Get it on Google Play
Download on the App Store

வேளை வந்து விட்டது!

 

 

←அத்தியாயம் 30: தெய்வம் ஆயினாள்!

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: "வேளை வந்து விட்டது!"

அத்தியாயம் 32: இறுதிக் கட்டம்→

 

 

 

 

 


529பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: "வேளை வந்து விட்டது!"கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 31[தொகு]
"வேளை வந்து விட்டது!"


சென்ற அத்தியாயத்தில் கூறிய நிகழ்ச்சிகளோடு இந்தக் கதையை முடித்துவிடக் கூடுமானால், எவ்வளவோ நன்றாயிருக்கும். நேயர்களில் சிலர் ஒருவேளை அவ்விதம் எதிர் பார்க்கவுங்கூடும். ஆனால் அது இயலாத காரியமாயிருக்கிறது. அதே தினத்தில் ஏறக்குறைய அதே நேரத்தில் கடம்பூர் சம்புவரையரின் மாளிகையில் நடந்த பயங்கர நிகழ்ச்சியைப் பற்றி நாம் இனிச் சொல்ல வேண்டியிருக்கிறது. 
நந்தினி அவளுடைய அந்தப்புர அறையில் தனியாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த பரபரப்பை அவளுடைய முகத்தோற்றம் காட்டியது. அவளுடைய கண்ணில் ஓர் அபூர்வமான மின்னொளி சுடர்விட்டுத் தோன்றி மறைந்தது. அந்த அறைக்குள்ளே வருவதற்கு அமைந்திருந்த பல வழிகளையும் அவள் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த வழிகளில் ஏதாவது காலடிச் சத்தம் கேட்கிறதா என்று அவளுடைய செவிகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. "வேளை நெருங்கி விட்டது!" என்று அவளுடைய உதடுகள் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சில சமயம் அவ்விதம் முணுமுணுத்த அவளுடைய உதடுகள் துடித்தன. இன்னும் சில சமயம் அவளுடைய கண்ணிமைகளும், புருவங்களும் துடித்தன. ஒவ்வொரு தடவை அவள் உடம்பு முழுவதுமே ஆவேசக்காரனுடைய தேகம் துடிப்பதுபோல் பதறித் துடிதுடித்தது. 
நந்தினி படுப்பதற்காக அமைந்திருந்த பஞ்சணை மெத்தை விரித்த கட்டிலில் நாலு பக்கமும் திரைச்சீலைகள் தொங்கின. அவை கட்டிலை அடியோடு மறைத்துக் கொண்டிருந்தன. நந்தினி ஒரு பக்கத்துத் திரைச் சீலையை மெதுவாகத் தூக்கினாள். படுக்கையில் நீளவாட்டில் வைத்திருந்த கொலை வாளைப் பார்த்தாள் கொல்லன் உலைக்களத்தில் ஜொலிக்கும் தீயினாலேயே செய்த வாளைப் போல் அது மின்னிட்டுத் திகழ்ந்தது. அத்தீயினால் மெத்தையும் கட்டிலும் திரைச் சீலைகளும் எரிந்து போகவில்லை என்பது ஆச்சரியத்துக் கிடமாயிருந்தது. இதை நினைத்துப் பார்த்துத்தான், அது செந்தழலினால் செய்த வாள் அல்லவென்றும், இரும்பினால் செய்த வாள்தான் என்றும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. 
நந்தினி அந்த வாளைக் கையில் எடுத்தாள். தூக்கிப் பிடித்தாள். தீபத்தின் ஒளியில் அதை இன்னும் நன்றாக மின்னிடும்படி செய்து பார்த்து உவந்தாள். பிறகு, அதைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டாள் கன்னத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு முத்தமிட்டாள். அந்த வாளுடன் உறையாடவும் செய்தாள். "தெய்வ வாளே! நீ உன்னுடைய வேலையைச் செய்யவேண்டிய வேளை நெருங்கிவிட்டது! என்னை நீ கைவிடமாட்டாய் அல்லவா? இல்லை, நீ என்னைக் கைவிட மாட்டாய்! என்னுடைய கைகளேதான் என்னைக் கைவிட்டால் விடும்!" என்று கூறினாள். 
பிறகு, தன் கரங்களைப் பார்த்து, "கரங்களே! நீங்கள் உறுதியாக இருப்பீர்களா? சீச்சீ! இப்போதே இப்படி நடுங்குகிறீர்களே? சமயம் வரும்போது என்ன செய்வீர்கள்? ஆம், ஆம்! உங்களை நம்புவதில் பயனில்லை. வேறு இரண்டு கரங்களைத்தான் இன்றைக்கு நான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்!" என்றாள். 
திடீரென்று நந்தியின் உடம்பு முழுவதும் ஒரு தடவை சிலிர்த்தது. வெறிக்கனல் பாய்ந்த கண்களினால் மேல் நோக்காகப் பார்த்தாள். "ஆகா! நீ வந்துவிட்டாயா? வா! வா! சரியான சமயத்திலேதான் வந்தாய்! என் அன்பே! என் அரசே! வா! வீர பாண்டியன் தலையே! ஏன் கூரை ஓரத்திலேயே இருக்கிறாய்? இறங்கி வா! இங்கே யாரும் இல்லை! உன் அடியாளைத் தவிர வேறு யாரும் இல்லை! ஏன் இப்படி விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்! 'இந்தக் கண்டத்துக்குத் தப்பி உயிர் பிழைத்தால் உன்னைப் பாண்டிய சிங்காசனத்தில் ஏற்றி வைப்பேன் என்று சொன்னாயே! அதை நான் மறக்கவில்லை. உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறக்கவில்லை. அதை நினைவேற்றும் வேளை நெருங்கிவிட்டது. அதற்காக நான் எத்தனைக் காலம் பொறுமையாகக் காத்திருந்தேன்! என்னென்ன வேஷங்கள் போட்டேன்? - எல்லாம் நீ பார்த்துக் கொண்டுதானிருந்தாய்! இப்போது பார்த்துக் கொண்டிரு! கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிரு. நீதான் கண் கொட்டுவதே கிடையாதே! நானும் கண்ணை மூடித் தூங்க முடியாமல் செய்து வருகிறாய்! இன்று இரவு உனக்குப் பழி வாங்கி விட்டேனானால், அப்புறமாவது என்னைத் தூங்கவிடுவாய் அல்லவா?... மாட்டாயா? பாண்டிய சிங்காசனத்தில் நான் ஏறி அமர்வதைப் பார்த்த பிறகுதான் போவாயா? என்னுடைய வாக்குறுதியை நான் நிறைவேற்றினால், உன்னுடைய வாக்குறுதியை நீ நிறைவேற்றுவதாகச் சொல்கிறாய்?... இல்லை, இல்லை! எனக்கு சிங்காசனமும் வேண்டாம், மணி மகுடமும் வேண்டாம். உன் மகன் என்று யாரோ ஒரு சிறுவனை கொண்டு வந்தார்கள். அவனைச் சிங்காசனத்தில் ஏற்றி மணி மகுடம் சூட்டியாயிற்று. உனக்குப் பழிக்குப் பழி வாங்கி விட்டேனானால், அதைக் கொண்டு நீ திருப்தியடைவாய்! பின்னராவது, என்னை விட்டுச் செல்வாய்! போரில் இறந்தவர்கள் எல்லாரும் எந்த வீர சொர்க்கத்துக்குப் போகிறார்களோ, அந்த வீர சொர்க்கத்துக்கு நீயும் போவாய்! அங்கே என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள்! அவர்களில் ஒருத்தியை... என்ன? மாட்டேன் என்கிறாயா?... சரி, சரி! அதைப் பற்றிப் பிறகு பேசிக் கொள்வோம்! என் அன்பே! யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது. நீ மறைந்துவிடு!...நானும் இந்தப் பழிவாங்கும் வாளை மறைத்து வைக்கிறேன்..." 
அச்சமயம் வாசற்படிக்கு அருகில் உண்மையாகவே காலடிச் சத்தம் கேட்டது. நந்தினி வாளைக் கட்டிலில் வைத்துக் கொண்டிருக்கும்போதே மணிமேகலை உள்ளே வந்தாள். 
சற்று முன் வெறி பிடித்துப் புலம்பிய நந்தினி ஒரு கணநேரத்தில் முற்றும் மாறுதல் அடைந்தவளாய் "நீதானா, மணிமேகலை? வா!" என்றாள். அவள் குரலில் அமைதி நிலவியது. 
"அக்கா! இது என்ன? எப்போதும் வாளும் கையுமாகவே இருக்கிறீர்களே?" என்றாள் மணிமேகலை. 
"பின், என்ன செய்வது? ஆண் பிள்ளைகள் இவ்வளவு தூர்த்தர்களாயிருந்தால், நாம் வாளைத் துணைகொள்ள வேண்டியது தானே?" 
"தேவி! நான் ஒருத்தி துணை இருக்கிறேனே? என்னிடம் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா?" 
"உன்னிடம் நம்பிக்கை இல்லாமலா என்னுடைய அந்தரங்கத்தையெல்லாம் உன்னிடம் சொன்னேன், மணிமேகலை! இந்த உலகிலேயே நான் நம்பிக்கை வைத்திருப்பவள் நீ ஒருத்திதான். ஆனாலும், உன் கூடப் பிறந்த சகோதரனுக்கு எதிராக உன்னால் ஒன்றும் செய்ய முடியாதல்லவா?" 
"அக்கா! எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இல்லை, என்று முடிவு செய்து கொண்டு விட்டேன்..." 
"ஏன் இவ்விதம் சொல்கிறாய்? எப்படியும் அவன் உன் சகோதரன்..." 
"சகோதரனாவது சகோதரியாவது? அந்த உறவெல்லாம் வெறும் பிரமை என்று தெரிந்து கொண்டேன். கந்தமாறன் என்னுடைய விருப்பத்துக்கு எதிராக, - தன்னுடைய சௌகரியத்துக்காக, - என்னை வற்புறுத்திக் கட்டிக் கொடுக்கப் பார்க்கிறான்! உண்மையான சகோதர பாசம் இருந்தால், இப்படிச் செய்வானா?..." 
"தங்காய்! உன்னுடைய நன்மைக்காகவே அவன் உன்னை இளவரசருக்கு மணம் செய்து கொடுக்க விரும்பலாம் அல்லவா?" 
"ஆமாம்; என்னுடைய நன்மை தீமையை இவன் கண்டுவிட்டானாக்கும்! உண்மையில், என்னுடைய நன்மையை அவன் கருதவேயில்லை, அக்கா!" 
"ஈழம் முதல் வட பெண்ணை வரையில் பரந்த சோழ ராஜ்யத்தின் சிங்காசனத்தில் நீ பட்ட மகிஷியாக வீற்றிருக்க வேண்டும் என்று உன் தமையன் விரும்புவது உன்னுடைய நன்மைக்கு அல்லவா?" 
"இல்லவே இல்லை! நான் தஞ்சாவூர் ராணியானால், இவன் முதன் மந்திரியாகலாம் அல்லது பெரிய பழுவேட்டரையரைப் போல் தனாதிகாரியாகலாம் என்ற ஆசைதான் காரணம் அக்கா! அக்கா...!" என்று மணிமேகலை மேலே சொல்லத் தயங்கினாள். 
"சொல், மணிமேகலை! உன் மனதில் உள்ளது எதுவானாலும் தாராளமாய்ச் சொல்லலாம். என்னிடம் உனக்குள்ள அன்பைக் குறித்து நீ சொன்னதெல்லாம் உண்மைதானே!" 
"அக்கா! அதைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டாம். இந்த உலகத்திலேயே நான் அன்பு வைத்திருப்பது இரண்டு பேரிடந்தான். ஒருவர் நாங்கள்..." 
"இன்னொருவர் யார்?" 
"உங்கள் மனதுக்கு அது தெரியும். என்னை ஏன் கேட்கிறீர்கள்...?" 
"தங்காய்! உனக்கு அது சந்தோஷமாயிருக்கும் என்று நினைத்தேன். கதைகளும் காவியங்களும் நீ கேட்டதில்லையா? ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உதயமானால் அதைப் பற்றி அவள் யாரிடமாவது பேச விரும்புவது இயல்பு அல்லவா? அந்தரங்கத் தோழி என்பது பின் எதற்காக...?" 
"அது உண்மைதான், அக்கா! என் அந்தரங்கத்தையும், தங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்போது நான் தங்களிடம் அவசரமாக வந்தது வேறு ஒரு செய்தி சொல்வதற்காக. மிக்க கவலை தரும் செய்தி, அக்கா!" 
நந்தினி திடுக்கிட்டு, "என்ன? என்ன?" என்று கேட்டாள். 
எத்தனையோ காலமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது என்று நிறைவேறலாம் என்று எண்ணியிருந்த காரியத்துக்கு ஏதாவது தடங்கல் ஏற்படுமோ என்ற பீதி அவள் மனத்தில் குடி கொண்டது. அதன் அறிகுறி அவள் முகத்திலும் தோன்றியது. 
"அக்கா! தனாதிகாரி பழுவேட்டரையர் இன்னும் தஞ்சாவூருக்குப் போய்ச் சேரவில்லையாம். வழியில்..." 
"வழியில் என்ன நேர்ந்தது? ஒருவேளை மனத்தை மாற்றிக் கொண்டு திரும்பி விட்டாரா?" என்று நந்தினி கேட்ட கேள்வியில் பீதி குறைந்திருக்கவில்லை. 
"அப்படி அவர் திரும்பியிருந்தால் நன்றாயிருக்கும், அக்கா! அன்றைக்கு நாம் ஏரித் தீவில் இருந்தபோது புயல் அடித்ததல்லவா? அந்தப் புயல் கொள்ளிடத்திலும் அப்பாலும் ரொம்பக் கடுமையாக அடித்ததாம். பழுவேட்டரையர் கொள்ளிடத்தில் படகில் சென்றபோது புயல் பலமாக இருந்ததாம்..." 
"அப்புறம்" என்று நந்தினி பரபரப்புடனேதான் கேட்டாள். ஆயினும் கவலைத் தொனி சிறிது குறைந்திருந்தது. 
"அக்கரை சேரும் சமயத்தில் படகு கவிழ்ந்து விட்டதாம்!" 
"ஐயோ!" 
"தப்பிக் கரை ஏறியவர்கள் கொள்ளிடக் கரையில் எங்கும் தேடிப் பார்த்தார்கள். தங்கள் கணவர் மட்டும் அகப்படவில்லை!" என்றாள் மணிமேகலை. 
இந்தச் செய்தியைக் கேட்டதும் நந்தினி விம்மி அழுவாள் என்று மணிமேகலை எதிர்பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லத் தயாராயிருந்தாள். ஆனால் நந்தினியோ அப்படியொன்றும் செய்யவில்லை. சிறிதும் படபடப்புக் காட்டாமல், அவநம்பிக்கை தொனித்த குரலில், "இந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள். 
"பழுவேட்டரையரோடு போன ஆட்களில் ஒருவன் திரும்பி வந்திருக்கிறான். அவன் என் தமையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். நானே என் காதினால் கேட்டேன், அக்கா! தங்களிடம் இந்தச் செய்தியை எப்படித் தெரிவிப்பது என்று என் தமையன் தயங்கி, இளவரசரிடம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தான். நான் எப்படியாவது தங்களிடம் சொல்லி விடுவது என்று ஓடி வந்தேன்..." 
இவ்விதம் கூறிய மணிமேகலை துயரம் தாங்காமல் விம்மத் தொடங்கினாள். நந்தினி அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு, "என் கண்ணே! என்னிடம் நீ எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று தெரிந்து கொண்டேன். ஆனால், நீ வருத்தப்பட வேண்டாம்!" என்றாள். 
மணிமேகலை சிறிது வியப்புடனேயே நந்தினியை நிமிர்ந்து பார்த்தாள். 'இவளுடைய நெஞ்சு எவ்வளவு கல் நெஞ்சு?' என்று அவள் மனத்தில் தோன்றிய எண்ணத்தை நந்தினி தெரிந்து கொண்டாள். 
"தங்காய்! துக்கச் செய்தியைக் கூறி எனக்கு ஆறுதல் சொல்லுவதற்காக நீ ஓடிவந்தாய். ஆனால் உனக்கு நான் தேறுதல் கூற வேண்டியிருக்கிறது. நீ வருத்தப்பட வேண்டாம். என் கணவருடைய உயிருக்கு ஆபத்து ஒன்றும் வரவில்லை என்பது நிச்சயம். அப்படி ஏதாவது நேர்ந்திருந்தால் என் நெஞ்சே எனக்கு உணர்த்தியிருக்கும். அதனாலேதான் நான் கவலைப்படவில்லை. ஆனால் நீ கேள்விப்பட்டதை இன்னும் விவரமாய்ச் சொல்! என் மனத்தில் வேறொரு சந்தேகம் உதித்திருக்கிறது..." 
"என்ன சந்தேகம், அக்கா?" 
"உன் தமையனும், அந்தப் பல்லவ பார்த்திபேந்திரனும் சேர்ந்து என் கணவருக்கு ஏதேனும் கெடுதல் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களோ என்று எண்ணுகிறேன். அதற்கு, முன் ஜாக்கிரதையாக இம்மாதிரி ஒரு செய்தியை அவர்களே தயாரித்திருக்கலாமல்லவா?" 
"எனக்கு விளங்கவில்லை, அக்கா! அவர்கள் ஏன் பழுவேட்டரையருக்குத் தீங்கு செய்ய வேண்டும்?" 
"நீ பச்சைக் குழந்தையாகவே இருக்கிறாய், மணிமேகலை! உன் தமையனும் பார்த்திபேந்திரனும் என் மீது துர் எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா? அதற்காகத்தான் இந்த வாளை எப்போதும் அருகிலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லவில்லையா?..." 
"சொன்னீர்கள்; அதனால் கந்தமாறனை இனிமேல் என் தமையன் என்று சொல்லவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அந்தப் பாதகனை என் உடன் பிறந்தவனாக நான் இனிக் கருதமாட்டேன். இருந்தாலும் அவர்கள் பழுவேட்டரையருக்கு ஏன் தீங்கு செய்ய வேண்டும்?" 
"தங்காய்! இதுகூடவா நீ தெரிந்து கொள்ள முடியவில்லை? கிழவரைக் கலியாணம் செய்துகொண்டு தவிக்கும் நான், அவர் போய்விட்டால் மனத்திற்குள் சந்தோஷப்படுவேன். பிறகு அவர்களுடைய துர்நோக்கத்துக்கும் இணங்குவேன் என்றுதான். உன் தமையன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்திருந்தால் அவனை என் வீட்டில் வைத்திருந்து சகோதரனைப் போல் கருதி பணிவிடை செய்திருக்க மாட்டேன். யமலோகத்தின் வாசல் வரை சென்றவனைக் காப்பாற்றியிருக்க மாட்டேன்..." 
"அக்கா! இனி நான் தங்களை விட்டு ஒரு கணமும் பிரிய மாட்டேன். அந்த இருவரில் ஒருவர் இங்கு வந்தால், என்னுடைய கையாலேயே அவர்களைக் கொன்று விடுவேன்!" 
"மணிமேகலை? அந்தக் கவலை உனக்கு வேண்டாம். என்னை நானே காப்பாற்றிக் கொள்வேன். கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் என் அருகில் நெருங்கினால், என்றும் மறக்காதபடி அவர்களுக்குப் புத்தி கற்பித்து அனுப்புவேன். அவர்களிடம் எனக்குச் சிறிதும் பயமில்லை. முரட்டு இளவரசரைப் பற்றி மட்டுந்தான் கொஞ்சம் பயம் இருந்தது. நல்லவேளையாக அந்த அபாயத்தினின்று என்னை நீயே காப்பாற்றிவிட்டாய்!" 
"நான் தங்களைக் காப்பாற்றினேனா? அது எப்படி?" 
"இளவரசரின் உள்ளத்தை நீ கவர்ந்து விட்டாய் என்பதை அறியவில்லையா, மணிமேகலை! வாணர் குலத்து வீரரைக் கையைப் பிடித்து இழுத்து அப்பால் தள்ளிவிட்டு உன்னை அவர் ஏரித் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றியதன் காரணம் என்ன? அதற்குப் பிறகும் அவரை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். உன் மனதிற்கு அது தெரியவில்லையா, மணிமேகலை?" 
"தெரியாமல் என்ன? தெரிந்துதானிருக்கிறது. இளவரசரை நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. அவர் அருகில் வந்தால் என் உடம்பு நடுங்குகிறது. என் தமையன் என்று சொல்லிக் கொள்ளும் கிராதகன் இருக்கிறான் அல்லவா? அவன் வேறு ஓயாமல் என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்.." 
"இளவரசரை நீ மணந்து கொள்ளவேண்டும் என்று தானே?" 
"ஆம்; தனியாக என்னை ஒரு கணம் பார்த்தால் போதும், உடனே எனக்கு அவன் உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறான். அவனுடைய தொந்தரவுக்காகவே..." 
"அவனுடைய தொந்தரவுக்காக இளவரசரை மணந்து கொண்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டாயா?" 
"தாங்கள்கூட இவ்விதம் சொல்லுகிறீர்களே?" என்று மணிமேகலை விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் கண்ணீர் அருவி பெருகிற்று. 
நந்தினி அவளை சமாதானப்படுத்தினாள். "ஏதோ விளையாட்டுக்காகச் சொன்னேன். அதற்காக இப்படி அழ ஆரம்பித்துவிட்டாயே?" என்று சொல்லிக் கண்ணீரைத் துடைத்தாள். 
மணிமேகலை சிறிது சமாதானம் அடைந்ததும் "என் கண்ணே! உன் மனத்தை நன்றாகச் சோதித்துப் பார்த்துப் பதில் சொல். உண்மையாகவே நீ இளவரசர் கரிகாலரை விரும்பவில்லையா? அவரை மணந்து கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷியாக இருக்க ஆசைப்படவில்லையா?" என்றாள் நந்தினி. 
"ஒரு தடவை கேட்டாலும் நூறு தடவை கேட்டாலும் என் பதில் ஒன்றுதான். அக்கா! அந்த ஆசை எனக்குக் கிடையவே கிடையாது." 
"வாணர் குலத்து வந்தியத்தேவரிடம் உன் மனத்தைப் பறிக்கொடுத்திருக்கிறாய் என்பதும் உண்மை தானே?" 
"ஆம், அக்கா! ஆனால் அவருடைய மனது எப்படியிருக்கிறதோ?" 
"அவருடைய மனது எப்படியிருந்தால் என்ன? அவர் உயிரோடிருந்தால் அல்லவா அவர் மனத்தைப் பற்றிக் கேட்க வேண்டும்?" 
மணிமேகலை திடுக்கிட்டு, "என்ன சொல்கிறீர்கள், அக்கா!" என்றாள். 
"மணிமேகலை! நீ இன்னும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லை. உன்னுடைய நிலைமையையும், உன் அன்புக்குரியவனுடைய நிலைமையையும் உணரவில்லை. என்னைப் பற்றி நீ கவலைப்படுகிறாய்; என் கணவரைப் பற்றிக் கவலைப்படுகிறாய். எங்களைப் பற்றி உண்மையில் கவலைப்படவேண்டியதேயில்லை. என் கணவர் எப்பேர்ப்பட்டவர் என்பது உனக்குத் தெரியும். அவர் வாயசைந்தால் இந்த நாடே அசையும். சுந்தரச் சோழ சக்கரவர்த்தி அவர் இட்ட கோட்டைத் தாண்ட மாட்டார். என் கணவர் வார்த்தைக்கு மாறாக முதன் மந்திரி வார்த்தையையும் கேட்க மாட்டார். அவருடைய சொந்தப் பெண்டு பிள்ளைகளின் பேச்சுக்கும் செவி கொடுக்கமாட்டார். பழுவேட்டரையரை வயதான கிழவர் என்று உன் தமையனைப் போன்ற மூடர்கள் எண்ணிப் பரிகாசமும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு மூச்சு விட்டால், உன் தமையனையும், பார்த்திபேந்திரனையும் போன்ற நூறு வாலிபர்கள் மல்லாந்து விழுவார்கள். ஆகையால் பழுவேட்டரையருக்கு யாரும் தீங்கு செய்துவிட முடியாது. என் கண்ணே! என்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் எனக்குத் தெரியும். இதைக் காட்டிலும் எத்தனையோ இக்கட்டான நிலைமைகளில் என்னை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையாகவே இப்போது நான் கவலைப்படுவதெல்லாம் உன்னைப் பற்றித்தான். 'இந்தப் பெண் நம்மிடம் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளே? இவளுக்கு ஒன்றும் நேராமலிருக்க வேண்டுமே?' என்று கவலைப்படுகிறேன். நீ இந்த அறைக்குள் சற்றுமுன் வந்தபோது கூட உன்னைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்..." 
"தாங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை, அக்கா! எனக்கு அப்படி என்ன அபாயம் வந்து விடும்?" 
"பேதைப் பெண்ணே! வேண்டாத புருஷனுக்கு வாழ்க்கைப்படுவதைக் காட்டிலும் பெண்களுக்கு நேரக்கூடிய அபாயம் வேறு என்ன இருக்க முடியும்?" 
"அது ஒரு நாளும் நடவாத காரியம்." 
"உன் தமையன் உன்னை இளவரசருக்கு மணம் செய்விப்பது என்று தீர்மானம் செய்து விட்டான்; உன் தந்தையும் சம்மதித்து விட்டார்." 
"அவர்களுடைய தீர்மானமும் சம்மதமும் என்னை என்ன செய்யும்? நான் சம்மதித்தால்தானே?" 
"இப்படிக் குழந்தைபோல் பேசுகிறாய்! சிற்றரசர் குலத்துப் பெண்களைக் கலியாணம் செய்து கொடுப்பது, அந்தப் பெண்களின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டுதான் உலகத்தில் நடைபெறுகிறதா? அதிலும், மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியின் மூத்தகுமாரர், - பட்டத்துக்கு இளவரசர், - உன்னை மணந்து கொள்ள விரும்பினால், அதற்கு யார் தடை சொல்ல முடியும்?" 
"ஏன்? என்னால் முடியும். இளவரசரிடம் நேரே சொல்லி விடுவேன்." 
"என்ன சொல்லுவாய்?" 
"அவரை மணந்துகொள்ள எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்வேன்." 
"காரணம் கேட்டால்?" 
"உண்மையான காரணத்தைத்தான் சொல்வேன். என் மனம் அவருடைய சிநேகிதர் வல்லவரையரிடம் ஈடுபட்டு விட்டது என்று சொல்வேன்." 
"பேதைப் பெண்ணே! இதை நீ சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது." 
"தெரிந்திருந்தால் என்னை ஏன் வற்புறுத்துகிறார்கள்? அப்படி அதிகமாக வற்புறுத்தினால் இதோ நானும் ஒரு கத்தி வைத்திருக்கிறேன் அக்கா!" என்று சொல்லி மணிமேகலை தன் இடுப்பில் செருகியிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்துக் காட்டினாள். 
"என் அருமைத் தங்கையே! உன் அறியாமையைக் கண்டு ஒரு பக்கம் எனக்கு அழுகை வருகிறது. இன்னொரு பக்கம் சிரிப்பும் வருகிறது." 
"அப்படி என்ன நான் உளறி விட்டேன் அக்கா!" 
"உன்னை யாரோ வற்புறுத்தப் போவதாக எண்ணியிருக்கிறாய். உன்னுடைய சம்மதத்தைக் கேட்பார்கள் என்றும் நினைத்திருக்கிறாய். அவ்விதம் ஒன்றும் அவர்கள் செய்யப் போவதில்லை. நீ இளவரசரை மணந்து கொள்ளத் தடையாயிருக்கிற காரணத்தை நீக்கிவிடப் போகிறார்கள்!" 
"என்ன சொல்லுகிறீர்கள்!" 
"நீ யாரிடம் உன் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறாயோ, அவருடைய உயிருக்கு அபாயம் நெருங்கியிருக்கிறது என்று சொல்லுகிறேன்...!" 
"ஐயையோ" 
"உன் தமையன் ஏற்கெனவே அவருடைய பழைய சிநேகிதன் மீது துவேஷம் கொண்டிருக்கிறான். இந்த அரண்மனையில் சில மாதங்களுக்கு முன்னால் சிற்றரசர்கள் கூடிச் செய்த சதியாலோசனையைப் பற்றி இளவரசரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டான் என்று அவனுக்குக் கோபம். தன் முதுகிலே குத்திக் கொல்ல முயற்சித்ததாக வேறு குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறான். வேறொரு காரணத்தினால் பார்த்திபேந்திரனுக்கும் உன் காதலன் பேரில் அளவில்லாத கோபம்..." 
"இவர்களுடைய கோபம் அவரை என்ன செய்துவிடும். அக்கா! அவர் சுத்த வீரர் அல்லவா!" 
"சுத்த வீரராயிருந்தால் என்ன? திடீரென்று சூழ்ந்து கொள்ளும் பல கொலைகாரர்களுக்கு மத்தியில் கையில் ஆயுதம் ஒன்றும் இல்லாத ஒரு சுத்த வீரன் என்ன செய்ய முடியும்?..." 
"ஐயோ! அவரைக் கொன்று விடுவார்கள் என்றா சொல்லுகிறீர்கள்?" 
"கொல்லமாட்டார்கள். கண்டதுண்டமாக வெட்டி நரிகளுக்கும் நாய்களுக்கும் போட்டு விடுவார்கள்..." 
"ஐயோ! என்ன கர்ண கடூரம்!" 
"கேட்பதற்கே உனக்குக் கடூரமாயிருக்கிறதே? உண்மையில் நடந்து விட்டால், என்ன பாடுபடுவாய்?" 
"அக்கா! இப்போதே என் உயிரும் உள்ளமும் துடிக்கின்றன. நிஜமாக, அப்படியும் செய்து விடுவார்களா? அவர் இளவரசருடைய அத்தியந்த சிநேகிதர் ஆயிற்றே?" 
"அத்தியந்த சிநேகிதர்கள் கொடிய பகைவர்களாக மாறுவதைப் பற்றி நீ கேட்டதில்லையா, தங்காய்! உன் தமையனும் பார்த்திபேந்திரனும் அப்படியெல்லாம் இளவரசரிடம் தூபம் போட்டு விட்டிருக்கிறார்கள்..." 
"சண்டாளர்கள்! இதெல்லாம் தங்களுக்கு..." 
"எனக்கு எப்படித் தெரிந்தது என்றுதானே கேட்கிறாய்? இன்று பகலில் பார்த்திபேந்திரன் என்னிடம் விடைபெற்று செல்லும் வியாஜ்யத்தை வைத்துக்கொண்டு வந்திருந்தான்..." 
"அந்தப் பாதகன் எங்கே போகிறான்?" 
"அதிக தூரம் போகவில்லை. திருக்கோவலூர்க் கிழவன் மலையமான் ஒரு பெரிய சைன்யத்தைத் திரட்டிக்கொண்டு இந்த ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்று நீ கேள்விப்பட்டாய் அல்லவா?" 
"கேள்விப்பட்டேன், அது என்னத்திற்காக என்று ஆச்சரியப்பட்டேன்." 
"அதுவும் உன் நிமித்தமாகத்தானாம்! இன்று மத்தியானம் இளவரசர் அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தாராம். 'மணிமேலையை எனக்கு மணம் செய்து கொடுக்காவிட்டால், மலையமான் சைன்யம் வந்தவுடன் இந்தக் கோட்டை - அரண்மனை எல்லாவற்றையும் தகர்த்துத் தரைமட்டமாக்கி விடப் போகிறேன்!' என்றானாம். அப்போதுதான் உன் தமையன் 'அதற்குத் தடையாயிருப்பது நாங்கள் அல்ல; உங்கள் சிநேகிதன் வந்தியத்தேவன்தான்' என்றாராம். 'அந்தத் தடையை நீக்க உங்களால் முடியாதா?' என்று இளவரசர் கேட்டாராம். 'கட்டளை அளித்தால் முடியும்' என்றானாம் உன் அண்ணன். என் அருமைச் சகோதரி! பார்த்திபேந்திரனிடம் மேலும் பேச்சுக் கொடுத்துச் சில விவரங்களை அறிந்தேன். உன் ஆருயிர்க் காதலனுடைய உயிருக்கு ஆபத்து நெருங்கியிருப்பது நிச்சயம். நீ உடனே முயற்சி எடுக்காவிட்டால், கலியாணம் ஆவதற்கு முன்பே கணவனை இழந்து விடுவாய்!" என்றாள் நந்தினி. 
இதைக் கேட்ட மணிமேகலையின் உடலும் உள்ளமும் துடிதுடித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை அல்லவா? 
"ஐயோ! அவருக்கு எப்படியாவது உடனே எச்சரிக்கை செய்ய வேண்டுமே!" என்று தட்டுத் தடுமாறிக் கொண்டே கூறினாள். 
"எச்சரிக்கை செய்யலாம் ஆனால், உன் காதலன் சுத்த வீரன் என்று நீ தானே சற்றுமுன் கூறினாய்? அவனுடைய உயிருக்கு அபாயம் என்று கேட்டுப் பயந்து ஓடி விடுவானா? மாட்டான்! இன்னும் அவனுடைய பிடிவாதம் அதிகமாகும்" என்றாள் நந்தினி. 
"தாங்கள் தான் யோசனை சொல்லவேண்டும். என் தலை சுற்றுகிறது. என்ன செய்கிறது என்று தெரியவில்லை" என்றாள் மணிமேகலை. 
"நீ இங்கே வரும்போது அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்ல வேளையாக நீ ஒரு செய்தி கொண்டு வந்தாய். அதிலிருந்து, வல்லவரையரைக் காப்பாற்ற ஒரு யோசனை தோன்றியது." 
"நான் கொண்டு வந்த செய்தியிலிருந்தா? அது என்ன செய்தி?" 
"பழுவேட்டரையருடைய படகு கவிழ்ந்ததென்றும் பிறகு அவரைப் பற்றித் தகவல் தெரியவில்லை என்றும் சொன்னாய் அல்லவா?" 
"ஆமாம்!" 
"வந்தியத்தேவரிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக அவர் போய் என் கணவரைப் பற்றிய உண்மை தெரிந்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நீயும் எனக்காகப் பரிந்து பேசு. இரண்டு பேதைப் பெண்களின் வேண்டுகோளை அந்த வீரர் புறக்கணிக்க மாட்டார். அவரை உடனே இந்த இடத்திலிருந்து வெளியே அனுப்புவதுதான் அவர் உயிரைக் காப்பாற்றும் வழி. வேறு உபாயம் ஒன்றுமில்லை. அவர் போன பிறகு நீ உன் தமையனாரிடமும் தந்தையிடமும் இளவரசரிடமும் தைரியமாக உன் மனத்தை வெளியிட்டுப் பேசலாம். நானும் உனக்காகப் பேசுகிறேன். 'இஷ்டமில்லாத பெண்ணை வற்புறுத்துவது சோழ குலத்தில் பிறந்தவர்களுக்கு அழகு அல்ல' என்று சொல்லுகிறேன்." 
"தங்கள் பேச்சையும் அவர்கள் கேட்காவிட்டால், என் கையில் கத்தி இருக்கிறது!" 
"சரி, சரி! இப்போது முதலில் உன் காதலரை வெளியேற்றிக் காப்பாற்ற முயல்வோம். அவர் இருக்குமிடம் உனக்குத் தெரியும் அல்லவா? நீ நேரில் அவரைப் பார்க்க முடியாவிட்டால், உன் தோழி சந்திரமதியை அனுப்பு. இல்லாவிடில், இடும்பன்காரியை அனுப்பு, எப்படியாவது அவரை இங்கே அழைத்துக்கொண்டு வா!" 
"அவர் போகச் சம்மதித்தாலும் இங்கேயிருந்து எப்படி வெளியில் போவார், அக்கா! என் அண்ணன் தடுத்து நிறுத்தி விட்டால்...?" 
"உன் அண்ணனுக்கு ஏன் தெரிய வேண்டும், மணிமேகலை, முதன் முதலில் அவர் இந்த அறைக்குள் வந்து உன்னைத் திடுக்கிடச் செய்தாரே? அந்தச் சுரங்க வழியிலேயே அனுப்பி விட்டால் போகிறது! சீக்கிரம் போ, தங்காய்! வந்தியத்தேவர் இனி இந்தக் கோட்டையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய உயிருக்கு அபாயம் அதிகமாகும். உன் தமையன் ஏவும் கொலைகாரர்கள் எப்போது அவரைத் தாக்குவார்கள் என்று நமக்கு என்ன தெரியும்?" 
"இதோ போகிறேன், அக்கா! எப்படியாவது அவரை அழைத்துக் கொண்டுதான் திரும்பி வருவேன்" என்று சொல்லி விட்டு மணிமேகலை சென்றாள். 
அவளுடைய காலடிச் சத்தம் மறைந்ததும், பக்கத்திலிருந்த வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது. 
நந்தினி இரகசியக் கதவின் அருகில் சென்று, அதன் உட்கதவைத் திறந்தாள். 
இருட்டில் ஒரு கோரமான முகம் இலேசாகத் தெரிந்தது. 
"மந்திரவாதி! வந்துவிட்டாயா?" என்றாள் நந்தினி. 
"வந்துவிட்டேன், ராணி! வேளையும் வந்துவிட்டது" என்றான் ரவிதாஸன்.

 

 

 

பொன்னியின் செல்வன்

Contributor
Chapters
ஆடித்திருநாள் ஆழ்வார்க்கடியான் நம்பி விண்ணகரக் கோயில் கடம்பூர் மாளிகை குரவைக் கூத்து நடுநிசிக் கூட்டம் சிரிப்பும் கொதிப்பும் பல்லக்கில் யார்? வழிநடைப் பேச்சு குடந்தை சோதிடர் திடும்பிரவேசம் நந்தினி வளர்பிறைச் சந்திரன் ஆற்றங்கரை முதலை வானதியின் ஜாலம் அருள்மொழிவர்மர் குதிரை பாய்ந்தது! இடும்பன்காரி ரணகள அரண்யம் முதற் பகைவன்! திரை சலசலத்தது! வேளக்காரப் படை அமுதனின் அன்னை காக்கையும் குயிலும் கோட்டைக்குள்ளே அபாயம்! அபாயம்! ஆஸ்தானப் புலவர்கள் இரும்புப் பிடி நம் விருந்தாளி சித்திர மண்டபம் திருடர்! திருடர்! பரிசோதனை மரத்தில் ஒரு மங்கை! லதா மண்டபம் மந்திரவாதி ஞாபகம் இருக்கிறதா? சிம்மங்கள் மோதின! நந்தினியின் ஊடல் உலகம் சுழன்றது! இருள் மாளிகை நிலவறை நட்புக்கு அழகா? பழையாறை எல்லாம் அவள் வேலை! குற்றம் செய்த ஒற்றன் மக்களின் முணுமுணுப்பு ஈசான சிவபட்டர் நீர்ச் சுழலும் விழிச் சுழலும் விந்தையிலும் விந்தை! பராந்தகர் ஆதுரசாலை மாமல்லபுரம் கிழவன் கல்யாணம் மலையமான் ஆவேசம் நஞ்சினும் கொடியாள் நந்தினியின் காதலன் அந்தப்புர சம்பவம் மாய மோகினி பூங்குழலி சேற்றுப் பள்ளம் சித்தப் பிரமை நள்ளிரவில் நடுக்கடலில் மறைந்த மண்டபம் சமுத்திர குமாரி பூதத் தீவு இது இலங்கை! அநிருத்தப் பிரமராயர் தெரிஞ்ச கைக்கோளப் படை குருவும் சீடனும் பொன்னியின் செல்வன் இரண்டு பூரண சந்திரர்கள் இரவில் ஒரு துயரக் குரல் சுந்தர சோழரின் பிரமை மாண்டவர் மீள்வதுண்டோ? துரோகத்தில் எது கொடியது? ஒற்றன் பிடிபட்டான்! இரு பெண் புலிகள் பாதாளச் சிறை சிறையில் சேந்தன் அமுதன் நந்தினியின் நிருபம் அனலில் இட்ட மெழுகு மாதோட்ட மாநகரம் இரத்தம் கேட்ட கத்தி காட்டுப் பாதை இராஜபாட்டை யானைப் பாகன் துவந்த யுத்தம் ஏலேல சிங்கன் கூத்து கிள்ளி வளவன் யானை சிலை சொன்ன செய்தி அநுராதபுரம் இலங்கைச் சிங்காதனம் தகுதிக்கு மதிப்பு உண்டா? காவேரி அம்மன் சித்திரங்கள் பேசின இதோ யுத்தம்! மந்திராலோசனை அதோ பாருங்கள்! பூங்குழலியின் கத்தி நான் குற்றவாளி! யானை மிரண்டது! சிறைக் கப்பல் பொங்கிய உள்ளம் பேய்ச் சிரிப்பு கலபதியின் மரணம் கப்பல் வேட்டை ஆபத்துதவிகள் சுழிக் காற்று உடைந்த படகு அபய கீதம் கோடிக்கரையில் மோக வலை ஆந்தையின் குரல் தாழைப் புதர் ராக்கம்மாள் பூங்குழலியின் திகில் காட்டில் எழுந்த கீதம் ஐயோ! பிசாசு! ஓடத்தில் மூவர் சூடாமணி விஹாரம் கொல்லுப்பட்டறை தீயிலே தள்ளு! விஷ பாணம் பறக்கும் குதிரை காலாமுகர்கள் மதுராந்தகத் தேவர் திருநாரையூர் நம்பி நிமித்தக்காரன் சமயசஞ்சீவி தாயும் மகனும் நீயும் ஒரு தாயா? அது என்ன சத்தம்? வானதி நினைவு வந்தது முதன்மந்திரி வந்தார்! அநிருத்தரின் பிரார்த்தனை குந்தவையின் திகைப்பு ஒற்றனுக்கு ஒற்றன் வானதியின் மாறுதல் இரு சிறைகள் பசும் பட்டாடை பிரம்மாவின் தலை வானதி கேட்ட உதவி தீவர்த்தி அணைந்தது! வேளை நெருங்கிவிட்டது! இருளில் ஓர் உருவம் வேஷம் வெளிப்பட்டது வானதிக்கு நேர்ந்தது கஜேந்திர மோட்சம் ஆனைமங்கலம் மதுராந்தகன் நன்றி சுரம் தெளிந்தது நந்தி மண்டபம் நந்தி வளர்ந்தது! வானதிக்கு அபாயம் வானதி சிரித்தாள் கெடிலக் கரையில் பாட்டனும், பேரனும் பருந்தும், புறாவும் ஐயனார் கோவில் பயங்கர நிலவறை மணிமேகலை வாலில்லாக் குரங்கு இருட்டில் இரு கரங்கள் நாய் குரைத்தது! மனித வேட்டை தோழனா? துரோகியா? வேல் முறிந்தது! மணிமேகலையின் அந்தரங்கம் கனவு பலிக்குமா? இராஜோபசாரம் மலையமானின் கவலை பூங்குழலியின் ஆசை அம்பு பாய்ந்தது! சிரிப்பும் நெருப்பும் மீண்டும் வைத்தியர் மகன் பல்லக்கு ஏறும் பாக்கியம் அநிருத்தரின் ஏமாற்றம் ஊமையும் பேசுமோ? இளவரசியின் அவசரம் அநிருத்தரின் குற்றம் வீதியில் குழப்பம் பொக்கிஷ நிலவறையில் பாதாளப் பாதை இராஜ தரிசனம் குற்றச் சாட்டு முன்மாலைக் கனவு ஏன் என்னை வதைக்கிறாய்? சோழர் குல தெய்வம் இராவணனுக்கு ஆபத்து! சக்கரவர்த்தியின் கோபம் பின்னிரவில் கடம்பூரில் கலக்கம் நந்தினி மறுத்தாள் விபத்து வருகிறது! நீர் விளையாட்டு கரிகாலன் கொலை வெறி அவள் பெண் அல்ல! புலி எங்கே? காதலும் பழியும் நீ என் சகோதரி! படகு நகர்ந்தது! மூன்று குரல்கள் வந்தான் முருகய்யன்! கடல் பொங்கியது! நந்தி முழுகியது தாயைப் பிரிந்த கன்று முருகய்யன் அழுதான்! மக்கள் குதூகலம் படகில் பழுவேட்டரையர் கரை உடைந்தது! கண் திறந்தது! மண்டபம் விழுந்தது தூமகேது மறைந்தது! குந்தவை கேட்ட வரம் வானதியின் சபதம் கூரை மிதந்தது! பூங்குழலி பாய்ந்தாள்! யானை எறிந்தது! ஏமாந்த யானைப் பாகன் திருநல்லம் பறவைக் குஞ்சுகள் உயிர் ஊசலாடியது! மகிழ்ச்சியும், துயரமும் படைகள் வந்தன! மந்திராலோசனை கோட்டை வாசலில் வானதியின் பிரவேசம் நில் இங்கே! கோஷம் எழுந்தது! சந்தேக விபரீதம் தெய்வம் ஆயினாள்! வேளை வந்து விட்டது! இறுதிக் கட்டம் ஐயோ! பிசாசு! போய் விடுங்கள்! குரங்குப் பிடி! பாண்டிமாதேவி இரும்பு நெஞ்சு இளகியது! நடித்தது நாடகமா? காரிருள் சூழ்ந்தது! நான் கொன்றேன்! பாயுதே தீ! மலையமான் துயரம் மீண்டும் கொள்ளிடக்கரை மலைக் குகையில் விடை கொடுங்கள்! ஆழ்வானுக்கு ஆபத்து! நந்தினியின் மறைவு நீ என் மகன் அல்ல! துர்பாக்கியசாலி குந்தவையின் கலக்கம் மணிமேகலை கேட்ட வரம் விடுதலைக்குத் தடை வானதியின் யோசனை பினாகபாணியின் வேலை பைத்தியக்காரன் சமய சஞ்சீவி விடுதலை கருத்திருமன் கதை சகுனத் தடை அமுதனின் கவலை நிச்சயதார்த்தம் ஈட்டி பாய்ந்தது! பினாகபாணியின் வஞ்சம் உண்மையைச் சொல்! ஐயோ, பிசாசு! மதுராந்தகன் மறைவு மண்ணரசு நான் வேண்டேன் ஒரு நாள் இளவரசர்! வாளுக்கு வாள்! கோட்டைக் காவல் திருவயிறு உதித்த தேவர் தியாகப் போட்டி வானதியின் திருட்டுத்தனம் நானே முடி சூடுவேன்! விபரீத விளைவு வடவாறு திரும்பியது! நெடுமரம் சாய்ந்தது! நண்பர்கள் பிரிவு சாலையில் சந்திப்பு நிலமகள் காதலன் பூனையும் கிளியும் சீனத்து வர்த்தகர்கள் அப்பர் கண்ட காட்சி பட்டாபிஷேகப் பரிசு சிற்பத்தின் உட்பொருள் கனவா? நனவா? புலவரின் திகைப்பு பட்டாபிஷேகம் வஸந்தம் வந்தது பொன்மழை பொழிந்தது! மலர் உதிர்ந்தது!