ஆறாவது திருடன்
"உஜ்ஜைன் ராஜ்ஜியத்தில் நடந்த ஒரு பழைய கதை இது. ராஜ்யம் முழுவதும் திருடர்களின் தொல்லை அதிகரித்திருந்தது. ராஜா அவர்களின் சிப்பாய்கள் திருடர்களைப் பிடிக்கப் பல முயற்சிகள் செய்தும், எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன. தலைநகரிலுள்ள பணக்கார குடிமக்கள் ராஜாவிடம் தங்கள் குறைகளைச் சொல்லி முறையிட்டனர். "மன்னர் அவர்களே! தாங்கள் ஏதாவது முயற்சி செய்தால் மட்டுமே நாங்கள் இந்தத் திருடர்களிடமிருந்து விடுதலை பெற முடியும்." ராஜா அவர்களிடம் விரைவில் திருடர்களின் தொல்லையை ஒழிப்பதாக வாக்குக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
நள்ளிரவு நேரத்தில், ராஜா தானே மாறுவேடத்தில் புறப்பட்டு சதுக்கத்தில் வந்து நின்றார். சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக நான்கு பேர் அங்கு வந்தனர். ராஜா அவர்களிடம் சென்று, "நானும் உங்கள் குழுவில் வரலாமா? உங்களைப் போலவே நானும் ஒரு திருடன் தான். உங்கள் சிறப்பு என்னவென்று சொல்லுங்கள்!" என்றார்.
"நான் எந்த சுவராக இருந்தாலும் அதில் துளை போட முடியும்," என்று முதல் திருடன் கூறினான்.
"நான் ஒவ்வொரு மிருகத்தின் சத்தத்தின் அர்த்தத்தையும் சொல்ல முடியும்," என்று இரண்டாவது திருடன் கூறினான்.
"பூட்டப்பட்ட பெட்டியின் வாசனையை வைத்தே, அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்," என்று மூன்றாவது திருடன் கூறினான்.
"நான் ஒருவரின் குரலை ஒரு முறை கேட்டாலே போதும், பல வருடங்கள் கழித்துக்கூட அது யார் குரல் என்று கண்டுபிடித்து விடுவேன்," என்று நான்காவது திருடன் கூறினான்.
பிறகு அந்த நான்கு திருடர்களும் ராஜாவிடம், "இப்போது, உன் சிறப்பு என்னவென்று சொல்லுவியா இல்லையா?" என்று கேட்டனர்.
"என்னுடன் இருக்கும் திருடர்களுக்கு எப்போதுமே தூக்கு தண்டனை கிடைக்காது," என்று ராஜா சொன்னார்.
பிறகு ஐந்து பேரும் திருடச் சென்றார்கள். ராஜாவே அரண்மனையில் திருடலாம் என்று யோசனை கூறினார். மற்ற திருடர்களும் அதற்கு சம்மதித்தார்கள். எல்லாரும் அரண்மனை அருகில் வந்து சேர்ந்தார்கள். முதல் திருடன் சுவரில் துளை போட ஆரம்பித்தான். அப்போது நரி ஊளையிடும் சத்தம் கேட்டது.
"இதன் அர்த்தம் என்ன?" என்று ராஜா இரண்டாவது திருடனிடம் கேட்டார்.
"வீட்டின் உரிமையாளர் எழுந்திருக்கிறார் என்பதுதான் இதன் அர்த்தம்," என்று இரண்டாவது திருடன் சொன்னான்.
அப்போது ஆந்தை கத்தியது. ராஜா அதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். இரண்டாவது திருடன், "வீட்டின் உரிமையாளர் நாம் திருடுவதைப் பார்க்கிறார் என்று அர்த்தம்" என்றான். அதைக் கேட்டதும் திருடர்கள் திருடும் எண்ணத்தை விட்டுவிட்டு ஆச்சரியத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து யோசிக்க ஆரம்பித்தார்கள். புதிய திருடனின் முன்பு நாம் கோழைகள் என்று தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்று அந்த நான்கு திருடர்களும் நினைத்தார்கள். அதனால் மனதில் பயம் இருந்தும் தொடங்கிய வேலையை முடித்துவிடலாம் என்று முடிவு செய்து முதல் திருடன் சுவரில் துளை போட ஆரம்பித்தான்.
திருடர்களுக்கு அரண்மனையில் ஆறு பெட்டிகள் கிடைத்தன. மூன்றாவது திருடன் அவற்றின் வாசனையை முகர்ந்து பார்த்து, "என்ன நம் அதிர்ஷ்டம்! இந்த பெட்டிகளில் வைரம், மாணிக்கம், தங்கம், வெள்ளிப் பொருட்கள் இருக்கின்றன!" என்றான்.
ஐந்து திருடர்களும் ஐந்து பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஆறாவது பெட்டியை சுவர் ஓட்டையின் அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அடுத்த நாள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கலாம் என்று முடிவு செய்து ஐந்து திருடர்களும் அவரவர் வழியில் சென்றுவிட்டார்கள். ராஜா தன்னுடைய அரண்மனைக்குத் திரும்பிவிட்டார்.
காலை விடிந்தது. காவலாளிகளின் தலைவன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு சுவர் ஓட்டை இருந்த இடத்திற்கு வந்தான். உள்ளே இருந்த ஐந்து பெட்டிகள் காணாமல் போயிருந்தன. ஆறாவது பெட்டி சுவர் ஓட்டையின் அருகில் இருந்தது. அதைக் கண்டதும் காவலாளிகளின் தலைவன் அந்தப் பெட்டியை எடுத்து நேராக தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்துவிட்டு, பிறகு ராஜாவிடம் சென்று, "மன்னர் அவர்களே! நாங்கள் கண்ணில் எண்ணெய் ஊற்றி இரவு முழுவதும் காவல் காத்தும் திருடர்கள் எங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அரண்மனையிலிருந்து நகைகளை இருந்த ஆறு பெட்டிகளையும் திருடி சென்றுவிட்டார்கள்," என்றான்.
ஆறாவது திருடன் யார் என்பது ராஜாவுக்குத் தெரிந்துவிட்டது. அவர் காவலாளியின் தலைவனிடம், "கவலைப்படாதே, இன்று இரவு எல்லா திருடர்களும் பிடிபடுவார்கள்," என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அன்று இரவு நான்கு திருடர்களும் குறிப்பிட்ட இடத்தில் வந்தபோது, சிப்பாய்கள் அவர்களைப் பிடித்தார்கள். அடுத்த நாள் எல்லா திருடர்களும் அரசவையில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று ராஜா உத்தரவிட்டார். அதைக் கேட்டதும் நான்காவது திருடன் ராஜாவை அடையாளம் கண்டு, "மன்னர் அவர்களே, நேற்று இரவு நாங்கள் திருடச் சென்றபோது ஒரு ஐந்தாவது திருடன் எங்களுடன் வந்தான். புறப்படுவதற்கு முன் அவன் தன் நண்பர்களுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தால் அவர்களை விடுவிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தான். ஆனால் அவன் தன் வாக்குறுதியின் படி எங்களை விடுவிக்கவில்லை. நீங்கள் கொடுத்த தூக்குத் தண்டனை அந்த ஐந்தாவது திருடனுக்கும் பொருந்துமா?" என்று கேட்டான்.
ராஜா புன்னகைத்து, "உங்களுடன் வந்த ஐந்தாவது திருடன் தன் வாக்குறுதியைக் காப்பாற்றப் போகிறான்," என்றார். பிறகு சபையிலிருந்தவர்களைப் பார்த்து ராஜா சொன்னார், "அந்த ஐந்தாவது திருடன் நான்தான்! நான் இந்தத் திருடர்களின் தண்டனையை ரத்து செய்வது மட்டுமல்லாமல், இவர்கள் தூக்கி சென்ற பெட்டிகள் எல்லாவற்றையும் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கிறேன். ஏனென்றால் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் திறமை இருக்கிறது. இன்று முதல் இவர்கள் என் அரசவையில் இடம் பெறுவார்கள். மேலும் திருடும் தொழிலை விட்டுவிடுவார்கள். ஆனால் ஆறாவது திருடன் பற்றி உங்களில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் எங்கள் காவலாளியின் தலைவன்!"
ராஜா அவர்களின் வாயிலிருந்து எதிர்பாராத வார்த்தைகள் கேட்டதும், அந்த தலைவனின் முகம் வாடிப்போனது. அவனுடைய வீட்டில் ஆறாவது பெட்டி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவனுக்கு ராஜா நாடு கடத்தும் தண்டனை கொடுத்தார். அவனது வேலையை அந்த நான்கு திருடர்களுக்கும் கொடுத்தார்.