பணத்துக்காக பணத்தின் உதவி
ஒரு ராஜாவின் அரண்மனைக்கு முன்னால் ஒரு சந்நியாசி வந்து தினமும் நின்று, "என்னிடம் அபார புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆனால் அதை உபயோகிக்கிற மாதிரி யாருமே வருவதில்லை. சில காரணங்களுக்காக நான் அதை உபயோகிக்க முடியாதவனாக இருக்கிறேன்," என்று சொல்வார். இந்த விஷயம் ராஜாவிற்கு தெரிய வந்தது. ஒரு நாள் ராஜா சந்நியாசியை அரண்மனைக்கு வரவழைத்து, "நீ ஏன் தினமும் ஒரே விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க? இதில என்ன நோக்கம் இருக்கு? கொஞ்சம் விரிவா சொல்லு," என்றார்.
"ராஜனே, நீங்க நம்பிக்கை வெச்சும் நான் எவ்வளோ கேக்குறேனோ அவ்வளோ பணம் எனக்கு குடுத்தா சில நாள்ல குடுத்ததுல பத்து மடங்கு பணத்தை நான் திரும்ப குடுக்க முடியும். மூலதன பணத்தொகையை நான் எவ்வளோ பெருக்குவேன்னா உங்க கருவூலம் நிரம்பி வழியும்," என்று சந்நியாசி பெரிய நம்பிக்கையோட சொன்னார்.
மந்திரி ராஜா காதுல மெதுவா, "மகாராஜா, இதுல ஏதோ ஆபத்து இருக்குன்னு நினைக்கிறேன். நீங்க நம்பிக்கை வைக்காதீங்க," என்றார். ஆனா ராஜா மனசுல சந்நியாசிக்கு பணம் குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு. அதனால அவர் கேட்ட தொகைய குடுத்து அனுப்பி வெச்சாரு.
வருஷம் கழிச்சி சந்நியாசி திரும்ப வந்து ராஜாவ பார்த்து, "உங்களுக்கு ஞாபகம் இருக்கா மகாராஜா? போன வருஷம் நீங்க என்னோட தேவைக்கு ஏற்ப பணம் கொடுப்பேன்னு வாக்கு குடுத்திருந்தீங்க. என்னோட திட்டத்த நிறைவேற்ற எனக்கு இன்னும் பணம் வேணும்," என்றார். மந்திரி வேண்டாம்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும் ராஜா அவர் எவ்வளோ கேட்டாரோ அவ்வளோ பணம் கொடுத்தாரு. வருஷம் கழிச்சி திரும்ப வந்து, "என்னோட திட்டம் இப்போ கடைசி கட்டத்துல இருக்கு. பணத்துக்கு பற்றாக்குறையா இருக்கு. அதனால திரும்ப வந்திருக்கேன். எனக்கு இன்னும் பணம் வேணும்," என்றார்.
ராஜா இந்த தடவையும் நிறைய பணம் குடுத்து அனுப்பி வெச்சாரு. மந்திரி இந்த தடவையும் ராஜா பணம் குடுக்கறத எதிர்த்தாரு. ஒரு வருஷம் கழிச்சி சந்நியாசி திரும்ப வந்தாரு. "என்ன, இன்னும் பணம் வேணுமா?" ராஜா கேட்டாரு. "இல்ல மகாராஜா, என்னோட திட்டம் முடிஞ்சிருச்சு. இப்போ நீங்க மந்திரிகள கூட்டிக்கிட்டு என்னோட வரணும். உங்க பணத்தோட உதவியால எவ்வளோ பெரிய கருவூலத்த கண்டுபிடிச்சிருக்கேன்னு பார்க்கணும்."
சந்நியாசியோட போறதுக்கு ராஜா உடனே ரெடி ஆயிட்டாரு. ஆனா மந்திரி, "அவர் உங்கள ரெண்டு பேர மட்டும் தான் கூப்பிடுறாரு. அவர் கூட நீங்க ரெண்டு பேரும் மட்டும் போறது பாதுகாப்பா இருக்காது," என்றார்.
"அவரோட புத்தியில இருக்குற அதிசயத்த நான் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன். பெரிய ஆசையோட, தைரியத்தோட, பொறுமையோட நான் அவர்ட்ட நடந்துக்கிட்டேன். நான் அவருக்கு பயந்திருந்தா, இவ்வளவு பணம் குடுத்திருப்பேனா?" ராஜா மந்திரிக்கு சுட்டிக்காட்டினாரு. ஆரம்பத்துல இருந்தே மந்திரிக்கு சந்நியாசி மேல சந்தேகம் இருந்தது, இது சந்நியாசிக்கு தெரிஞ்சிருச்சு. அதனால அவரு மந்திரிய பார்த்து, "மந்திரிஜி, உங்க மனசுல ஏதாவது தப்பான சந்தேகம் இருந்தா உங்க பாதுகாவலர்கள கூட்டிக்கிட்டு வாங்க," என்றார்.
ஆனா ராஜா திட்டவட்டமா மறுத்துட்டாரு. "வேணாம், நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் வருவோம் உன் கூட."
ரெண்டு பேரும் சந்நியாசியோட புறப்பட்டாங்க. இருந்தும் மந்திரி தன்னோட ரெண்டு வீரர்கள மறைமுகமா கூட்டிக்கிட்டு போனாரு. சந்நியாசி, ராஜா, மந்திரி இந்த மூணு பேரும் சேர்ந்து நகரம், நதி, வனம், மலை எல்லாம் தாண்டி கடல்கரைக்கு வந்தாங்க. அங்க ஒரு சின்ன படகு இருந்தது. அதுல மூணு பேரும் உட்கார்ந்தாங்க. படகு ஓட்டுனர தவிர வேற யாருக்கும் அதுல இடம் இல்ல. படகு ஒரு தீவுல போயி நின்னுச்சு. அங்க நாலாபக்கமும் தூர தூரமா சாம்பல் படிஞ்சு இருந்தது. கொக்குங்க வட்டமடிச்சிக்கிட்டு இருந்துச்சு. சாம்பல் நடுவுல ஒரு பாத இருந்துச்சு. அதுல அவங்க நடக்க ஆரம்பிச்சாங்க. "இது ஏதோ சூனிய தேசமா இருக்குற மாதிரி தெரியுது. நீ எங்க எங்கள கூட்டிட்டு போற ரே சந்நியாசி?" மந்திரி பயத்தோட அவரோட வாள உருவிக்கிட்டு கேட்டாரு.
"பயப்படற மாதிரி ஒண்ணும் இல்ல. இது சூனிய தேசம் இல்ல. நிறைய பணமும் சொத்தும் இருக்குற ஒரு சின்ன தீவு. நிறைய பேர பார்த்தா கொக்குங்க பயந்து போயிரும். அதனால தான் உங்க பாதுகாவலர்கள கரையோரம் வெயிட் பண்ண சொன்னேன்," சந்நியாசி மந்திரிக்கு சொன்னாரு.
நடந்துக்கிட்டே சந்நியாசி ஒரு இடத்துல நின்னாரு. அங்க ஒரு இரும்பு கதவு இருந்துச்சு. சந்நியாசி கதவ திறந்து ராஜாவ உள்ள போக சொன்னாரு. உள்ள போனதும் கீழ போக படிக்கட்டு இருந்துச்சு. ராஜா தைரியமா தனியா உள்ள போனாரு. அங்க பெரிய குகையில முத்துக்களோட கிடங்கு இருந்துச்சு. ராஜா அதை பார்த்து ஆச்சரியப்பட்டாரு. கண்ண விரிச்சிட்டு அவர் அங்க சுத்தி சுத்தி வந்தாரு. அங்க விலைமதிக்க முடியாத முத்துக்கள் குவியல் குவியலா இருந்துச்சு. அத ரொம்ப நேரம் பார்த்துக்கிட்டு இருந்தாரு. ரொம்ப நேரம் ராஜா மேல வரல, உடனே மந்திரிக்கு திரும்ப சந்தேகம் வந்துச்சு. மந்திரி சந்நியாசிய பிடிச்சி அவரு வாள உருவினாரு. உடனே ராஜா உள்ள இருந்து வந்து மந்திரிய பார்த்து, "போ, நீயும் போய் பார்த்துட்டு வா," என்றார்.
மந்திரி கீழ போனதும் அவருக்கும் அதிர்ச்சியா இருந்துச்சு. சந்நியாசிய சந்தேகம் பட்டதுல தன்னோட தப்பு தெரிஞ்சது. சந்நியாசி என்ன சொன்னாரோ அது மாதிரி செஞ்சி காட்டுனாரு. மேல வந்து மந்திரி சந்நியாசிய மன்னிப்பு கேட்டாரு. ராஜா சந்நியாசிகிட்ட முத்துகளோட ரகசியத்த பத்தி கேட்டாரு. சந்நியாசி விரிவா சொன்னாரு. அவரு சொன்னாரு, "என்னோட பேரு சதானந்தா, நான் ஒரு வியாபாரி. கடல்ல கப்பல்ல என்னோட சரக்க வெச்சு நிறைய தீவுகளுக்கு போவேன். அப்போ இந்த தீவ பத்தின ஒரு ரகசியம் எனக்கு தெரிஞ்சது. தீவோட நாலா பக்கமும் சின்ன சின்ன பாறைங்க இருக்கு. கடல் பொங்கும்போதும் வத்தும்போதும் இந்த பாறைங்க நல்லா தெரியும். இந்த பாறைகள்ல கணக்கில்லாத சிப்பிகள் இருக்கு. சிப்பிக்குள்ள இருக்குற மீனுக்காக கொக்குங்க அத தூக்கிக்கிட்டு வரும். அப்புறம் இந்த பாறைல உட்காரும். சிப்பிக்குள்ள பளபளக்குற முத்துக்கள் இருக்கும். இந்த விலைமதிப்பில்லாத முத்துக்கள நான் சேகரிக்கணும்னு நினைச்சேன். ஆனா துரதிர்ஷ்டவசமா ஒரு விபத்துல என்னோட மனைவியும் குழந்தைகளும் இறந்துட்டாங்க. இந்த அதிர்ச்சிக்கு அப்புறம் வாழ்க்கையில நொடிஞ்சு போயிட்டேன். இருந்தும் இந்த தீவுல இருக்குற முத்துக்கள் மேல என்னோட மனசு போச்சு. இந்த முத்துக்கள பத்தின என்னோட ஆசை போறவரைக்கும் நான் உண்மையான துறவியா இருக்க முடியாதுன்னு தோணுச்சு. அதனால உங்கள்ட்ட பொருளாதார உதவி கேட்டேன். உங்க பணத்த உபயோகப்படுத்தி இந்த பூமிக்கு அடியில இருக்கிற கிடங்க உருவாக்குனேன். இங்க எல்லாமே சாம்பலா இருக்கு. சாம்பலுக்கு கீழ ஒளிஞ்சிக்கிட்டு இருக்குற முத்து கொக்குங்களுக்கு தெரியாது. அதனால அதுங்க திரும்ப திரும்ப சிப்பிகள எடுத்துட்டு வரும். அப்புறம் கொஞ்ச பேரு உதவி செஞ்சு சிப்பிக்குள்ள இருக்குற முத்துகள எடுத்து பாதாள அறையில பத்திரமா வெச்சேன்."
"நேரடியா பார்த்ததுக்கு அப்புறம் தான் என்னோட வார்த்தைய நீங்க நம்புவீங்கன்னு எனக்கு தெரியும். அதனால தான் இந்த எல்லா திட்டத்தையும் உங்ககிட்ட ரகசியமா வெச்சிருந்தேன். நான் என்ன வாக்கு குடுத்தேனோ அதை நான் நிறைவேற்றிட்டேன். இப்போ நீங்கதான் இந்த முத்துக்களுக்கு சொந்தக்காரங்க. இப்போ எனக்கு வாழ்க்கைய பத்தி கொஞ்சமும் ஆசை இல்ல. இனிமே அமைதியா தவம் செய்யணும்னு ஆசைப்படுறேன். நீங்களும் உங்க மக்களும் சந்தோஷமா இருங்க."
இவ்வளவு சொல்லிட்டு ராஜா கிட்ட முத்துக்கள் இருக்குற எல்லா கருவூலத்தையும் கொடுத்துட்டு சந்நியாசி அங்க இருந்து போயிட்டாரு.