Bookstruck

சாஸ்திரிகாரின் மருமகள்

ராய்பூரில் ராமசாஸ்திரி என்ற வசதியான பூசாரி இருந்தார். அவருக்கு கிருஷ்ணசாஸ்திரி என்ற திருமண வயதில் ஒரு மகன் இருந்தான். இந்த மகன் ஒரு சிறந்த புத்திசாலி என்று ஊரில் நல்ல பெயர் எடுத்திருந்தான். ராமசாஸ்திரி தனது மகனுக்கு தகுதியான புத்திசாலியான பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் மூன்று நான்கு பெண்களைப் பார்த்தும் இருந்தார். அவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு அழகாக இருந்தார்கள். ஆனால் ராமசாஸ்திரியின் கருத்துப்படி அவர்களில் யாரும் தன் மகனுக்கு ஏற்ற புத்திசாலியாக இல்லை. அவரைப் பொறுத்தவரை இதைவிட சிறந்த பெண் தன் மகனுக்கு கிடைக்க வேண்டும். அருகிலுள்ள சீதாரம்பூரிலிருந்து ஒரு உறவினர் ஒரு வரன் சொல்லி வந்தார். அவர் தன் ஊரில் உள்ள தர்மசாஸ்திரியின் மகள் கிருஷ்ணசாஸ்திரிக்கு மிகவும் பொருத்தமானவள் என்றார். தயங்காமல் ராமசாஸ்திரி அவளை தன் மருமகளாக்கிக் கொள்ளலாம் என்றார். பெண் பார்க்க ராமசாஸ்திரி தன் மனைவி மற்றும் மகனுடன் அந்த ஊருக்குச் சென்றார். வீட்டின் முன் வண்டியின் சத்தம் கேட்டு தர்மசாஸ்திரி வெளியே வந்தார். வண்டியிலிருந்து இறங்கிய ராமசாஸ்திரியைப் பார்த்ததும், உடனடியாக சென்று அவர்களை வரவேற்றார். அவர் சொன்னார், "நீங்கள் வருவதாக உங்கள் சகோதரர் சீதாராம சாஸ்திரி கூறியிருந்தார்." என்று அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் தர்மசாஸ்திரியின் மனைவி தன் மகள் ராதாவை அலங்கரித்து வெளியே அழைத்து வந்தாள். விருந்தினர்கள் முன் வந்து ராதா அவர்களை வணங்கி, எதிரில் பாயில் தலை குனிந்து உட்கார்ந்தாள். ராதாவின் அழகு மற்றும் பணிவை பார்த்த ராமசாஸ்திரி மகிழ்ச்சியடைந்தார். இன்று வரை பார்த்த பெண்களில் இவள் மிகச் சிறந்தவள் என்பது உறுதி! இப்போது அவளுடைய புத்திசாலித்தனத்தை மட்டும் சோதிக்க வேண்டும். தர்மசாஸ்திரி ராமசாஸ்திரியிடம் தன் குடும்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார், "எனக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். ராதாதான் மூத்தவள். மற்ற இரண்டு பெண்களும் நேற்று பண்டிகையை முன்னிட்டு தங்கள் மாமா வீட்டிற்கு சென்று விட்டார்கள். அவர்கள் ஒரு வாரம் மாமா வீட்டில் தங்குவார்கள். அவர்களுக்கு மாமா ஊர் மிகவும் பிடிக்கும்." ராமசாஸ்திரி அவரிடம் சொன்னார், "தர்மசாஸ்திரி, உங்கள் மகள் தங்க சிலை போல் இருக்கிறாள். அவளுடைய புத்திசாலித்தனத்தை என் மகன் கிருஷ்ணசாஸ்திரிதான் சோதிப்பான். அதில் அவள் தேர்ச்சி பெற்றால், இந்த சம்பந்தம் முடிவானது என்று அர்த்தம். என் மகன் அவளிடம் கேள்வி கேட்க உங்களுக்கு ஆட்சேபனை இல்லை அல்லவா?" "தாராளமாக பரீட்சை வைக்கலாம். என் ராதா பார்ப்பதற்கு ரதி போல் மட்டுமல்ல, கல்வியிலும் சரஸ்வதி. உங்களுக்கு நேரில் தெரியும். கிருஷ்ணசாஸ்திரி என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்" என்றார் தர்மசாஸ்திரி. தந்தை சைகை செய்ததும் கிருஷ்ணசாஸ்திரி ராதாவிடம் முதல் கேள்வி கேட்டான், "உங்கள் வீட்டில் கண்ணாடியின் எதிரிகள் எத்தனை பேர்? யோசித்து பதில் சொன்னாலும் பரவாயில்லை." ராதா சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள், "என் சகோதரிகளும், என் சகோதரனும் கண்ணாடியின் நண்பர்கள். எங்கள் வீட்டில் எதிரிகள் யாரும் இல்லை." கிருஷ்ணசாஸ்திரி உடனடியாக கேட்டான், "உங்களைப் பற்றி சொல்லவில்லையே?" "கையில் இருக்கும் காப்பை யாராவது கண்ணாடியில் பார்ப்பார்களா?" என்று ராதா எதிர் கேள்வி கேட்டாள். "சரி, உங்கள் வீட்டில் முன்பு எத்தனை கண்ணாடி நண்பர்கள் இருந்தார்கள் என்று சொல்லுங்கள். இப்போது அவர்களில் எத்தனை பேர் எதிரிகளாக மாறிவிட்டார்கள்?" என்று கிருஷ்ணசாஸ்திரி கேட்டான். "என் பாட்டிக்கு மட்டும் தான் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அவரும் சமீபத்தில் இறந்துவிட்டார்." என்று ராதா பதில் அளித்தாள். "உங்கள் ஊரிலும் மாதத்திற்கு ஒருமுறை அமாவாசை வருகிறதா? அல்லது அன்றும் பௌர்ணமிதானா?" என்று கிருஷ்ணசாஸ்திரி ராதாவை பதில் சொல்ல முடியாமல் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்துடன் அடுத்த கேள்வி கேட்டான். "எங்கள் ஊரில் அமாவாசை இரவிலும் பௌர்ணமிதான் பிரகாசிக்கிறது. உண்மையில் இன்று வரை எங்கள் ஊரில் யாரும் அமாவாசையைப் பார்த்ததே இல்லை." என்று ராதா நம்பிக்கையுடன் பதில் சொன்னாள். "கோடையில் உங்கள் ஊர் வயல்களில் பறவைகள் வருமா?" என்று கிருஷ்ணசாஸ்திரி அடுத்த கேள்வி கேட்டான். "எங்கள் ஊர் வயல்களில் எல்லா காலங்களிலும் பறவைகள் வந்துகொண்டே இருக்கும்." என்று ராதா புத்திசாலித்தனமாக பதில் சொன்னாள். "சரி! உங்கள் அப்பா வானம் போன்ற பிரம்மாண்டமான பந்தலும், பூமிதேவி போன்ற பெரிய மேடையும் அமைத்து உங்கள் திருமணத்தை செய்து வைக்க முடியுமா?" என்று கிருஷ்ணசாஸ்திரி குறும்பாக கேள்வி கேட்டான். "இவ்வளவு பெரிய அளவில் திருமணம் செய்து வைத்தால் எங்கள் வீடு வானமாகிவிடும். அப்படி உங்களுக்கு தோன்றவில்லையா?" என்று ராதா தைரியமாக பதில் சொன்னாள். ராமசாஸ்திரி இவ்வளவு நேரம் கேள்வி பதில்களை கவனித்துக் கொண்டிருந்தார். இடையில் மகனை நிறுத்தி, "இனி கேள்விகள் கேட்க வேண்டிய அவசியமில்லை. பெண் அழகானவள் மட்டுமல்ல, அதைவிட புத்திசாலியும் கூட." என்றார். தர்மசாஸ்திரியிடம், "உங்கள் பெண் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது! இனி தாமதம் வேண்டாம். பஞ்சாங்கம் பார்த்து முகூர்த்தம் குறிக்கவும்." என்றார். மகிழ்ச்சியுடன் தர்மசாஸ்திரி சொன்னார், "ஆஹா! மிகவும் சந்தோஷம்!" தர்மசாஸ்திரி மற்றும் அவரது மனைவியிடம் விடைபெற்று ராமசாஸ்திரி தன் குடும்பத்துடன் திரும்பிச் செல்ல வண்டியில் ஏறினார். சிறிது தூரம் சென்றதும் ராமசாஸ்திரியின் மனைவி சொன்னார், "கிருஷ்ணன் கேட்ட கேள்விகளும், ராதாவின் பதில்களும் எனக்கு ஒன்றும் புரியவில்லை." இதற்கு ராமசாஸ்திரி சிரித்துக்கொண்டே சொன்னார், "உனக்கு புரியவில்லை என்று எனக்கு தெரியும். நில், விளக்கமாக சொல்கிறேன். கிருஷ்ணன் முதலில் கேட்டது, உங்கள் வீட்டில் கண்ணாடியின் எதிரிகள் எத்தனை பேர் என்று. அதாவது பிறக்கும் போதே வீட்டில் எத்தனை பேர் அழகில்லாதவர்கள் என்று அர்த்தம். அதற்கு ராதா சொன்ன பதில், அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் கண்ணாடியின் நண்பர்கள் என்று. ராதாவின் பதில் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. பதிலின் அர்த்தம் அவர்கள் அனைவரும் அழகானவர்கள் என்பது. இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்லும் போது கையில் காப்பு இருந்தால் கண்ணாடி தேவையில்லை என்பது போல தனது அழகை கண்ணாடிக்கு ஒப்பிட தேவையில்லை என்பதை சூசகமாக சொன்னாள்." "முன்பு கண்ணாடியின் நண்பர்களாக இருந்து பிறகு எதிரிகளாக மாறியவர்கள் என்றால், இளமையில் நல்ல அழகு இருந்து முதுமை காரணமாக கண்ணாடியில் தங்கள் உருவத்தை பார்க்க தேவையில்லை என்று சொல்லும் மக்கள். கிருஷ்ணாவின் கேள்வி வீட்டில் இருக்கும் வயதானவர்களை நோக்கி இருந்தது. ஆனால் அந்த புத்திசாலியான பெண் தன்னுடைய வீட்டில் பாட்டி மட்டும் தான் அப்படி இருந்தாள். ஆனால் அவரும் இறந்துவிட்டார் என்று கூறினாள்." "பிறகு நமது மகன் கேட்டான் சீதாராம் பூரில் மாதத்திற்கு ஒரு முறை அமாவாசை வருமா அல்லது அன்றும் பௌர்ணமி தானா என்று கேட்டான். அதற்கு அவள் அமாவாசை பிரச்சனையே இல்லை. இங்கு எப்போதும் பௌர்ணமி தான் என்று சொன்னாள். அதாவது ஊரில் எப்பொழுதும் வெளிச்சம் இருப்பதால் அமாவாசையை யாரும் அனுபவித்ததே இல்லை என்று கூறினாள். அடுத்த கேள்வி கோடைகாலத்தில் பறவைகள் வருமா என்று கேட்டான். இந்த ஊரில் கோடைகாலத்திலும் பயிர் வரும் ஏனென்றால் ஊரில் இருக்கும் குளம் மற்றும் கிணறுகளில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் வருடம் முழுவதும் விவசாயம் நடந்து கொண்டிருக்கும். மக்கள் மழையை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை அதனால் தான் ராதா எல்லா காலத்திலும் பறவைகள் வரும் என்று கூறினாள். கடைசியாக வானம் அளவுக்கு பந்தல் பூமாதேவி அளவுக்கு பெரிய மேடை அமைத்து திருமணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்டான். அதற்கு அவள் இவ்வளவு செலவு செய்தால் வானமே எங்கள் வீடாகிவிடும் என்று சொன்னாள். அதாவது திருமணத்திற்கு பிறகு அவர்கள் பெற்றோர்கள் வீட்டை விற்றுவிட்டு வானத்தின் கீழே இருக்க வேண்டும். இப்போது புரிந்ததா உன்னுடைய வருங்கால மருமகள் எவ்வளவு புத்திசாலி என்று." இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட கிருஷ்ணசாஸ்திரியின் அம்மா சொன்னாள் "அவர்களுடைய கேள்வி பதில்களில் இவ்வளவு அர்த்தம் மறைந்திருந்ததா?"