில் தாழியில் புதைத்தான். தாழியுள் மணல், அரிசி, இறந்தவர் பயன்படுத்திய பல்வகைக் கருவிகள் முதலியனவும் வைக்கப்பட்டன. இத்தகைய பொருட்களை நிறையப் போட்டவுடன் தாழி மண் மூடியால் மூடப்பட்டு, பிறகு ஒரு குழியில் வைக்கப்படும். அக்குழி அதன் பின்னர் ஒரு கற்பலகையால் மூடப்படும். இதோடு நின்றுவிடாது மறுபடியும் மணலிடப்பட்டு மற்றொரு முட்டை வடிவக் கற்பலகை அம்மணல் மீது வைக்கப்படும். அதன் பின்னர் அதனைச் சுற்றிக் கற்கள் ஒரு முழம் அளவிற்கு நடப்படும். இத்தகைய தாழிகள் உடைய இடங்கள் புதுக்கோட்டைப் பகுதியில் நிறைய உள. தாழியின் உயரம் 4 அடி; அகலமோ 3 1/2 அடி. மற்றும் கோவை, பெல்லாரி போன்ற மாவட்டங்களில் சுமைதாங்கி போன்ற உருவில் அமைந்த கல்லறைகள் பல உள.
இனி, புதிய கற்கால மனிதன் பேசிய மொழி யாது எனப் பார்ப்போம். புதிய கற்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தவர் யார்? பழைய கற்கால மக்களின் பரம்பரையினரே புதிய கற்காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து வந்தனர். இவர்கள் பேசிய மொழி திராவிட மொழியே.
புதிய கற்கால மக்களின் சமயம் சைவ சமயமாகும். புதிய கற்காலப் பொருட்கள் பலவற்றுள் சிவலிங்கமும் ஒன்றாகும். இலிங்க வழிபாடு என்பது திராவிடர்களுடையதே. வேத கால ஆரியர்கள் இலிங்க வழிபாட்டைக் குறிக்கவில்லை. ஆனால் திராவிடர்கள் இலிங்க வழிபாட்டைப் போற்றியுள்ளனர். எனவே புதிய கற்காலச் சமயம் சைவ சமயமாகும்.
புதிய கற்கால மக்கள் கூடி வாழத் தொடங்கியமையால் மக்கட் பெருக்கம் மிகுதியாயிற்று. இதன் காரணமாய் ஊர்களும் குடியிருப்புகளும் தோன்றலாயின. ஆங்காங்கே மக்கள் நிலைத்து வாழ ஆரம்பித்தனர். நிலத்தைப் பண்படுத்தி ஆற்று நீரைப் பாய்ச்சி வயல்களில் நெல் விளைவித்தனர். இந்நிலம் நன்செய் எனப்பட்டது. கபிலை ஏற்றம் முதலியவற்றால் நீர் பாய்ச்சப்பெற்ற நிலம் புன்செய் எனப்பட்டது. இந்நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டது. அதனின்றும் உடை நெய்யப்பட்டது. இவ்வாறு நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கிய காரணத்தால் மக்கள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர். இதுவே நாளடைவில் அரச பதவியாயிற்று.
புதிய கற்காலம் போய் எத்தனையோ நூற்றாண்டுகளாய் விட்டன. ஆனால் அக்காலப் பழக்க வழக்கங்கள் இன்னும் நம்மை விட்டகலவில்லை. அக்கால மனிதன் போல் வில்லைக் கொண்டும் கல்லைக் கொண்டும் பறவைகளை அடிக்கிறோம். கனிகளைப் பறிக்கிறோம். இன்னும் ஆட்டுரல் போன்ற கற்கருவிகளைப் பயன்படுத்துகிறோம். தோசை சுடப் பயன்படுவது தோசைக் கல்லாகும். இன்று இது இரும்பாலானதாக இருந்தபோதிலும் அப்பெயர் பழங்காலத்தில் தோசை சுடக் கல்லே பயன்பட்டது என அறிவிக் கிறது. ஆக இன்னும் நாம் புதிய கற்காலப் பழக்க வழக்கங்களையும் பொருள்களையும் முழுதும் மறந்தும் விடவில்லை; துறந்தும் விடவில்லை.
இன்றைய ஆராய்ச்சி
இதுவரை கூறியவற்றால் வரலாறு என்பது பழைய கற்காலத்திலிருந்து தொடங்குகிறது என்பது இனிது விளங்கும். ஆனால் பேராசிரியர் டேர் (Dare) என்பவர் கற்காலத்துக்கு முன் எலும்புக் காலம் ஒன்று உண்டு என்பதைத் தமது ஆராய்ச்சியின் காரணமாய்க் கூறியுள்ளார் என சோகன்சுபர்க் (Johannesburg) செய்தி கூறுவதாக அண்மையில் ‘இந்தியன் எக்ச்பிரசு' (Indian Express) நாளிதழ் வெளியிட்டதை நாம் அறிவோம். எனவே கற்காலத்திற்கு முன்னர் மனிதன் பல், எலும்பு, கொம்புகளைப் பயன்படுத்தி வாழ்ந்து வந்தான் எனவும், அக்காலத்தை எலும்புக் காலம் எனப் பெயரிட்டு அழைத்தல் சாலப்பொருந்தும் எனவும் நாம் அறிகின்றோம்.