திருடர்களின் விருந்து
பீமசங்கர் என்ற மனிதன் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றான். திருமணம் முடிந்து மாலை நேரத்தில் திரும்பி வந்தான். ஒரு காட்டை கடந்து செல்ல வேண்டியிருந்தது. போகும்போது திடீரென பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் நனையாமல் இருக்க அருகில் ஏதாவது தங்குமிடம் இருக்கிறதா என்று பார்த்தான். அருகில் ஒரு பாழடைந்த குடிசை இருந்தது.
அவன் ஓடி அந்த குடிசையில் நுழைந்து ஒரு மூலையில் சென்று உட்கார்ந்தான். அப்போது இருபத்தைந்து திருடர்கள் தங்கள் தலைவனுடன் அங்கு வந்தார்கள். அனைவரும் குதிரைகளில் இருந்து இறங்கி குடிசையில் நுழைந்தார்கள். அவர்கள் தங்களுடன் கொண்டு வந்திருந்த பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, உள்ளே இருந்த அறைக்குள் செல்ல ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களின் தலைவன் மற்ற திருடர்களுக்கு கட்டளையிட்டான்-"இன்று இந்த புயல் காற்றும், மழையும் நிற்கும் அறிகுறி தெரியவில்லை. ஆகையால் நீங்கள் அனைவரும் அருமையான உணவு தயார் செய்யுங்கள்."
திருடர்களின் தலைவன் கட்டளையிட்டதும் திருடர்கள் உடனே அடுப்பு வைத்து மூன்று மணி நேரத்திற்குள் சூப்பரான சமையல் செய்தார்கள். பீமசங்கருக்கு அந்த வாசனை வந்து வாயில் எச்சில் ஊறியது. பீமசங்கர் தைரியசாலியாகவும் புத்தி கூர்மை உடையவனாகவும் இருந்தான். மெதுவாக அறைக்கு வெளியே வந்து திருடர்களின் கண்ணில் படாமல் அவர்களது உடைமைகளில் இருந்து சில ஆடைகளை எடுத்து அணிந்து அவர்களை போலவே ஒரு திருடனை போல் மாறிவிட்டான்.
சிறிது நேரம் கழித்து திருடர்களுக்கு சாப்பிட இலைகள் போடப்பட்டன. அங்கு ஒரு சிறிய விளக்கு எரியூட்டப்பட்டது. அந்த மங்கலான வெளிச்சத்தில் தெளிவாக தெரியவில்லை. திருடர்களின் தலைவன் இலைகளை உற்று பார்த்து சொல்ல ஆரம்பித்தான்-"அடே, நாம் எல்லோரும் சேர்ந்து இருபத்தி ஆறு பேர் இருக்கிறோம். சமையல் செய்ய நான்கு பேர் போய்விட்டார்கள். மீதம் இருப்பது இருபத்தி இரண்டு பேர். ஆனால் இங்கே இருபத்தி மூன்று இலைகள் எப்படி வந்தது ? இது எப்படி நடந்தது ? அதாவது நம் குழுவில் யாரோ புதிய ஆள் புகுந்து இருக்கிறான் என்று தெரிகிறது."
அவன் பேசுவதை கேட்டு எல்லா திருடர்களும் ஆச்சரியப்பட்டார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். தலைவன் சொன்னான்-"புதிய ஆளை பிடிப்பது ரொம்ப சுலபம். இதற்கு ஒரு வழி இருக்கிறது. அப்படி சொல்லிக்கொண்டே தனது பிரதானியை அருகில் அழைத்தான். மற்ற திருடர்களை பார்த்து சொன்னான்-"கேளுங்கள். நாங்கள் இருவரும் இந்த பக்கத்து அறைக்கு போகிறோம். நீங்கள் ஒவ்வொருவராக அந்த அறைக்குள் வாருங்கள். நான் இந்த எரியும் சுருட்டால் ஒவ்வொருவராக சுடுவேன். யார் அந்த சூட்டை தாங்கிக்கொள்ள முடியவில்லையோ அவன்தான் புதிய ஆள். பிறகு அவனை முன்னால் இருக்கிற மரத்தில் தூக்கில் தொங்க விடுவேன்."
பிறகு தலைவனும் பிரதானியும் பக்கத்து அறைக்கு போனார்கள். பிறகு ஒவ்வொரு திருடராக அவர்களின் அறைக்குள் போனார்கள். ஒவ்வொரு முறை "அம்மா! ஓய்" என்று ஒரு சத்தம் கேட்டது.
அதை கேட்ட பீமசங்கர், தலைவன் யாரையும் சுருட்டால் சுடவில்லை. நம்மை கண்டுபிடிப்பதற்கான யுக்தியாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டு அவர்களில் ஒருவனை போல் அறைக்குள் போனான். அப்போது திருடர்களின் தலைவனின் பிரதானி அம்மா! ஓய் என்று சத்தம் போட்டு பீமசங்கரை ஓரமாக உட்கார வைத்தான். கடைசியாக ஒவ்வொருவராக எல்லா திருடர்களும் முடிந்தார்கள்.
அப்போது திருடர்களின் தலைவன் எல்லோரையும் பார்த்து சொன்னான்-"நம்முள் புகுந்த ஆள் ரொம்ப தந்திரசாலியாக இருக்கிறான். அவனிடம் என் யுக்தி வேலை செய்யவில்லை. இருந்தாலும் நான் அவனை நிச்சயம் பிடிப்பேன். நான் திரும்பவும் அந்த அறைக்கு போகிறேன். நீங்கள் ஒவ்வொருவராக உள்ளே வாருங்கள். இன்று இரவு நாம் சொல்லும் சங்கேத வார்த்தையை நீங்கள் என்னிடம் சொல்லுங்கள்." திருடர்கள் தலைவனின் அறைக்குள் போக ஆரம்பித்தார்கள். ஆனால் பீமசங்கருக்கு அவர்களின் சங்கேத வார்த்தை தெரியாது. ஆகையால் அவன் ரொம்ப பயந்து போனான். அப்போது சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த இருவரின் முணுமுணுப்பை அவன் கேட்டான். அதில் ஒருவன் மற்றவனை கிண்டல் செய்தான்-"அடே முட்டாள். நீ சுத்த மறதி."
பீமசங்கர் அமைதியாக அவர்கள் இருவர் அருகில் போய், "நீ முதல் முதலில் இருந்து மறதியாளாக இருக்கிறாய். நீதான் அந்த வார்த்தையை மறந்துவிட்டாயா ?" என்று கேட்டான்.
அதை கேட்டதும் அவனுக்கு கோபம் வந்து, "'லம்பா லூம்பா' என்று பத்து முறை சொல்லவா ? என்னப்பா நான் சாதாரண வார்த்தை கூட ஞாபகம் வெச்சுக்க மாட்டேனா ?" என்றான்.
பீமசங்கரின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவனுக்கு தலைவனின் அறைக்குள் போகும் நேரம் வந்தபோது அவன் உள்ளே போகும்போது வேகமா "லம்பா லூம்பா" என்று கத்தினான்.
எல்லோரும் அந்த சங்கேத வார்த்தையை தலைவனிடம் சொன்னதும் தலைவன் ஆச்சரியப்பட்டான். எல்லா திருடர்களையும் பார்த்து சொன்னான்-"அடே வா, வந்திருக்கும் ஆள் ரொம்ப புத்திசாலியாக இருக்கிறான். நான் அவனை மதிக்கணும் என்று நினைக்கிறேன். அவன் தானாக என் முன்னால் வந்தால் அவனுக்கு பரிசு கொடுப்பேன். தண்டனை கொடுக்காமல் விடுவிப்பேன். இந்த விஷயத்தை நான் சத்தியம் செய்கிறேன்."
மறுநிமிடம் பீமசங்கர் தலைவனின் முன்னால் வந்து நின்றான். உண்மை என்னவென்று சொன்னான். "நான் ரொம்ப பசியோடு இருந்தேன். உங்கள் சமையலின் வாசனை என்னை இந்த மாதிரி ஒரு தைரியம் பண்ண தூண்டியது," என்றான்.
தலைவன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான். "சமையலின் வாசனையை மட்டும் நுகர வேண்டாம். அதன் சுவையையும் அனுபவித்துப் பார். வா, நம்மோடு சேர்ந்து சாப்பிடு," என்று சொன்னான்.
திருடர்களின் தலைவன் பீமசங்கருக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டான். அவன் திரும்பி போகும் போது தலைவன் அவனுக்கு பத்து தங்க நாணயங்கள் பரிசாக கொடுத்தான்.