Bookstruck

கமேரின் யோசனை

லக்ஷ்மந்தாஸ் சிங்புரியில் வசித்து வந்தார். அவருக்கு மூன்று மகன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள். எல்லோருக்கும் திருமணமாகி அதே ஊரில் வசித்து வந்தார்கள். லக்ஷ்மந்தாஸுக்கு ஒரு தீவிர ஆசை இருந்தது, அவருடைய ஒரு புகைப்படம் இருக்க வேண்டும் என்று, ஆனால் அவர்களுடைய ஊரில் அப்படிப்பட்ட படங்கள் எடுக்கும் ஓவியர் யாரும் இல்லை. லக்ஷ்மந்தாஸுக்கு அவருடைய பேரன் சங்கர் மீது அதிக அன்பு இருந்தது. சங்கர் ஓவியக்கலை படிக்க வேண்டும் என்று லக்ஷ்மந்தாஸ் அவனை சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் தனக்கு ஓவியக்கலையில் விருப்பமில்லை என்று சங்கர் தாத்தாவிடம் தெளிவாக சொல்லிவிட்டான். எந்த சூழ்நிலையிலும் அவன் ஓவியர் ஆகப் போவதில்லை. இப்போது சங்கருக்கு பதினெட்டு வயது ஆகிவிட்டது, ஆனாலும் அவனுக்கு ஓவியக்கலையில் நாட்டம் வரவில்லை. லக்ஷ்மந்தாஸ் மிகவும் நோய்வாய்ப்பட்டபோது, அவர் பேரனிடம் கூறினார், "நான் இனி அதிக நாட்கள் இருக்க மாட்டேன். இறப்பதற்கு முன்பு என்னுடைய ஒரு படம் இருக்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் ஆசை இருந்தது. ஆனால் அந்த கனவு, இப்போது வெறும் கனவாகவே இருக்கும்." தாத்தாவின் குரல் மிகவும் பரிதாபகரமாக இருந்தது. சங்கர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினான், "உங்களுடைய ஆசையை நிறைவேற்ற நான் இப்போதே நகரத்திற்கு சென்று அங்கிருந்து ஒரு ஓவியரை அழைத்து வருகிறேன்." பேரனின் இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கேட்டு லக்ஷ்மந்தாஸ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் பேரனிடம் கூறினார், "உன்னுடைய இந்த முடிவு சரியானது, ஆனால் இதைக் கேட்ட பிறகு மக்கள் சிரிப்பார்கள். இந்த வயதில் இப்படி ஒரு ஆசை வைத்திருக்கிறாய் என்று என்னை ஏசுவார்கள். நம் குடும்பத்தில் சுமார் முப்பது பேர் இருக்கிறார்கள். நீ அந்த ஓவியரிடம் நம்முடைய மொத்த குடும்பத்தின் படத்தையும் வரையச் சொல்ல வேண்டும், அப்போது அதில் என்னுடைய படமும் வந்துவிடும்!" சங்கர் நகரத்திற்கு சென்றான். அவன் ஓவியருக்கு நூறு ரூபாய் கொடுக்கலாம் என்று மனதில் நினைத்து இருந்தான். ஆனால் ஓவியர் கூறினார், இந்த வேலைக்கு பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்தால் மட்டுமே அவர் இந்த வேலையை செய்ய முடியும் என்று. அவர் கூறினார், இவ்வளவு நபர்களின் படத்தை ஒன்றாக வரைவதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும். ஒவ்வொருவருடைய முகத்தையும் தெளிவாக காட்ட வேண்டும் என்றால் அது சாதாரண வேலை இல்லை. அவருடைய இந்தக் கோரிக்கையைக் கேட்டு சங்கர் அதிர்ந்து போனான். இப்போது அவனுக்குப் புரிந்தது ஏன் தாத்தா அவனை ஓவியர் ஆக வேண்டும் என்று இவ்வளவு வற்புறுத்திக் கொண்டிருந்தார் என்று! அவ்வளவு பெரிய தொகை கொடுப்பது அவனுக்கு சாத்தியமில்லை. வேறு வழியில்லாமல் அவன் சிங்புரிக்கு புறப்பட்டான். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அவன் கமேரை சந்தித்தான். கமேரிடம் ஒரு இயந்திரம் இருந்தது. அந்த இயந்திரத்தில் வெள்ளை துணியை வைக்க வேண்டும், பிறகு மந்திர உச்சாடனம் செய்யும்போது என்ன காட்சி இயந்திரத்தின் முன்பு தெரிகிறதோ, அந்த உருவம் துணியில் சித்திரம் போல பதிந்து விடும். ஓவியர்கள் வரைந்த ஓவியத்தை விட இந்த இயந்திரத்தில் உள்ள படம் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருந்தது. "உன்னுடைய ஆசை பற்றி எனக்குத் தெரியும். உங்களுடைய குடும்பத்தின் ஓவியத்தை வரைவதற்கு இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம். அதற்கு அதிகம் இல்லை, நீ ஐம்பது ரூபாய் கொடுத்தால் போதும்!" என்று கமேர் கூறினார். சங்கருக்கு சந்தோஷம் ஏற்பட்டது. ஆனால் சந்தேகம் வந்து அவன் கேட்டான், "இந்த இயந்திரம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது?" கமேர் தயங்காமல் தெளிவாக பதில் கூறினார், "என்னுடைய மாமா மந்திர தந்திரத்தில் சிறந்தவர். வருடங்களுக்கு முன்பு அவர் இந்த இயந்திரத்தை தயார் செய்து எனக்கு கொடுத்தார். என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லோரையும் கூட்டிட்டு போய் எல்லோருடைய கூட்டு சித்திரத்தை நான் எடுத்திருக்கிறேன். இதைப் பார்!" என்று கூறி கமேர் ஒரு துணி துண்டை வெளியே எடுத்தார். அதில் இருந்த படத்தில் ஒவ்வொருவரின் முகமும் மிகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் பார்க்க கேவலமாக இருந்தார். "இப்படி விசித்திரமாகத் தோன்றும் நபர் யார்?" சங்கர் ஆச்சரியத்துடன் கேட்டான். கமேர் சிரித்துக்கொண்டே கூறினான், "இவருடைய பெயர் சுரூபி! இந்த இயந்திரத்தில் நான் எந்த படம் வரைந்தாலும், அதில் யாராவது ஒருவர் இப்படி தெரிவார்கள்." ஒரு நிமிடம் யோசித்து சங்கர் தொடர்ந்து பேசினான், "என்னுடைய தாத்தாவின் ஆசை என்னவென்றால் அவருடைய குடும்பத்தின் படம் வரைய வேண்டும் என்பது. அவருடைய ஆசையை நிறைவேற்ற நான் என்ன தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு விஷயம்தான் கவலை! எனக்கு பதிலாக என்னுடைய தாத்தா படத்தில் கேவலமாக தெரிந்தால், அவர் கவலைப்படுவார்." "முதலில் நீ ஒத்துக்கொள் அப்போது உன்னுடைய படம் கேவலமாகத் தெரியும்." கமேர் கூறினான். இருவரும் சிங்புரிக்கு வந்து சேர்ந்தார்கள். சங்கர் தன்னுடைய குடும்பத்தில் இருக்கிற எல்லா நபர்களிடமும் அந்த இயந்திரத்தின் சிறப்பை பற்றி சொன்னான். அந்த இயந்திரத்தில் படம் எடுப்பதற்கு எல்லோரும் ஆவலாக இருந்தார்கள். தோட்டத்தில் எல்லோரும் ஒன்றாக கூடினார்கள். எல்லோரும் நல்ல உடைகளை அணிந்து இருந்தார்கள், நிறைய நகைகளை போட்டு எல்லோரும் அலங்காரம் செய்து இருந்தார்கள். கமேர் தன்னுடைய இயந்திரத்தை எடுத்துக்கொண்டு எல்லோர் முன்னிலையிலும் நின்றார். அந்த இயந்திரத்தில் அவர் ஒரு வெள்ளை நிற துணியை வைத்தார், கண்களை மூடிக்கொண்டு மந்திர உச்சாடனம் செய்தார். பிறகு கண்களை திறந்து அந்த துணியை சங்கரிடம் கொடுத்தார். அதில் இருந்த உருவத்தை பார்த்து சங்கர் சோகமாக இருந்தான். அவனுடைய படத்தை பார்த்தால் கோபமாக இருக்கிற மனிதர் கூட சிரிக்க தொடங்கிவிடுவார். அருகில் இருந்த மற்ற நபர்கள் அந்தப் படத்தை பார்க்க ஆவலாக இருந்தார்கள். அவர்கள் அவசரப்படுத்தினார்கள். சங்கர் அந்த படத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவன் மட்டும் தூரமாக போய் நின்றான். கமேர் சங்கரின் முதுகை தட்டிக் கொடுத்து கூறினான், "உன்னுடைய தாத்தாவின் படத்தை பார்க்க உனக்கு தீவிர ஆசை இருந்தது அல்லவா? அவருடைய உருவம் பிடித்திருக்கிறதா?" "நான் அவருடைய படத்தை பார்க்கவே இல்லை. என்னுடைய உருவம் மோசமாக தெரிந்தது, அதனால் என்னுடைய மனமும் கஷ்டமாக இருந்தது. இப்போது இவர்கள் எல்லோரும் என்னை கேலி செய்வார்கள்!" சங்கர் கூறினான். அதற்கு கமேர் சத்தமாக சிரித்துவிட்டு கூறினான், "நீ உங்களுடைய தாத்தாவுக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறாய்; ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நீ அவருடைய உருவத்தைப் பார்க்கவே இல்லை; நீ உங்களுடைய உருவத்தை மட்டும் தான் பார்த்திருக்கிறாய், இப்போது அங்கே பார்!" சங்கர் தன்னுடைய குடும்பத்தில் உள்ள மற்றவர்களை கூர்ந்து கவனித்தான். ஒவ்வொருவரும் தங்களுடைய படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். மற்றவர்கள் படத்தில் யாருக்கும் ஆர்வம் இல்லை. அப்போது கமேர் சங்கரிடம் கூறினான், "பார்த்தாயா, பக்கத்தில் இருக்கிற எந்த நபரின் படத்தையும் யாரும் கவனிப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய படத்தை மட்டும் பார்ப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். மனித சுபாவம் இப்படித்தான் இருக்கும். அதனால் உன்னுடைய படம் மோசமாக தெரிந்தாலும், உன்னை கேலி செய்வார்கள் என்று மனதில் நினைக்காதே." கமேரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சங்கரின் கவலை மறைந்தது. இப்போது அவனுடைய முகம் அமைதியானது மனதளவில் அவன் மகிழ்ச்சி அடைந்தான். அவன் கமேருக்கு ஒத்துக்கொண்டதை விட அதிக பணம் கொடுத்தான், சந்தோஷமான மனதுடன் அவனை அனுப்பி வைத்தான்.