அதிபுத்திசாலி
சோமநாத்துக்கு தன் மகன் சுனந்தன் மிகவும் புத்திசாலி என்று நினைப்பு. அவன் சுனந்தனை நகரத்துக்கு கல்வி கற்க அனுப்பி நிர்மலானந்தர் என்ற குருவிடம் ஒப்படைத்தான்.
சில நாட்களுக்குப் பிறகு சோமநாத் ஒரு வேலையாக நகரத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவன் நிர்மலானந்தரைப் பார்க்கவும் சென்றான். அவனைப் பார்த்ததும் நிர்மலானந்தர், "உன் மகன் அதிபுத்திசாலி; அதனால் அவனுக்கு கற்பிப்பது மிகவும் கடினமான வேலை" என்றார்.
ஆனால் சோமநாத்துக்கு இது பிடிக்கவில்லை. அவன், "என் மகன் மிகவும் புத்திசாலி. நீங்கள் அவனை சரியாக கவனிப்பதில்லை என்று நினைக்கிறேன்" என்றான்.
இந்த பதிலைக் கேட்ட நிர்மலானந்தருக்கு வருத்தமாக இருந்தது. அவர் சுனந்தனை அருகில் அழைத்து, "பார் சுனந்தா! அந்தக் காலத்தில் நம் நாட்டில் அற்புதமான நெசவாளர்கள் இருந்தார்கள். அவர்கள் நெய்யும் ஒவ்வொரு சேலையும் தீப்பெட்டியில் அடங்கும். நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா?" என்று கேட்டார்.
சுனந்தன் தலையசைத்தான்.
"சரி, என்ன புரிந்தது என்று சொல்லு?" என்று குரு சுனந்தனைக் கேட்டார்.
"அதாவது, அந்த காலத்தில் தீப்பெட்டிகள் பெரியதாக இருந்தன. அதில் ஒவ்வொரு சேலையும் வைக்கலாம்! சரியா?" என்று சுனந்தன் உடனே பதிலளித்தான்.
இப்போது சோமநாத்துக்கு புத்திசாலித்தனத்துக்கும், அதிக புத்திசாலித்தனத்துக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது! தான் அவசரமாக ஏதோ பேசிவிட்டோம் என்று நிர்மலானந்தரிடம் மன்னிப்பு கேட்டான். எப்படியாவது சுனந்தனை சரியான பாதைக்கு கொண்டுவருவேன் என்று அவரிடம் வாக்குறுதி பெற்று சோமநாத் வீடு திரும்பினான்.