Get it on Google Play
Download on the App Store

ரமண மகரிஷியின் போதனைகள்!

ருளாளர் ரமண மகரிஷியின் ஆன்ம போதனைகளையும் புன்முறுவலையும் நெருக்கமாகக் கேட்டுப் பழகியவர்களில் பெரும்பாலோர், அவருக்குரிய ஞான குருகுல மாணவர்களாக இருந்திருக்கிறார்கள். பூசாரி பழனிசாமியாரைப் போல துறவுத் தொண்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதே போல பல அடியவர்கள் ரமணாஸ்ரமத்தில் தங்கி அடிக்கடி ஞானோபதேசங்களையும் கேட்டு அவர்களும் வழிகாட்டிகளாக வாழ்ந்திருக்கின்றார்கள். அவ்வாறு வழிகாட்டியாக வாழ்ந்த ஓர் அடியார் குறித்து வைத்த போதனைகளே கீழ்க்கண்ட உபதேச மொழிகள்.

தீமைகளுக்குக் காரணம் கர்மாவா?

வட இந்தியாவிலே இருந்து ரமணா ஸ்ரமத்துக்கு ஒருவர் வந்தார். அவர் பாட்னா நகர்வாசி. அவர் அருணாசலம் வந்தபோது சில யோகிகளின் வம்படி வழக்குகளிலே சிக்கி சீற்றத்துடன் மகானைக் காண வந்தார். அந்தக் கோபத்தோடு அவர் ரமணரிடம் வாதித்த சம்பவம் இது.

உலகத்தில் ஏன் அதிகமாக தீமைகள் வளர்ந்து வருகின்றன? நல்லவர்களை விட தீயவர்கள் எல்லா வகையிலும் சுகமாக வாழ்கிறார்களே ஏன்? இவற்றுக்கெல்லாம் காரணம் எது? கர்மாவா? தீமைகள் பலவற்றுக்கும் துன்பங்கள் பலவற்றுக்கும் காரணமான கர்மா, இவ்வாறு பலரிடம் பலவிதமாக ஏன் இருக்கிறது? என்று வட இந்தியர் கேட்டார்.

கர்மா பற்றி ரமண மகரிஷி

கோபமாக வந்திருந்த அந்த வட இந்தியரின் முகத்தை ஒருதரம் உற்றுப் பார்த்தார். அவர்களது உள்ள உணர்ச்சிகளை மகரிஷி நன்கு புரிந்து கொண்ட பின்பு, அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் அன்புடன் பதில் கூறினார்.

கர்மாவைப் பற்றிக் கேட்டீர்கள். அது யாருடைய கர்மா? இரண்டு வகைகளிலே கர்மா உண்டாகிறது. ஒன்று இறைவனுடையது. மற்றொன்று மனிதனுடையது. கடவுளுடையது தனிப்பட்டது. அதனால் அது கர்மாவிலே இருந்து விடுபட்டது. மனிதன் வேறுபட்டவன். எனவே கர்மா பலவகையானதாகின்றது.

தன்னிலிருந்து தானே மனிதன் பிரிந்து கொண்டால், வேறுபட்ட மனிதர்கள் இருக்க மாட்டார்கள். வேறுபட்ட பல கர்மாக்களும் இருக்கா. இன்னல்களும், துன்பங்களும் மறையும் சொர்க்கத்தைக் காண்பவன் யார் தெரியுமா? தன்னிலிருந்து தானே பிரிந்தவன் தான். அவனால்தான் காண முடியும் சொர்க்கத்தை! மற்றவர்கள் நரகத்தைத்தான் காண்பார்கள்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தீமையானது விரைவில் அல்லது சற்று தாமதத்தில் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பது சான்றோர்கள் அனுபவம். இவ்வாறு நடப்பது ஏன்?

தான் என்பது எல்லோரிடத்தும் ஒன்றே. மற்றவரை நீ பார்க்கும்போது, நீயே உன்னை, அவர்கள் உருவங்களிலே பார்த்துக் கொள்கிறாய். நீ மற்றவர்களிடம் அன்போடு பழக வேண்டும். ஏனென்றால் அவனுள் நீ இருக்கிறாய். நீ உன்னை நேசிப்பது போல மற்றவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதன் உட்பொருள் இது.

இதைக் கேட்ட வடநாட்டுக் குழுவினர் மனநிறைவு கொண்டார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக மற்றோர் அன்பர் மகரிஷியைப் பார்த்து, ‘சுவாமி, மரண பயத்தை நீக்கிக் கொள்ள ஏதாவது மார்க்கமுண்டா என்று கேட்டார்!’ அதற்கு சுவாமி:

மரண பயம் நீங்க மார்க்கம்

அன்பனே! எப்போது உன்னைப் பயம் பற்றிக் கொள்கிறது? கனவு காணும் தூக்கத்தின் போதா? அல்லது மயக்கத்தில் உனது உடலை நீயே காண முடியாத நிலையிலா? என்று சிந்திக்க வேண்டும் நன்றாக நீ விழித்துக் கொண்டிருக்கும் போது தான் சாவு பயம் உன்னைப் பற்றுகிறது. உனது உடலைப் பற்றி நீ நினைக்கும் போது பயப்படுகிறாய்! கனவு இல்லாத தூக்கத்தின் போது, இருப்பது போல் நீ நீயாகவே இருந்து, மற்றவர்களைப் பாராமலிருந்தால் மரண பயம் உன்னைப் பீடிக்காது, அண்டாது.

மறுபிறப்பு மகரிஷி கருத்து

கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் நகரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் மறுபிறப்பு பற்றி அறிய விரும்பி ஒரு வினா தொடுத்தார் மகரிஷியிடம்.

‘இறப்புக்கும் - மறுபிறப்புக்கும் இடையில் 50 முதல் 10,000 ஆண்டுகள் இடைவெளி இருக்கும்’ என்று கூறப்படுகிறதே ஏன்? என்று அவர் கேட்டார்.

ஒரு விதமான மன விழிப்புத்தன்மைக்கும், மற்றொரு நிலையில் மனோ விழிப்புத் தன்மைக்கும் அளவு கோலாக உள்ளதற்கு எந்தத் தொடர்பும் கிடையாது. எல்லாவித அளவு கோல்களும் கற்பனைதான். எனவே, எல்லாமே தவறானவை. சிலர் நீண்ட காலத்தையும் வேறு சிலர் குறைந்த காலத்தையும் எடுத்துக் கொள்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இதுபோல் வருவதும் செல்வதும் ஆன்மா அன்று என்பதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய மனம் தான் அப்படித் தோன்றச் செய்கின்றது.

எந்த நிலையிலிருந்து இயங்க வேண்டியதிருந்தாலும், மனமானது அதற்கேற்றாற்போல ஓர் உடலை உண்டாக்கிக் கொள்கிறது. இந்த உலகில் ஒரு மானுட உடல், கனவுலகில் ஒருகனவு உடல். இந்தக் கனவு உடல் கனவுலகில் பெய்யும் மழையால் நனைகிறது. நோயால் தாக்குறுகிறது. மரணத்திற்குப் பிறகு அது சிலகாலம் இயங்காமல் இருக்கிறது. கனவில்லாத் தூக்கம் போல.

எனவே, அது உடலில்லாமல் இருக்கிறது. சீக்கிரமே அது புதிய உலகில், புதிய உடலில் இயங்க ஆரம்பிக்கின்றது. ‘மறுபிறப்பு’ என்று சொல்லப்படுகின்ற மற்றோர் உடலில் இயங்கும் வரை இவ்வாறு செய்கிறது. ஆனால், தன்னைத்தானே உணர்ந்து கொண்ட ஞானியின் மனமானது. மானிட உடலின் அனைத்து இயக்கங்களையும் நிறுத்திவிட்ட காரணத்தால், மரணத்தினால் அவன் பாதிக்கப்படுவதில்லை. அவனது மனமானது மறுபடியும் எழுந்து பிறப்பையும், மறுபிறப்பையும், வாழ்க்கையையும் மரணத்தையும் ஏற்படுத்துவதில்லை.

உண்மையான இறப்போ அல்லது உண்மையான பிறப்போ கிடையாது என்பது இதனால் நன்றாகப் புரிகிறது. மனந்தான் இதுபோன்ற பிரமிப்புக்களை உருவாக்குகின்றது. ஆத்மா ஞானம் அடையும் வரை, இவ்வகையான உண்மை போன்ற பிரமைகள் தொடர்கின்றன. 

தம்முடைய மகனை இழந்துவிட்ட வேதனையில் கடவுளிடமும், மகரிஷியிடமும் நம்பிக்கை குன்றிய ஒரு குரு குல அடியார் நீண்ட நாட்களாக ஆசிரமத்துக்கு வராமலிருந்தார். பிறகு ரமண மகரிஷியிடம் இது குறித்துப் பேசி முடிவு எடுக்கப்படும் என்ற தீர்மானத்துடன் அவரைக் காண வந்தார். ரமணரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்ற முன் கூட்டிய திட்டத்துடனே அவர் வருகை தந்தார்.

வந்தவர்: சுவாமி, நம்பிக்கை என்றால் என்ன? என்றார்.

மகரிஷி: நம்பிக்கை, அன்பு, கருணை எல்லாம் உன்னுடைய தன்மைகளே நீதான், என்றார்.

வந்தவர்: அப்படியானால், நம்பிக்கை, கருணை எல்லாம் தன்னைத்தானே உணர்ந்து கொண்டதால் வருகின்றன. எனவே, நம்பிக்கை, அன்பு என்று நாம் அழைத்தவை மாறுபடும். உண்மையாகவும் இருக்காது. அப்படித்தானே?

“ஆமாம்.”

“துன்பம் என்பது ஒரு நினைவுதானா?”

“எல்லா நினைவுகளுமே துன்பங்கள்தாம்”

“இன்பம் தரக்கூடிய நினைவுகளும் துன்பம் அளிப்பவையா?”

“ஆமாம், களங்கமற்ற, மகிழ்ச்சியான, தன்னைத்தானே உணருதலிலிருந்து ஒருவனுடைய கவனத்தைத் திருப்புவதனால், அவையும் துன்பம் தருபவையே.”

“மகரிஷியை அருணாசலத்திற்கு வரவழைத்தது என்ன?”

“உன்னை இங்கே வரச் செய்தது எது?”

“அதன் மூலமாக, நீங்கள் மதுரையிலே இருந்து புறப்பட்ட நாள் முதல் இன்றுவரை உங்களுடைய ஆன்ம நோக்கில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று நான் அறிய விரும்புகிறேன்.”

“எதுவும் இல்லை. எவ்வித மாறுதலும் இல்லாமல் இதே அனுபவம் தொடர்ந்து உள்ளது.”

“அப்படியானால், அருணாசல சுவாமியைப் புகழ்ந்து பாடல்களை மகரிஷி எழுதக் காரணம் என்ன? அவருக்காகவா? அல்லது மக்களுக்காகவா?”

“நான் ஏன் எழுதினேன் என்று எனக்கே தெரியாது. உங்களுக்காக என்றும் கூட ஒரு வேளை இருக்கலாம்.”

“வாழ்க்கை என்றால் என்ன?”

“சாதாரணமாகக் கூறுவதானால், வாழ்க்கை , என்பது உடல், ஆன்ம நோக்கில் கடைசியாகத் தன்னைத்தானே அறிந்து கொள்ளுதல், எவ்விதம் நீ, ஒன்றை நோக்குகிறாயோ, அதைப் பொறுத்தது அது.”

“மரணம் என்பது என்ன?”

“ஒருவனுடைய கடைசியான உண்மைத் தன்மை.”

“தற்கொலை செய்து கொள்வது தவறான காரியமா?”

“ஒரு பாவமும் அறியாத உ.டலைக் கொல்வது மிகப் பெரிய தவறு. தொல்லைகளுக்கு இருப்பிடமான மனதைத்தான் தற்கொலை செய்ய வேண்டும். எதையும் உணராத உடலை அல்ல. மனம்தான் உண்மையான குற்றவாளி. கவலைகளுக்கு இருப்பிடமாக இருப்பதனால் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது. ஆனால், தவறான கருத்து காரணமாகப் பாவமறியாத உடல்தான் தண்டிக்கப்படுகிறது.”

மறுபிறப்பு பற்றி மகரிஷி கருத்து

தன்னுடைய கணவரை இழந்த ஒரு பெண்மணி மகரிஷியிடம் மறுபிறப்புப் பற்றிக் கேட்ட கேள்வி இது.

“மறுபிறப்பு இருக்கிறதா?”

“பிறப்பு என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?”

“தெரியுமே. நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், வருங்காலத்தில் இருப்பேனா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.”

“இறந்த காலம்....! நிகழ்காலம்... எதிர்காலம்.”

ஆமாம், நேற்றைய முடிவுதான் இன்று. இன்று என்பது நாளை எதிர்காலம் என்பது இன்றைய முடிவாகும். நான் சொல்வது சரிதானா?

“இறந்த காலம் என்றோ, எதிர்காலம் என்றோ எதுவும் கிடையாது. நிகழ்காலம் மட்டுமே இருக்கிறது. நேற்று என்பது நீ அனுபவிக்கும் போது அது நிகழ்காலமாக இருந்தது. அதுபோன்றே நாளையும் நீ அதை அனுபவிக்கும்போது நிகழ்காலமாய் இருக்கும். நிகழ் காலத்தின்போதுதான், நீ அனுபவிக்கிறாய், அனுபவத்திற்கு அப்பால் எதுவும் இல்லை.”

“அப்படியானால், கடந்த காலம், எதிர்காலம் என்பவை எல்லாம் வெறும் கற்பனையா?”

“ஆமாம். நிகழ்காலம் என்பது வெறும் கற்பனைதான். நோத்தைப் பற்றிய நினைவு எல்லாம் மனத்தளவில் இருப்பதால், நிகழ்காலமும் கற்பனையே. அதுபோலவே, வான்வெளியும் கற்பனைதான். ஆகையால், நேரத்தாலும், வானவெளியாலும் நிகழும் பிறப்பும், மறுபிறப்பும் கற்பனையைத் தவிர வேறில்லை.”

உலகம் எவ்வாறு தோன்றியது?

எல்லாத் துறைகளிலும் நன்கு அறிவு நுட்பம் கொண்ட ஒரு வட இந்தியர், “இந்த உலகம் எவ்வாறு தோன்றியது?” என்ற வினாவைத் தொடுத்தார். அதற்கு என்ன காரணம்? என்றொரு துணை வினாவையும் கேட்டார். அதற்கு மகரிஷி அளித்த பதில்.

“உனக்கென்று சொந்தக் கவலைகள் எதுவுமே கிடையாதா?”

இருக்கின்றது. ஆகையால்தான். நான் வாழ்க்கை, இறப்பு பற்றி அறிய விரும்புகிறேன்.

“ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்போமா? யாருக்கு வாழ்வு? உயிர் யாருக்கு இருக்கிறது? உதாரணமாக உயிர் இருக்கிறதா உனக்கு?”

“நான், என்னுடைய உடலைப் பார்ப்பதால், நான் உயிருடன் இருப்பதாக உணர்கின்றேன்.”

“நீ, எப்போதுமே உனது உடலைப் பார்க்கிறாயா? நீ, தூங்கச் செல்லும்போது, அந்த உடலுக்கும் இந்த உலகத்திற்கும் என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரியுமா?”

“அது எனக்குத் தெரியாது. மர்மமாக இருக்கிறது அது.”

“உனது உடலுக்கு என்ன நேருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத காரணத்தால், நீ இல்லை என்று சொல்ல முடியுமா?”

“எனக்குத் தெரியாது.”

“அப்படியானால், நீ இப்போது இருக்கிறாய் என்பதை எப்படி அறிந்து கொள்கிறாய்?”

“நான் இப்போது உணர்வுடன் இருக்கிறேன். நான் நகருகிறேன். சிந்தனை செய்கிறேன்; ஆகையால், நான் இருப்பதை உணர்கிறேன்.”

“திருவண்ணாமலையில் நீ படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறபோதும் கூட, உனது உடல் நகர்ந்து கொண்டும், சிந்தனை செய்து கொண்டும், பல இடங்களில் சுற்றிக் கொண்டும் இருப்பதை, நீ பார்க்கிறாய்-இல்லையா?”

“இது மர்மமாக இருக்கிறது. நான் என்றும் உள்ளவன்-இருக்கிறேன் என்றும், என்னுடையதுதான் என்னும் பெருமை மட்டும் மாறுவதாகச் சொல்லலாமா?”

“அப்படியானால், நீ இரண்டு ஆட்களாக இருப்பதாய் நினைக்கிறாய். அப்படி இருப்பது முடியக் கூடிய காரியமா? நம்பக் கூடிய சம்பவமா?”

“அவ்வாறானால், எனக்குக் கருணை கூர்ந்து உண்மைக்கு வழி காட்டுங்கள்.”

சினிமா, நிழற்படம் காண்பிக்கப்படும் திரை போல உண்மை என்றும் அழிவில்லாதது. படங்கள் அதில் காட்டப்படும் போது, மறைந்து இருக்கிறது. படம் நிறுத்தப்பட்ட பிறகு, அங்கிருந்த உண்மைப் பொருளான திரை நன்றாகத் தெரிகிறது. அதுபோல, மனிதர்கள், எண்ணங்கள், பொருட்கள், நிகழ்ச்சிகள் எல்லாமே படங்கள்தான். அவை சுத்தமான உணர்வென்னம் திரையில் ஓடும் உருவங்களும் நிகழ்ச்சிகளும் மறைந்துபோகும். உணர்வு மட்டுமே மிஞ்சி என்றைக்கும் இருக்கும். என்ன புரிந்ததா? அல்லது மீண்டும் ஏதாவது சந்தேகம் வருகின்றதா?”

“புரிந்தது சுவாமி; உணர்ந்து கொண்டேன் உண்மையை.”